பக்கம் எண் :

877
தற்காலத்தில் பாடப்படும் இராகங்கள் இன்னின்ன சுருதிகளில் வருகின்றனவென்பதற்கு திருஷ்டாந்தம்.

7. தமிழ் மக்கள் பாடிவந்த முறைப்படி தற்காலத்தில் பாடப்படும் இராகங்கள் இன்னின்ன சுருதிகளில் வருகின்றனவென்பதற்கு திரஷ்டாந்தம்.

பூர்வ தமிழ் மக்கள் தேர்ச்சிபெற்றிருந்த அமுதினும் இனிய இசைத்தமிழில் வழங்கி வரும் சுரம், சுருதிகள், நுட்பமான சுருதிகளைப் பற்றிய சில விபரங்களை இதன் முன் சொன்னோம். அவை மிகச் சிறந்தவைகளா யிருக்கின்றனவென்றும் உடற்கூறு சாஸ்திரம், சரசாஸ்திரம், வான சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலிய சாஸ்திரங்களின் உட்பொருளின் படியும் கணிதத்தின் படியும் சங்கீத சாஸ்திரத்தையும் செய்திருக் கிறார்களென்றும் காண்கிறோம்.

பூர்வ தமிழ் மக்களும் தென்மதுரையில் அரசாண்டு கொண்டு வந்த பாண்டிய அரசர்களும் தமிழ் அவையத்துப் புலவர்களும் இசைத்தமிழில் மிகத்திறமை யுடையவர்களாய்ச் சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளையுமறிந்து அவைகளுக்கேற்ற பாவினங்களினால் பகவானை ஆராதித்து வந்திருக்கிறார்களென்று நாம் காண்கிறோம். தொன்று தொட்டு பாடப்பட்டு வரும் திரு ஞானம் (தேவாரம் திருவாசகம்) முதலிய பண்களும் இவற்றிற்கு முன்னுள்ள இவைபோன்ற பக்திக்குரிய அநேக பண்களும் பூர்வ இசைத்தமிழ் முறைப்படி நாளது வரையும் பாடப்பட்டு வருகின்றனவென்று அறிவோம்.

பூர்வ பண்களையும் அவைகளைப் போலொத்த மற்றும் சில இராகங்களையும் பூர்வ முறைப்படியே பாடிக்கொண்டிருக்கிறோமே யொழிய நூதனமானதல்ல என்றும், ஆனால் அவைகள் முற்றிலும் அந்நியரால் பெயர் மாற்றப்பட்டுத் தமிழர்களுக்குச் சங்கீதமே தெரியாதென்று பிறர் சொல்லும்படி ஆகிவிட்டது.

திருவையாற்றில் இராமபக்தராய் சுமார், 60 வருடங்களுக்கு முன்னிருந்த மகா-?-?-ஸ்ரீ தியாகராஜ ஐயரவர்களுக்கு இராகங்களின் நுட்பங்களைச் சொல்லும் சுவடியை நாரதர் கொண்டு வந்து கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாரதரை யாழ் ஆசிரிய னென்று பூர்வ தமிழ் நூல்கள் சொல்லுகின்றன. பூர்வ தமிழ்மக்கள் தேர்ந்திருந்த நாலு பாலைகளில் வழங்கி வந்த சுருதிகள் அவர் கீர்த்தனங்களில் வழங்கி வருகிறதாகத் தெரிந்தாலும் பூர்வ பண்கள் ஓதும் முறை தற்காலத்துள்ளவருக்கு அதிக பழக்கத்திலில்லாததினால் சில கீர்த்தனைகளை இங்கே திஷ்டாந்தமாகக் குறிக்கவேண்டிய தாயிற்று. பண்களைப் பற்றியும் ஆராய்ந்து இராகங்களும் சுருதிகளும் பின் எழுதப்படும்.

சுருதிகளைப்பற்றிச் சந்தேகமுண்டாகி ஒருஸ்தாயியில் 22 என்று வாதிக்கும் இக்காலத்தில் நான் சொல்வது சிலருக்கு விபரீதமாகத் தோன்றினாலும் கவனிக்கும் அறிவாளிகளுக்கு உபயோக மாயிருக்குமென்று எண்ணியே இதை எழுத நேரிட்டது.

ஒரு ஸ்தாயியை ச-ப முறையாலும் ச-ம முறையாலும் இணை கிளையாய் 12 அரைச் சுரங்களாக வகுத்துப் பின் வட்டப்பாலை முறையாய் 24 அலகுகளாகப் பிரித்து அதில் இரண்டலகு குறைத்துக் கானம் செய்தார்களென்று தெளிவாய்த் தெரிகிறது.