வேண்டும். அதாவது 13-ம் 16-ம் நூற்றாண்டுகளுக்கு நடுவிலுள்ள காலமாயிருக்க வேண்டும். அந்நிய பாஷைக்காரர்கள் தமிழ்நாட்டில் வந்தபிறகே இப்படிப் பெயர்மாற்றப்பட்டிருக்கலாமென்று எண்ண இடமிருக்கிறது. என்றாலும் வட்டப்பாலை முறைப்படி வரும் சுருதி முறைகளிலும் நுட்பமான சுருதிகளிலும் சில தாய் இராகங்கள் வழங்கி வருகிறதாகக் காண்கிறோம். இதனால் தமிழ நாட்டிற்கு வந்த மற்றவர் தமிழ்நாட்டின் முறைகளைக் கற்றுக் கொண்டபின் தமிழ் நாட்டில் வழங்கி வந்த சுரங்களின் பெயர்களையும் இராகங்களின் பெயர்களையும் முற்றிலும் மாற்றித் தாங்கள் புதிதாய்ச் செய்துவைத்ததாக மற்றவர் நினைக்கும்படி நூல் எழுதி வைத்திருக்கிறார்களென்றுதெரிகிறது. அடியில் வரும் அட்டவணையில் அவைகளைக் காண்போம். சுருதிகளைப்பற்றி எழுதிய சாரங்கதேவவர் கைசிக நிஷாதம் காகலி நிஷாதம் சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம், சுத சட்சம், சுத பஞ்சமம் போன்ற சில பெயர்களைக் கொடுத்து ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளுண்டென்று ஸ்தாபித்தார். அப்பெயர்களையே வட்டப்பாலை முறைப்படி அலகுகள் கூட்டி ஆயப்பாலையில் வரும் பன்னிரு சுரங்களுக்கும் கர்நாடக சங்கீதத்தில் பெயர்களாக வழங்கி வந்திருக்கிறார்கள். அவை பூர்வம் 2 அலகு 4 அலகு 6 அலகுஎன்று சொல்லப்படுகிற தாகத் தெளிவாகக் காண்கிறோம். எண்சுவடிக் கணக்குகளில் தமிழ் மக்கள் வழங்கி வந்த அலகு நிலை என்று சொல்லும் முறைப்படியே இங்கேயும் சொல்லுகிறதாக நினைக்கவேண்டும். இதனால் பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த முறைப்படியே சுரங்கள் சுருதிகளின் பெயர்களை இத்தனையாவது அலகென்று சொல்லுவது யாவருக்கும் தெளிவாய் விளங்கக் கூடிய தென்று தோன்றுகிறது. திஷ்டாந்தமாக ரிஷபம் ஓர் அலகு, ரிஷபம் ஒன்றேகால் 1(1/4) அலகு, ரிஷபம் ஒன்றரை 1(1/2) அலகு, ரிஷபம் ஒன்றேமுக்கால் 1(3/4) அலகு, ரிஷபம் இரண்டு அலகு, ரிஷபம் நாலு அலகு என்று அலகைப் பின்வைத்தாவது, அல்லது நாலு அலகு ரிஷபம், நாலேகால் அலகு ரிஷபம், நாலரை அலகு ரிஷபம், நாலேமுக்கால் அலகு ரிஷபம், ஐந்தலகு ரிஷபம் என்று அலகை முன்வைத்தாவது வழங்கி வருவது, எவ்வித சந்தேகமும் இல்லாமல் சுரஸ்தானங்களின் பெயர்களை அறிந்து கொள்வதற்கு மிக உதவியாயிருக்கும். தென்னிந்திய கானத்தில் வழங்கிவரும் சுரங்களும் சுருதிகளும் நுட்பமான சுருதிகளும் இன்னின்ன இராகங்களில் வழங்கி வருகின்றன வென்று கவனிப்பது மிக முக்கியமானதென்று எண்ணுகிறேன்.
|