இரண்டாவது அட்டவணை வட்டப்பாலை இராகங்கள். இவை பூர்வ தமிழ் மக்கள் வட்டப்பாலை முறையாய் ஒரு இராசிக்கு இரண்டலகாக ஒரு ஸ்தாயியை 24 சுருதிகளாகப் பிரித்து இணை கிளையாக வரும் இரண்டு இராசிகளில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கானம் பண்ணும் முறையாம். இரண்டாவது அட்டவணையைக் கவனிப்போமானால் இரண்டு நாலு ஆறாய் வரும் ஆயப்பாலையின் சுரங்களில் சில சுரங்கள் ஒற்றைப்பட்ட அலகில் வருவதாகக் காண்போம். சாவேரியும் பவப்பிரியாவும் இரண்டலகாக வருவதற்குப் பதில் ஒன்றாவது ரிஷபத்திலும் ஒன்றாவது தைவதத்திலும் வருகின்றன. அதுபோல் சாவேரியில் ஆறு அலகு க, நி க்குப்பதில் ஐந்து அலகு நிஷாதமும் ஐந்து அலகு காந்தாரமும் வருகின்றன. ஆனால் பவப்பிரியாவில் காந்தாரத்தின் மூன்றாவது அலகிலும் நிஷாதத்தின் மூன்றாவது அலகிலும் கொஞ்சம் கூடதலாக வருகிறது. அல்லது நாலலகிற்குப் பதில் அரை அலகு குறைந்து வருகிறது. தேவகாந்தாரியில் காந்தார நிஷாதம் ஐந்து ஐந்து அலகிலும் ரிஷப தைவதங்கள் 4(3/4) அலகிலும் வருகின்றன. சகானாவில் காந்தாரத்தின் ஏழாவது அலகும் நிஷாதத்தின் ஐந்தாவது அலகும் வருகின்றன. கைகவசியில் மத்திமத்தின் ஐந்தாவது அலகும் நிஷாதத்தின் ஏழாவது அலகும் வருகின்றன. பியாகடையில் மத்திமத்தின் மூன்றாவது அலகும் நிஷாதத்தின் ஐந்தாவது அலகும் வருகின்றன. இவைகள் 24 சுருதிகளில் ஒற்றைப்பட்ட சுருதிகளில் வருவதாகவும் இரட்டைப்பட்ட சுரங்கள் ஆயப்பாலையில்வருவதாகவும் நாம் காண்கிறோம். தேவகாந்தாரியில் ஆறலகுள்ள காந்தார நிஷாதங்கள் அபூர்வமாய்க் காணப்படுகின்றன. அவை பாட பேதமாயிருக்கலாமென்று எண்ணுகிறேன். இராகங்களின் ஆரோகண அவரோகணங்களைப் பின் வரும் அட்டவணைகளில் காண்க. | நம்பர். | இராகங்கள். | ஆரோகணம். | அவரோகணம். | | 1 | பியாகடை | ச க ரி க ம ப த ப ச | ச நி த ப ம க ரி ச | | 2 | சாவேரி | ச ரி ம ப த ச | ச நி த ப ம க ரி ச | | 3 | கைகவசி | ச ரி க ம ப த நி ச | ச நி ப ம க ரி ச | | 4 | சகானா | ச ரி க ம ப ம த நி ச | ச நி ச த ப ம கா ம ரி ச | | 5 | பவப்பிரியா | ச ரி க ம ப த நி ச | ச நி த ப ம க ரி ச | | 6 | தேவகாந்தாரி | ச ரி ம ப த ச | ச நி த ப ம க ரி ச |
|