இதோடு சங்கீதரத்னாகரம் எழுதிய சாரங்கதேவரின் அபிப்பிராயத்தின்படி 32 அங்குல தந்தியில் பாதியாகிய 16 அங்குல நீளமுள்ள மத்திய ஸ்தாயியில் 22 சுருதிகளும் எப்படி வருகின்றனவென்றும் அவைகள் தமிழ் மக்களின் கானத்தில் வழங்கும் சுரம் சுருதிகளோடு ஒத்து வரவில்லை என்றும் ஒத்துப்பார்ப்பதற்கு அனுகூலமாகச் சாரங்கரின் துவாவிம்சதி சுருதி அளவையுய்ம இங்கே பார்க்க வேண்டும். 842-ம் பக்கத்தில் வட்டப்பாலையின் 24 சுருதிகளுக்குச் சொல்லிய கணித முறை அட்டவணையில் எட்டாவது கலத்தில் கண்ட தசாம்ச எண்களை 32 அங்குலத்தால் முறையே பெருக்க ஒவ்வொரு சுருதி நிற்கும் தந்தியின் அளவும் நமக்குக்கிடைக்கிற தென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். இவைகள் ஆதாரசட்சம் பேசும் தந்தியின் அளவு ஒன்றானால் தாரசட்சம் அதன்பாதியில் பேசுகிறதென்ற அனுபோகத்தின் படியும், ஓசையில் ஆதாரசட்சம் ஒன்றானால் தாரசட்சம் அதன் இருமடங்காயிருக்க வேண்டுமென்ற முறைப்படியும், தந்தியின் நீளம் குறைந்து போகப்போக ஓசையின் அளவு உயர்ந்து போகிறதென்ற உண்மைப்படியும், Geometrical Progression படி நடுவில் வேறு நாத முண்டாகாதபடியும், எங்கே யிருந்தானாலும் ஒரே அளவுடன் ஓசை ஒற்றுமைப்பட்டுக் கிரகம் மாற்றும் பொழுது பேதமின்றி ஒத்து நடக்கும் விதமாய்க் கணிக்கப் பட்டிருக்கிறது. இம்முறையில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. நாலு சாண் 31 அங்குலமாயிருக்குமானால் எட்டாவது கலத்தில் வரும் பின்ன எண்களை 31 ஆல் பெருக்கி சுரங்களின் அளவு குறிக்கவேண்டும். 4 சாண் 33, 34, 35, 36 போன்ற அங்குலங்களாய் வருமானால் அவரவர்களுக்கேற்ற அங்குலத்தால் எட்டாவது கலத்தின் எண்களைப் பெருக்கி சுரங்களுக்கு அளவு குறித்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு அங்குலத்தை 100 சமபாகங்களாகப் பிரித்திருக்கும் அளவைக்கொண்டு அளந்து குறிக்கவேண்டும். அவரவர்கள் கையின் அளவின்படி யாழின் தந்தியிருக்க வேண்டும் என்பதில் 1/2, 1/4அங்குலம் போன்றவைகளை வளரும் வயதுள்ளவர்கள் ஒன்றாகக் கூட்டியும் வளர்ந்த வயதுள்ளவர்கள் அவைகளைக் குறைத்தும் யாழில் அமைத்துக் கொள்ளலாம். அதாவது 4 சாண் அல்லது 321/2 அங்குலம் அளவுள்ள ஒருவர் 25 வயதிற்கு உட்பட்டிருப்பாரானால் 33 அங்குல மென்றும் 25 வயதிற்கு மேற்பட்டிருப்பாரானால் 32 அங்குல மென்றும் வைத்து வீணையின் அளவு குறித்துக் கொள்ள வேண்டும். தந்தியின் நீளம் 32 அங்குல மென்று எடுத்துக் கொள்வோமானால் அதன் பாதி 16 அங்குலத்தில் மத்தியஸ்தாயி சட்சம் பேசுகிறதென்று நாம் யாவரும் அறிவோம். ஆகையினால் 16 அங்குல நீள முள்ள பாதிதந்தியில் மத்தியஸ்தாயியிலுள்ள 12 சுரங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதன்மேல் ஒரு ஸ்தாயியில் வரும் 24 சுருதிகளும் நாற்பத்தெட்டில் ஒன்றாகவும் தொண்ணூற்றாறில் ஒன்றாகவும் வரும் நுட்பமான சுருதிகளும் உட்கலத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் 12 பாகமாகப் பிரிக்கப்பட்ட அரைச் சுரங்களுக்கும் 24 பாகமாகப் பிரிக்கப்பட்ட கால் சுரங்களுக்கும் அளவும் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மற்றும் நுட்பமான சுருதிகளுக்கு 854-ம் பக்கத்தில் துவங்கும் அட்டவணையில் கண்டு கொள்ளலாம். இவ்வளவின்படி ஒரு யாழில் சுரஸ்தானங்கள் வைக்கப்பட வேண்டுமானால் ஒரு யாழில் மேரு முதல் மெட்டு வரை 32 அங்குல நீளமுள்ளதாக வைத்துக் கொள்ளவேண்டும்.
|