11. தென்னிந்திய சங்கீதத்தைச் சுலபமாய்ப் பாடுவதற்கு ஸ்டாப் நொட்டேஷனில் (Staff notation) குறிக்கும் முறை. வெகு பூர்வ காலந்தொட்டு மிகுந்த தேர்ச்சியை அடைந்திருந்த நம் இந்தியாவின் சங்கீதம் சுமார் 1000, 2000 வருடங்களாகப் படிப்படியாய்ப் பேணுவாரின்றிக் குறைந்து வந்திருக்கிறதென்றும் சுரங்களைப் பற்றியும் நுட்பமான சுருதிகளைப் பற்றியும் அநேக கனவான்கள் விசாரிக்கக்கூடிய காலமாயிருக்கிறதென்றும் நாம் விசனத்தோடு சொல்ல வேண்டியதாயி ருக்கிறது. ஒரு பாஷை தன் உயர்ந்த நடையையும் கலைகளையும் இழந்து எழுத்து (alphabets) எதென்று விசாரிக்கும் எளிமையான நிலைக்கு வந்ததுபோல் இந்திய சங்கீதமுமிருக்கிறதென்று வருத்தப்பட வேண்டியதாயிருந்தாலும், இந்திய சங்கீதம், குறைகள் யாவும் நீங்கி பூர்வம் இந்தியாவிலிருந்த உயர்வாகிய நிலையை அடையும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய சங்கீதத்தில் நெடுநாள் உழைத்து மிகுந்த திறமை பெற்ற வித்துவசிரோமணிகளுக்கு ஒரு இராகத்தில் வரும் சுரங்கள் இன்ன ரிஷபம் இன்ன காந்தாரம் இன்ன மத்திமதைவத நிஷாதங்கள் என்று சொன்னால் இராகத்தில் சஞ்சாரம் செய்து ஒருவாறு கானம் செய்வார்கள். அதோடு அவைகளைப் புத்தகத்தில் எழுதும்பொழுது மேற்படி சுரக்குறிப்புக்களை மாத்திரம் எழுதிக்கொண்டு மற்ற யாவையும் வசன நடைபோல் தொடர்ந்து எழுதிவைப்பார்கள். இப்டி எழுதிவைக்கப்பட்டவை சிலசமயம் தேர்ந்த வித்துவான்களாலும் கண்டுகொள்வது கூடாததாயிருக்கும். அதன் கருத்தை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்வது பிற்காலத்தவர்க்கு முடியாததாகவும் ஆகிவிடுகிறது. இதோடு தாளத்தின் பெயரை மாத்திரம் எழுதிவிட்டு அங்கங்கள் பிரித்துக் காட்டாமையினால் பல சந்தேகங்கள் உண்டாகும். இவ்வருத்தங்கள் யாவும் நீங்கி யாவரும் சுலபமாய் அறிந்துகொள்வதற்கு ஒரு நூதனமுறை யுண்டாக்குவது மிகவும் அவசியமான காரியம். இவ்விஷயத்தில் பல அபிப்பிராய பேதங்களிருப்பது உண்மையே. இந்திய சங்கீதத்தை யாவரும் இலகுவாய்ப் படிப்பதற்கு நொட்டேஷனில் (notation) குறித்து எல்லாரும் அறியும்படி பிரசுரப்படுத்துவது சங்கீதங் கற்க விரும்புவோருக்கு மிகவும் அவசியமான காரியம். எழுத்துகளினால் குறிப்பது போதுமானதாயிராது. ஏனென்றால் பல பாஷைகள் பேசும் ஜனங்களுக்கு ஒரு பாஷையின் எழுத்தினால் குறிப்பது சுலபமாயிராது. ஆகையினால் எல்லா ஜனங்களும் தெரிந்து கொள்ளக்கூடிய பொதுவான ஸ்டாப் நொட்டேஷனில் (staff notation) குறித்துக் கொள்வதே நல்லதென்று எண்ணுகிறேன். பூர்வம் பல்லாயிர வருடங்களுக்கு முன் தென்மதுரையிலிருந்து தமிழ்ச் சங்கத்தாரும் மற்றும் சங்கீதம் கற்றுக்கொண்ட யாவரும் ஆயப்பாலையில் (பன்னிரண்டு அரைச் சுரங்களில்) ச-ப, ச-ப முறையாய் வரும் சுரங்களைத் தங்கள் கானத்தில் உபயோகித்து வந்தார்களென்றும் அவைகளையே தற்காலத்தில் Equal temperament என்று சங்கீதத்தில் தேர்ச்சியுள்ள பலர் சொல்லுகிறார்களென்றும் அவைகளே அனுசுரங்கள் சேர்த்துப் பாடுவதற்கு அனுகூலமாயிருக்கிறதென்றும் அம்முறையாகவே ஆர்மோனியம் பியானா முதலிய மேற்றிசை வாத்தியங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவென்றும் அறிய வேண்டும்.
|