பக்கம் எண் :

917
தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களுக்கும் மேற்றிசையார் வழங்கும் சுரங்களுக்கு முள்ள சில ஒற்றுமைகள்

மாதவியின் பரதத்தைப் பற்றியும் யாழ் வாசித்தலைப்பற்றியும் கண்ணகியின் கற்பைப் பற்றியும் சொல்லவேண்டியது அவசிய மாயிருந்ததினால் சமயத்திற்கு ஏற்ற அளவு பூர்வ இசைத்தமிழ் நூல்களில் சில குறிப்புகளை மாத்திரம் அங்கங்கே சொல்லியிருக்கிறாரேயொழிய முழுவதும் சொல்லவில்லை என்று நாம் தெளிவாக அறிய வேண்டும். இளங்கோவடிகள் காலத்தில் வழங்கிவந்த சங்கீத நுட்பம் உரையாசிரியர்கள் காலத்தில் குறைந்துபோனதாகக் கண்டதினிமித்தம் தங்கள் காலத்தில் ஞாபகத்திற்கு இருந்த சில சூத்திரங்களையும் எஞ்சி நின்ற இசை நூல்களையுங்கொண்டு உரை யெழுதியிருக்கிறார்களென்று தெளிவாகத் தெரிகிறது. அவர்களும் இளங்கோவடிகள் செய்யுளில் குறிப்பிக்கும் பொருள்களுக்கு மிகச்சுருக்கமாய் உரை எழுதியிருக்கிறார்களேயொழய தற்காலத்திலுள்ள நமக்குப் பூரணமாய்த் தெரிந்துகொள்ளக்கூடிய விதமாக எழுதவில்லை. இச்சூத்திரங்களின் கருத்தறியாமல் சிலப்திகாரத்தில் அடியார்க்கு நல்லார் இரண்டு வரிதான் சொல்லியிருக்கிறாரென்று சொல்லுகிறவர்களுமுண்டு.

இதில் சுரங்களும் சுரங்களின் பொருத்தங்களும் நால்வகைப் பெரும் பண்களும் அவை ஒவ்வொனறிலிருந்துண்டாகும் நாலு ஜாதி வகைகளும் அவைகளில் குறைந்த அலகுகளில் கானம் பண்ணப்படுவதையும் காண்கிறோம். தமிழ் மக்கள் பாடிவந்த பண்கள் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்று நாலு விதமாய்ப் பிரிக்கப்பட்டிருந்ததென்றும் அம்முறைப்படியே நாளது வரையும் கானம் பண்ணப்பட்டு வருகிறதென்பதையும் இதன்முன் பார்த்திருக்கிறோம்.

அவைகளில் ஆயப்பாலை இராகங்களைத் தவிர மற்றும் பாலைகளில் வரும் இராகங்களுக்குரிய நுட்பமான சுரங்களைச் சேர்த்து மேற்றிசை வாத்தியங்களில் வாசிப்பது முற்றிலும் கூடாத காரியம்.

நுட்பமான சுருதிகள் ஆயப்பாலையின் சுரங்களோடு சேர்ந்து பண்களில் வரும்பொழுது அவைகளின் தொனிபேதம் அறிந்துகொள்ள முடியாத பலர் அவைகளை மேற்றிசை வாத்தியங்களில் வாசித்து நுட்பம் இழந்து போனார்கள். பூர்வ தமிழப் பண்களையும், க்ஷேத்திரிய பதங்களையும் தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளையும் 100, 200 உருப்படிகளைச் சங்கீத வித்துவான்கள் ஆர்மோனியத்தில் சொல்லிக் கொடுத்தும் அதோடு பாடிக் கெடுத்துக்கொண்டுமிருக்கிறார்கள். இப்படிப் பழகுகிறவர்கள் சிலராயிருந்தாலும் பாதகமில்லை. ஆயிரமாயிரம் பேர்கள் வீடுவீடாய்ப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பழக்கம் நெடுநாள் வழக்கத்திற்கு வந்து விட்டதினிமித்தம் சுருதிகளைப்பற்றி நூதனமாக விசாரிக்க வேண்டியது வந்து நேர்ந்தது. இது காலவித்தியாசமேயொழிய ஒருவரையும் குறைசொல்ல ஏதுவில்லை. இருந்தாலும் மேற்றிசை வாத்தியங்களிலும் தென்னிந்தியாவில் மிகுந்து உபயோகிப்பட்டு வரும் யாழிலும் வாசிக்கப்படுவதற்கு ஏற்றவிதமாயும் எல்லா பாஷைக்காரரும் பொதுவாய் அறிந்து கொள்ளக்கூடும் சில குறிப்பு எழுத்துக்களினால் சங்கீதத்தைக் குறித்து வழங்குவது மிகவும் உபயோகமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.