பக்கம் எண் :

916
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

உருட்டல்-இடக்கைச்சுட்டுவிரல் உருட்டலும், வலக்கைச்சுட்டுவிரல் உருட்டலும், சுட்டொடு பெருவிரற்கூட்டி யுருட்டலும், இருபெருவிரலும் இயைந்துடனுருட்டலுமெனுமிவை. பிறவற்றை வந்துழிக்காண்க. பட்டவகை தன் செவியின் ஓர்த்து-உண்டான இசைக் கூறுபாடுகளை மாதவி தன் செவியாலுணர்ந்து, ஏவலன்-இதனை வாசியென்று ஏவுகின்றேனல்லேன். பின்பணியாதென-இனி இடுங்கட்டளை யாதென்று. கோவலன் கை யாழ் நீட்ட-கோவலனது கையில் யாழை நீட்டயாழைத் திருத்திய தான் முற்படவாசியாமல் அவன் றலைமைதோன்றக் கொடுத்தாள். காவிரியை நோக்கின-ஆற்றுவரி. கானல்வரிப்பாணிகானலைச்சுட்டிய வரிப்பாட்டு. தொடங்கும்-தொடங்குவான். புக்குப் புனைந்துஎய்தி நீக்கிய யாழை (வயந்த மாலை கையினின்றும் மாதவி) தொழுது வாங்கி எழீஇ ஓர்த்து அவ்வியாழை அவள் கோவலன்கைநீட்ட அவனும் நோக்கினவும் வரிப்பாணியுமாகிய பாட்டுக்களை மாதவி மனமகிழ வாசித்தறொடங்குமென முடிக்க படாத்தெனவும், கோட்டுமலரெனவும், இத்திறத்தவெனவும், செவியோர்த்தெனவும், பாணியாகெனவெனவும் பாடபேதமுண்டு.

இவைகளைப்பற்றி இந்நூலில் 591 பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அகவல்களிற் காண்க.

சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 33.

இனி "வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி" என்பது முதுலாக "புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி" என்பதீறாக முன்னர்ப் பாடிய ஒன்பான் கோவையின் மேற்செம்பாலைப் பண்ணொழிந்து பதினாற்கோவையாகிய சகோடயாழை வாங்கி வலக்கையைப் பதாகையாக்கி அக்கையால் கோடு அசையாதபடி பிடித்து இடக்கை நாலு விரலும் மாடகத்தையுறப் பிடித்துச்செம்பகையும் ஆர்ப்பும் அதிர்வும் கூடமுமாகிய பகை நீங்க முறையிற் பிழையாத நரம்பினாற் பதினாலு நரம்பினையும் உழைமுதல் கைக்கிளை யிறுவயாக "மெலிவிற் கெல்லை மந்தக் குரலே" என்பதனான் உழைகுரலான மந்தமும் "வலிவிற் கெல்லை வன்கைக் கிளையே" என்பதனாற் கைக்கிளை யிறுவாயான வலிவும் இணை, கிளை, பகை, நட்பின் வழகளில் பொருந்தப்பார்த்துக்குரல் நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளி நரம்பையும் முற்பட ஆராய்ந்து இசையோர்த்து அதன் முறையேயல்லாத நரம்புகளையும் ஆராய்ந்து இசையோர்த்துத் தீதின்மையறிந்து உழைமுதலாகவும் உழையீறாகவுமென மந்த முதலாகவும் மந்த மீறாகவும் குரல் நரம்பு மந்தமானபோது குரல் நரம்பே முதலு முடிவுமாகவும் அகநிலைமருதம் மும் பெருகியன் மருதமுமென நால்வகைச் சாதிப் பெரும்பண்கள் விளைநிலம்பெற வலிவு மெலிவு சமமென்னும் மூவகை இயக்கும் முறைமையிலே ஆராய்ந்து பாடிப்பின்னர் மாத்திரை குறைந்ததிற் பண்ணைப்பாடு மேல் வைக்கண் அப்பண்ணை இனிதாகப்பாடி நெகிழ்வுற்ற மனத்தினளாய் அயர்ந்தாளெனவுமாம்.

மேற்கண்ட அடிகளாலும் அவற்றின் உரையாலும் அரும்பதவுரையாலும் பூர்வ தமிழ் மக்கள் யாழ் வாசித்தலில் மிகத் திறமைபெற்றவர்களாய்ச் சிறந்த விதி வகைகளை அனுசரித்து இனிமைபெறப் பண்கள் பாடினார்களென்று தெளிவாகத் தெரிகிறது. உரையாசிரியர்கள் காலத்தில் மேற்கோளாக உபயோகித்த சூத்திரங்களும் அவைகளுள்ள பூர்வ நூல்களும் ஒருவாறு இல்லாமற்போனதினால் எல்லா விபரமும் அறிந்துகொள்வது இப்பொழுது கூடாதிருந்தாலும் அங்கங்கே சிலப்பதிகார அடிகளில் காணப்படும் நுட்பமான கருத்துக்களடங்கிய ஒவ்வொரு சொல்லும் விரிந்த பொருளுடையதாயும் சங்கீதத்தின் நுட்பத்தை அறிந்துகொள்ளப்போதுமானதாயுமிருக்கிறதென்று தெளிவாகத் தெரிகிறது. பலசிறு கடல்கள் சேர்ந்த ஒரு பெருங்கடல் நீரின் சுவையை அறிவதற்கு ஒரு துளி நீர் நாவில் போடுவது போதுமே. ஐந்து பெருங்கடல்களின் நீரின் சுவையை அறிவதற்கு ஐந்து துளி நீரையும் நாவில் போட வேண்டுமா? ஒரு குடம் பாலிற்கு ஒரு துளி உறைபோடுவதுபோல விசாலமான சங்கீத நூலின் நுட்பம் அறிந்து கொள்வதற்கு இளங்கோவடிகள் அங்கங்கே சில குறிப்புக்கள் சொல்லி வைத்ததாக நாம் அறிய வேண்டும்.