பக்கம் எண் :

109

போனால் முடிவுக்கு வராது என்று அறிவார்கள். பியானாவின் சுரங்களுக்குக் சுருதி சேர்க்கும்போது அதைச் செய்பவர்கள் ச-ப வாக வரும் ஐந்துகளைச் சற்றுக்குறைத்து வைத்துக்கொண்டே போவார்கள். அப்படிச் செய்யாவிட்டால் ச-ப முறையாய் வரும் ஒவ்வொரு சுரமும் வர வரக் கூடிக் கடைசியில் ஓனாய் ஊளை போலாய்விடும். ஆகையால் “ஓனாய் வராமல் பார்த்துக்கொள்.” என்று எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. மூன்றாவது அடுக்கிலேயே அதாவது ரிஷபத்திலிருந்து தைவதமும், தைவதத்திலிருந்து காந்தாரமும் உண்டாகும் போதே துன்பம் ஆரம்பத்து விடும். அப்பொழுது அதைச்சரிப்படுத்தும்படி அங்கே கொஞ்சம் ஓசை அலைகளையும் இங்கே கொஞ்சம் ஓசை அலைகளையும் குறைத்து சிம்புகட்ட நேரிடும். அப்படிச் செய்யாவிட்டால் 2/3 ஆகப் போகிறதென்ற கூத்து முடிவுக்கு வராதே! இதற்காகவே “கைகளால் செய்யப்பட்ட சுருதிகளுள்ள சங்கீதமானது அருவருப்பு” என்று சொல்லப்பட்டிருக்கிறது. நானும் அது சரியென்று சொல்லி ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் நூலாசிரியர் 22 சுருதிக்காரர்களைப் போல இப்படிக் கைகளால் செய்யப்பட்ட சுருதிகளாலான அருவருப்பைத் தன் முறைக்கு ஆதாரமாகக் கொள்ளாமல் பூர்வ தமிழருக்குள்ளே வழங்கி வந்ததும் சம இடைவெளிகளுள்ளதும் ஒன்றற்கொன்று தீவிரமாய் இயற்கையிலே உள்ளதுமான சுருதிகளாலான தன் சங்கீத முறையை ஸ்தாபிக்கிறார். இந்த முறையானது அநேக தடவைகளில் நூலாசிரியரது குமாரத்திகள் ஸ்ரீமதி மரகதவல்லியம்மாளாலும் கனகவல்லியம்மாளாலும் விஸ்தாரமாற் ருசுப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பெண்மணிகளும் இந்திய சங்கீதத்திலும் இங்சிலீஷ் சங்கீதத்திலும் அடைந்திருக்கிற ஆச்சரியப்டத்தக்க விதமான பாண்டித்தியத்தைப் பற்றி நான் நேரில் நற்சாட்சி கொடுக்கக்கூடும்.

இவைகளை யல்லாமல் நூலாசிரியர் அநேக Tables, Statements முதலியவைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இவைகள் பல முறையையும் 32 அங்குலம் என்ற ஒரே முறைக்குக் கொண்டுவந்திருப்பதால் பற்பல முறைகளை எளிதில் ஒத்துப்பார்ப்பதற்கு உபயோகமாயிருக்கின்றன. இவைகள் பல முறைகளின் கணக்கு முதலியவற்றைச் சொல்லுகின்றன. இவைகளையல்லாமல் பூர்வதமிழரின் 4 பாலைகளிலும் சுரவரிசைகளைக்காண் பிப்பதற்கு இராசிச்சக்கரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக்கொண்டு நூலாசிரியருடைய புத்தி கூர்மையும் பொறுமையும் இன்னதென்று இலேசில் அறிந்துகொள்ளலாம். அவைகளைக் கவனமாய்ப் படிப்பவருக்கு அவர்கள் அதில் செலவழித்த காலம் வீண்போகாமல் பயனையுண்டாக்கும்.

பழையகாரியங்களே திறம். அவை சரியோதப்போ, வெகு காலம் அவைகள் இருந்தபடியால் அவைகளையே சரியாகக் கொள்ளவேண்டும், இலேசில் விட்டுவிடக்கூடாது என்பது இந்தியரின் இயற்கை இப்பேர்ப்பட்ட இயற்கையுடைய ஜாதியின் மத்தியில், ஒரு காரியத்தை உண்மையென்று அறிந்த பிறகு அதைக் கூரைகளின்மேல் நின்று யாவருக்கும் தெரிய பிரஸ்தாபிக்க பயப்படக்கூடாது என்று நினைக்கும் அநேக ஞானிகளைப் பார்க்கிறோம். இந்த முறை சரிதானென்று பேர்போன சங்கீத வித்வசிரோமணிகளாகிய மைசூரைச் சேர்ந்த மகா---ஸ்ரீ சேஷண்ணா, மகா---ஸ்ரீ H. P. கிருஷ்ணாராவ், விஜயநகரம் மகா---ஸ்ரீ வீணை வேங்கடரமணதாஸ், மகா---ஸ்ரீ முத்தையாபாகவதர் முதலியவர்கள் ஒப்புக்கொள்வதானது நமக்குப் பெருமையே. சத்தியம் ஜெயம் பெறுமல்லவா?

இந்த நூலின் பிரசுரமானது துவாவிம்சதி சுருதிப் புறாக்கூட்டங்கள் தங்கள் சிறகுகளை அடித்துப் பீதியை அடையும்படி செய்த போதிலும் தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒரு முக்கியமான புது உயிர் கொடுத்த சம்பவமாய் இருக்குமென்பதில் கொஞ்சமாவது சந்தேகமில்லை. சங்கீதம் அறிந்தவர்களுக்குள் இது ஒருவித மனக்கிளர்ச்சியையும் பிரீதியையும் உண்டுபண்ணும் என்பது நிச்சயம். ஆனால் இதன் மூலமாய் பூர்வ தமிழருக்குள் மனிதசாரீரத்தையும் நுட்பமான சுருதிகளையும் அப்பட்டமாய் சப்தித்துக்காட்டக்கூடிய யாழ் அல்லது வீணை அதிகமாய் உபயோகிக்கப்பட்டதுபோல தற்காலமும் அது உபயோகிக்கப்பட்டுவருமானால் நலமாயிருக்கும். க்ஷீணித்துப்போன கர்நாடகசங்கீதத்தைத் திருபவும் உயிர்ப்பிக்கவும், தற்கால சங்கீதத்தைத் தங்களுடைய சொந்த செல்வமாகப் பூட்டிவைத்து அதைக் குருட்டுத்தனமாய் உபயோகிக்கும் வித்வான்களின் கையிலிருந்து தப்புவிக்கவும் ஜாதி மதவித்தியாசமில்லாமல் யாவரும் படிப்பதினால் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் அது உபயோகப்படுத்தப்படவும் இந்த நூல் பிரயோஜனமாயிருக்குமென்பது நிச்சயம்.

(ஒப்பம்) A. G. பிச்சமுத்து.