முதல் புஸ்தகம். 1-வது பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம். I. சங்கீதத்தின் பெருமையும் அதன் உற்பத்தியும். உலகெல்லாம் தனது ஒரு சொல்லால் உண்டாக்கி, அவை யாவற்றிற்கும் தானே உயிராய், ஆனந்த மூர்த்தியாய், அனந்த கல்யாணகுணசீலனாய் ஆண்டு நடத்திவரும் கர்த்தன் இரு பொற்பாத கமலங்களை வணங்கி, கருணாமிர்த சாகரம் என்னும் இச்சங்கீத சாஸ்திரத்தை எழுதத் தொடங்குகிறேன். உலகுக்கு முதல்வனான கர்த்தன், முதல் முதல் நாதசொரூபியாய், பின் ஜீவனாய், ஜீவர்களின் உணர்வாய், உணர்வில் அறிவாய், அறிவில் ஆனந்தமாய், ஆனந்தத்தில் நாதமாய், நாதத்தில் கீதமாய், கீதத்தில் லயமாய், ஆனந்த நர்த்தனஞ்செய்து உலகைப் பரிபாலிக்கிறான். சத்து சித்து ஆனந்தனாய், அண்டபுவன சராசரங்கள் அனைத்தும் நிறைந்து நின்ற அப்பரமனை உள்ளுணர்ந்த பெரியோர், தமது தூல தத்துவங்களையும் சூட்சம தத்துவங்களையும் காரணனாகிய அக்கர்த்தனிடத்தில் ஒடுக்கி, அவனில் விளங்கும் கோடி சூரிய பிரபையில் தாங்களும் பிரபை பெற்று, ஜீவகாருண்யம் பாராட்டி, முத்தி நிலைபெற சதா துதித்து வணங்கினார்கள். வணங்கிய பெரியோர் அடைந்த மேம்பதவியைக் கண்டு, தாமும் அப்பதம் பெற ஆசித்து, ஆனந்த மூர்த்தியை இடைவிடாது துதித்து, அவரவர்க்காகும் அளவற்ற கிருபை பெற்றார் மற்றவரும். கிருபை பெற்றோர் யாவரும், மேலான அவன் புகழைச் சொல்லித் துதித்துக் கானம் செய்கிறார்களேயொழிய, தம்மை இழிவு படுத்தும் லௌகீக கானங்களைச் செய்யார். இக்கானமும், கான மூர்த்தியின் சிருஷ்டி திதி சம்மாரம் என்னும் முத்தொழில்போலவே, தோற்றம் விருத்தி லயத்தையுடைய அபிநயம் ராகம் தாளம் என்னும் மூன்று அங்கங்களையுடையது. இம்மூன்றையும் ஒன்றாகப் பாவித்து, முத்தொழில் மூர்த்தியை பத்திசெய்யவேண்டியது அவசியம். அப்படிச் செய்வதால் அவன் அருட்செயலில் காணப்படும் யாவற்றிலும், அவனே அங்கங்குப் பரிபூரணனாய்
|