பக்கம் எண் :

4
கருணாமிர்த சாகரம். முதல் புஸ்தகம்.முதல் பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்.

இருந்து அபிநயித்து ஆடிப்பாடி ஆனந்த நர்த்தனஞ்செய்கிறானென்று, பிரத்தியட்சமாய் அறியலாம். ஆனந்தக் கூத்தாடும் முதல்வனைக் காணும் பக்தன், தானும் இன்னிசையுடன் ஆடிப் பாடிக் கர்த்தனைக்கொண்டாடுவான்.

கர்த்தனைக்கொண்டாடிய பக்தர்களுள் தங்கள் தங்கள் அனுபோகத்திற்கு ஏற்றவாறு தெய்வத்தை ராஜனாகவும், பெற்றெடுத்த தாய் தந்தையாகவும், இனிய மணவாளனாகவும் பாவித்து வாயார வாழ்த்தினார் சிலர்; தோத்திரித்து வணங்கினார் பலர்; இடர் தீர்க்க இறைஞ்சினார் சிலர்; நினைத்தவை பெற வேண்டினார் அநேகர்; பிரிவாற்றாமையால் பிரலாபித்தார் சிலர்; கண்டடைந்த சிலர் ஆனந்தக் கூத்தாடினார்; காணவிரும்பிய பலர் தூதுபாடி உசாவினார்; உள்ளன்பு மேலிட்டு, உவந்து துதித்தார். அவன்குணங்களை ஒவ்வொன்றாய் எடுத்தெடுத்து விஸ்தரித்து, மற்றவர் அறிய வியந்து பாடினார். தங்கள் அபாத்திரத்தை நினைந்து இரங்கினார். தம் தவறுதல்களை நினைத்து மன்னிக்கப் பிரார்த்தித்தார். காதல் மிகுந்த சிலர், அவன் திரு உருவை நினைத்து, உணவையும் உலகையும் மறந்தார். உத்தமர்களின் ஜீவியத்தையும் அவர்கள் பகவானைத் துதித்துப் பாடியவற்றுள் உத்தமமான பாகங்களையும் ஒன்றாய்த் திரட்டி, மற்றவர்கள் பின்பற்றப் பரம்பரையாய்ச் சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர். பின்னுள்ளோர், அதையே வேதமென எழுதி வைத்தார்கள். வேதத்தை ஆதாரமாகக்கொண்ட ஒவ்வொருவரும், தெய்வ சந்நிதிகளிலும் பொது ஸ்தலங்களிலும், தங்கள் வணக்கத்திலும், வேதத்திலுள்ள சிலபாகங்களைத் தாமே பாட்டாகப்பாடி ஆராதித்து, ஆனந்தமடைந்து வந்தார்கள். பாடச்சக்தியில்லாதவர்கள், பாடகர்களை நியமித்துப் பாடச்சொல்லிக் கேட்டு ஆனந்தித்து வந்தார்கள். பாடுதற்குத் துணைக்கருவிகள் பலபலசெய்து, மிகுந்த தொனியுடன் ஆர்ப்பரித்தார்கள், தங்கள் தங்கள் வருத்தம் யாவும் மறந்து, ஏகமனதாய் இன்னிசையில் ஈடுபட்டு, பகவானை ஆராதிக்கும் இந்நிலை நன்னிலையென்று நினைத்து, மேலுலகத்திலும் தெய்வத்தை இப்படியே ஆராதிப்போமென்று ஆசித்து, மேலும் மேலும் ஊக்கம் கொண்டார்கள். தங்கள் கானத்தைப் பல முகமாய் விருத்திசெய்ய, இனிய கரங்களையும் அவைகளின் ஆலாபனத்தையும், எல்லோரும் ஏகோபித்துச் சொல்லக்கூடிய கால அளவாகிய தாளத்தையும், ஒன்றின்பின் ஒன்றாய்க்கண்டு விருத்தியடைந்து வந்தார்கள் இவற்றில் அனுகூல மடைந்து வருகையில், தங்களுக்குச் சந்தோஷமான காலங்களிலும், தெய்வ சந்நிதியிலும், தாங்கள் சாப்பிடுங் காலத்திலுங்கூட, பாடத்துவக்கினார்கள்.

தெருவில் விளையாடும் சிறுவர்களின் கானவிருத்தியைப்போல, நாம் கேட்கும் இனிய கானமும், பலயுகங்களாகப் பல உபகரணங்களைக்கொண்டு விருத்தியாயிற்றென்று நாம் அறிய வேண்டும். எப்படியென்றால், ஓசைதரும் பலகைகள் பெட்டிகள் கதவுகள் தகரத்தகடுகள் முதலியவைகளைத் தட்டி, ஜ தி கணம் லயமென்னும் தாளத்துக்குரிய அங்கங்களை ஒருவரும் போதிக்காமலே சுயமாய் அறிந்துகொண்ட பேச்சறியாத பாலர்கள், தாங்கள் கொஞ்சம் பெரியவர்களாகும்பொழுது, சிறு தம்பட்டம் கொட்டாங்கச்சித் தம்பட்டம் கெஞ்ஜிரா முதலியவைகளில் பழகி விளையாடுகிறார்கள். அதன் மேல் அதில் பிரியமுள்ள சிலர் பெரியவர்களாகும்பொழுது, இருபக்கமும் தோல் கட்டடிய மத்தளம் மிருதங்கம் பேரி உடுக்கை நகரா தபிலா போன்ற கொட்டுங் கருவிகளைச்செய்து, கடிப்பினால் அடித்துத் தாளத்தில் விருத்தியானார்கள். தாள ஞானம் முதல் முதல் எல்லாருக்கும் இயல்பாய் அமைந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்து நாலைந்து மாதத்திற்குள் சங்கீதத்தைக் கேட்கும்போது தாளத்துடன் சாய்ந்தாடுவதை நாம் அறிவோம். மேலும் ஒவ்வொருவருடைய சுவாசமும் இரத்தாசயத்துடிப்பும், காலப்பிரமாணத்தை யுடையதாகவே யிருக்கிறது.