பக்கம் எண் :

5
சங்கீதத்தின் பெருமையும் அதன் உற்பத்தியும்.

இதுபோலவே, தெருவில் விளையாடும் சிறுவர்கள், பூவரசு போன்ற மரத்தின் இலைகளைச் சுருட்டி, அதில் சிறுத்த ஒரு பாகத்தைக் கையினால் அமுக்கி, ஒடுங்கிய துவாரமிருக்கும்படி செய்து அதில் ஊதியும், அதன்பின் குழலின் பருமனுக்கும் அதன் வாய்க்கும் தகுந்த விதமாய்ச் சத்தம் பிறக்கிறதென்று கண்டு, கீழ் மேலாயுள்ள இரண்டு அல்லது மூன்று நாலு சத்தங்களைச் சேர்த்தும் அதில் ஒற்றுமை கண்டு சந்தோஷித்தார்கள். பின்பு துவாரமுள்ள பூசணி இலைக்காம்புகளை குழல்களாக நறுக்கி அவைகளின் ஒரு பக்கத்தில் இலைக் குழல்களை வைத்து ஊத, குழல்கள் எவ்வளவு நீளுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சத்தம் மந்தமாகிறதென்றும், குழல்கள் குறுகக்குறுகத் தொனியுள்ள நாதம் பிறக்கிறதென்றும் கண்டு, ஏகோபித்து ஆனந்தக் கூத்தாடினார்கள். இவர்களில் இன்னிசையில் பிரியங்கொண்ட சிலர், பெரியவர்களானபொழுது கொம்பு சங்கு மூங்கில் ஈரக்கழி நாணல் முதலியவைகளில் துளையிட்டும், மரம் பொன் வெள்ளி பித்தளை முதலியவற்றில் பல வடிவங்களுடன் குழல்செய்து துளையிட்டும், இன்னிசை பிறக்க ஊதினார்கள். இதுபோலவே, நரம்புக் கருவிகளிலும் படிப்படியாய் விருத்தியானார்கள், வளையக்கூடிய ஒரு குச்சியில், மெல்லிய கயிறு அல்லது நரம்புகளைக் கட்டி மீட்ட, ஓசை பிறப்பதை அறிந்தார்கள். அதினின்று பெரிய மூங்கில்களை வில் போலும் வளைத்துத் தோல் வடங்கள் கட்டி, குணத்தொனிசெய்து மணிகளையும் சதங்கைகளையும் கோத்துத் தாளத்திற்கு இணங்கக் குறுகிய கடிப்பினால் அடித்து, வில்லடிப் பாட்டுகள் படித்தார்கள். தந்திகள் அல்லது நரம்புகள், ஆகாயமடங்கிய ஒரு பாத்திரம் பெட்டி அல்லது சுரைக் குடுக்கை வழியாய்ச் செல்லும்பொழுது, அதிக நாதம் கொடுக்கிறதென்று படிப்படியாய்க் கண்டு, துந்தினாமா, ஒரு தந்திச் சுரைக்காய்க் கின்னரி போலொத்த வாத்தியங்கள் செய்து, தங்கள் சாரீரத்திற்கேற்ற சுருதி வைத்துக் கொண்டு, பகவானுடைய குணங்களை வர்ணித்துப் பாடினார்கள். கைகளால் மீட்டுவதற்குப் பதில், வில்லுகளால் தந்திகளை இழுத்து வாசிக்கக்கூடிய அகப்பைக்கின்னரிகள் போன்றவை செய்து வாசித்தார்கள். பிறகு மானிட சாரீரத்திற்கு ஒத்ததும் சுரஸ்தானங்கள் குறிப்பிட்டதுமான மிகச் சிறப்புப் பொருந்திய வீணை செய்தார்கள். அதனின்றும் சங்கீதம், அதற்குரிய சில விதிகளுடன் விருத்தியாகிக்கொண்டே வருகிறது.

சிறுவர்கள் தட்டி விளையாடும் கதவின் ஓசையிலிருந்து, தம்பட்டம் பேரிகை மத்தளம் மிருதங்கம் தபிலா உடுக்கை கைத்தாளம் சேமக்கலம் சல்லரி மணி சதங்கை முதலிய கொட்டுங் கருவிகளும், ஊதிவிளையாடிய இலைக்குழல்களிலிருந்து, தாரை ஒத்து நாகசுரம் முக வீணை மகடி. புல்லாங்குழல் கொம்பு சங்கு முதலிய துளைக்கருவிகளும், பல்லினால் கடித்து கையினால் பிடித்திழுத்து ஒரு கையினால் மீட்டிப் பிறந்த இனிய நாதத்திலிருந்து, துந்தினாமா கின்னரி தம்புரு அகப்பைக்கின்னரி சுந்தரி வீணை ருத்திரவீணை பேரியாழ் மகரயாழ் முதலிய மீட்டும் தந்தி வாத்தியங்களும் சிறுவர் விளையாட்டிலிருந்தே தோன்றி, படிப்படியாய் விருத்தி யாயினவென்று நாம் அறிகிறோம். நாதனது திருவிளையாட்டை எடுத்துக்கூறத் திறமையுடையோர் யாவர்!

மேற்கூறிய வாத்தியங்கள், தேசத்ததாரின் கைத்தொழில் திறமைக்குத் தகுந்தபடி, வெவ்வேறு உருவங்களையும் பாஷையால் வெவ்வேறு பெயர்களையும் பெறுவதேயன்றி, காரியத்தில் சங்கீதத்திற்குத் துணைக்கருவிகளாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இக்கான விதியின் அருமை பற்றியும், வாத்தியங்களின் உதவிபற்றியும், ஒவ்வொரு தேசத்தாரும், தாங்கள் வழங்கும் கானத்தைத் தெய்வமே கொடுத்தாரென்றும், உபதேசித்தாரென்றும், தாமே செய்து காட்டினாரென்றும் மேன்மை பாராட்டுந் தகுதியுடையதாயிருக்கிறது. தினை அளவு பனித் துளி, எதிர்நிற்கும் மலையையும் வெகு திட்டமாகத் தனக்குள் பிரதிபிம்பித்துக் காட்டி நிற்பது