14. முதற் சங்கமும் தென் மதுரையைச்சேர்ந்த49 நாடுகளும் கடலால் அழிந்ததைப்பற்றி. சிலப்பதிகாரம், வேனிற்காதையுரை. பக்கம். 197 "நெடியோன் குன்றம்-வேங்கடமலை. தொடியோள்-பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமுமென்றது என்னை யெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாக ராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையு முள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீயினார். காய்சின வழுதிமுதற் கடுங்கோனீறாயுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற்பாண்டியன் தொல் பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ் தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடுமென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், 'வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள' என்பதனாலும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும் உரையாசிரியராகிய இளம்பூரண வடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும். அஃது அற்றாக, வடக்கின்கண் வேங்கடமலை தெற்கின்கட் குமரிக்கடலெனக் குறியாற் கூறினவர் கீழ்பான். மேல்பாற்கு எல்லை கூறாதது என்னையோவெனில், நெடுந்திசையாகிய வடபாற்கெல்லை குன்றமென்றும் தென்பாற்கெல்லை குமரிப் பௌவமென்றும் கூறினமையான் ஒழிந்த திசைகட்கு ஒழிந்த பௌவம் எல்லை என்பதாயிற்று; என்னை? 'வேங்கடங்குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான்கெல்லை தமிழது வழக்கே' என்றார் சிகண்டியாருமாகலின். அன்றியும் வடதிசைக்கண் வடுகொழிந்த திரிபுடை மொழி பலவுளவாகலான், மலையெல்லை கூறி ஒழிந்த திசை மூன்றிற்கும் திரிபின்மையாற் கடலெல்லை கூறினாரெனினுமமையும்." இவ்வுரையால் தென்னிந்தியாவின் தென்பாகத்திலுள்ள குமரி நாட்டிற்குக் குமரியாறு வடவெல்லையா யிருந்ததென்றும் குமரிநாடு வரை 49 நாடுகளும் கடலால் அழிந்துபோயின வென்றும் பார்த்தோம். அவ்வழிந்துபோன 49 நாடுகளைப்பற்றிய சில விஷயங்களை இதன் பின்வரும் வசனங்களில் காணலாம். 15. முதல் ஊழியில் 49 தமிழ் நாடுகளைப்பற்றிய சில விபரம். தமிழ்மொழியின் வரலாறு, பக்கம் 60-63. "புறநானூற்றிற் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாட்டிற் ' பஃறுளியாறு' வடிம்பலம்ப நின்ற பாண்டியனால உண்டாக்கப்பட்டதென்பது குறிக்கப்பட்டுளது; சின்னாண் முன்னர் வெளிப்பட்ட 'செங்கோன்றரைச் செலவு' என்றதோர் சிறு நூலினாற் சில விஷயங்கள் விளங்குகின்றன. மேல் அடியார்க்கு நல்லாருரையான் விளங்கிய ஏழ் தெங்கநாடு முதலிய நாடுகளைச் சார்ந்து 'பெருவளநாடு' முதலிய பிறநாடுகளும், 'மணிமலை' முதலிய சில மலைகளும், 'முத்தூர்' முதலிய சிலவூர்களும், சக்கரக்கோ, பேராற்று நெடுந்துரையன், இடைக்கழிச் செங்கோடன் முதலிய புலவர் சிலரது பெயர்களும், 'பெருநூல்', 'இயனூல்' எனச் சில நூற்பெயரும் அந்நூலானும் அதனுரையானும் வெளியாகின்றன. அந்நூல் முதலூழியில் தலைச்சங்கத்தார் காலத்திற் குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவளநாட் டரசனாகிய செங்கோவை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடினானென்பது,
|