கவனிப்போம். இற்றைக்குச் சுமார் 1,800 வருஷங்களுக்கு முன் சேரநாட்டில் அரசாண்ட செங்குட்டுவன் என்பவருடைய தம்பி இளங்கோவடிகள் 'சிலப்பதிகாரம்' என்னும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் அக்காலத்திலுள்ள ராஜ்யங்களின் பெருமை, ராஜாக்களின் தன்மை, அரசாட்சி முதலியவைகள் தெளிவாக விளங்குகின்றன. கதாநாயகனாகிய கோவலனையும் அவன் காதலித்த நடன கணிகையாகிய மாதவியையும் பற்றிச் சொல்லுமிடத்து, இவ்விருவரும் வீணை வாசிப்பதில் மிகவும் பாண்டித்தியமுடையவர் களாயிருந்தார்களென்றும் மாதவி பரதத்திலு மிகத் தேர்ந்தவளாயிருந்தாளென்றும் கூறிப் பரதத்தின் சில முக்கிய அம்சங்களையும் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். அதற்கு உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் காலத்தில் கேள்வியிலும் அரைகுறையாயிருந்த நூல்களிலுமிருந்து சங்கீதத்தைப் பற்றி எழுதிய உரைகளில் சில முக்கியமான அம்சங்கள் வெளியாகின்றன. இந்நூலை வெளிப்படுத்திய மகா மகோபாத்தியாயர் வே. சாமிநாத ஐயர் அவர்களால் எழுதப்பட்ட சில குறிப்புகளை இங்கே பார்ப்போம். சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் வரலாறு, பக்கம் 10, 11. "இளங்கோவடிகள் காலம் கடைச்சங்கப் புலவர் காலமென்று நிச்சயிக்கப்படுகிறது. அக்கடைச்சங்கப் புலவருட் சிறந்தவரும் மதுரைக் கணக்காயனார் மகனாருமாகிய நக்கீரனார் இறையனாரகப் பொருளுக்குத் தாம் இயற்றியவுரையில் இந்நூலிற் கானல் வரியிலுள்ள "நிணங்கொள்," "துறைமேய் வலம்புரி" நேர்ந்தநங்காதலர்" "புணர்துணை" என்னும் பாடல்களை யெடுத்து உதாரணமாகக் காட்டியிருப்பதுங் காண்க. இளங்கோவடிகளுக்குத் தமையனாகிய செங்குட்டுவன் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியார்க்குக் கோயில் சமைத்து விழாக்கொண்டாடிய காலத்து இலங்கை யரசனாகிய கயவாகுவென்பவன் உடனிருந்தானென்று வரந்தருகாதையாலும், அக்கயவாகுவும் இலங்கையிற் கண்ணகியார்க்குக் கோயில் கட்டுவித்து விழாக் கொண்டாடினானென்று இந்நூற்பதிகத்தைச் சார்ந்த உரைபெறு கட்டுரையாலுந் தெரிகின்றன. இற்றைக்குச் சற்றேறக்குறைய 1,760 வருடங்களுக்கு முன்பு கயவாகுவென்னு மரசனொருவன் இருந்தானென்று இலங்கைச் சரித்திரத்தாற் (மகாவம்சம்) புலப்படுகின்றது. பின்னும் சற்றேறக்குறைய 760 வருடங்களுக்கு முன்பு கயவாகு வென்னும் மற்றோர் ராஜனிருந்ததாகவும் அச்சரித்திரத்தால் தெரிய வருகின்றது. ஆயினும், இந்நூலிற் கூறிய வேறு சில அரசர்களுடைய காலத்தை ஆராயும்போது இந்நூலாசிரியர் காலம் இரண்டாங்கயவாகுவின் காலத்திற்கு முந்தியதாகத் தெரிகின்றமையின், இவர்காலம் முதற்கயவாகுவின் காலமென்றே துணியப்படுகின்றது." இவ்வசனங்களில் மகாவம்சம் என்ற இலங்கைச் சரித்திரத்தால் கயவாகுவின் காலமும் அக் காலத்திலிருந்த இளங்கோவடிகளின் காலமும் கடைச்சங்கத்தின் புலவருள் ஒருவராகிய நக்கீரனார் காலமும் ஒன்றென்று நினைக்க இடமிருக்கிறது. கயவாகுவின் காலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய 1,800 வருஷங்களாகும். மேலும் கூலவாணிகன் சாத்தனாரால் செய்யப்பட்ட மணி மேகலையென்னும் நூலை நச்சினார்க்கினியனார் சிறப்பித்துச் சொல்லுவதைக் கவனிக்கும்பொழுது கூலவாணிகன் சாத்தனார் காலமும் இளங்கோவடிகள் காலமும் ஒன்றென்று கொள்ள இடமிருக்கிறது. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய நக்கீரனாருடைய காலத்திற்கு பிந்தினதாயிருக்க வேண்டுமென்று ஊகிக்க இடமிருக்கிறது. மேற்கண்டபடி 1,800 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட நூலில், ஜலப்பிரளயத்தில் அழிந்துபோன தென்மதுரையிலிருந்த முதற் சங்கத்தைப் பற்றியும் இரண்டாவது சங்கமிருந்த கபாடபுரத்தைப் பற்றியும் மிகவும் தெளிவாக எழுதுகிறார்.
|