பக்கம் எண் :

67
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலும் சிறந்து விளங்கிய தமிழ்நாடு அழிந்தபின், அதன் சமீபத்திலுள்ள தென்னிந்தியாவில் அங்கிருந்தோர் அனேகர் தப்பி அடைக்கலம் புகுந்திருக்கலாமென்றும், அது தமிழ்நாட்டின் ஒரு பாகமாயிருந்ததினால், இயல் இசை நாடகமென்னும் முத்தமிழுக்குரிய சில அம்சங்களும் ஒருவாறு அந்நாட்டில் வழங்கிவந்தன வென்றும் நாம் நினைக்க வேண்டும். அதினாலேயே வெகு பூர்வந்தொட்டுத் தென்னிந்தியாவின் சங்கீதம் சாஸ்திர முறைமையுடையதென்று யாவராலும் கொண்டாடப்பட்டு வந்தது. வாழையடி வாழையாய் வம்சபரம்பரையாய்க் கோயில் சம்பளங்களினால் ஆதரிக்கப்பட்டு வந்த நடனமாதர்களும், அவர்கள் அண்ணாவிகளும், நாகசுரக்காரர்களும், தவுல்காரர்களும், ஓச்சர்களும், புல்லாங்குழல் வாசிப்பவர்களும், வீணை வாசிப்பவர்களும், சங்கீத சாஸ்திரத்தைப் பேணி நாளதுவரையும் படித்து வருகிறார்கள். இவர்களினின்றே தென்னிந்திய சங்கீதத்தை மற்றவர் கற்றுக்கொண்டாரென்றும், கற்று கொள்ளுகிறார்களென்றும் பிரத்தியட்சமாய் அறியலாம். வீணை வாசிப்பதிலும், வாய்ப்பாட்டுப் பாடுவதிலும் தேர்ந்த வித்வான்களுக்கும் பாடம் சொல்லக்கூடிய நாகசுரக்காரர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களென்பதை நாம் காணலாம். ஆகவே சங்கீதத்தை தங்கள் ஜீவனமாகக் கொண்ட ஒரு வகுப்பாரால் பரதம், வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், நாகசுரம், மேளம் முதலிய சங்கீத அம்சங்கள் முக்கியமாய்ப் பேணப்பட்டும் மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறதென்று நாம் எண்ண இடமிருக்கிறது. வட பாஷையில் தேர்ந்த வித்வான்கள் ஏராளமாயிருக்கும் வடநாட்டில், தென்னாட்டின் சங்கீதம்போல் சிறந்த சங்கீதமில்லையென்று நாம் காண்பதே, சங்கீத சாஸ்திரம் ஆதியில் தமிழிலேயே யிருந்ததென்பதற்கும், தென்னாட்டிலேயே வழங்கி வந்ததென்பதற்கும் தென்னாட்டிற்கு வந்தபின்பே ஆரியர் அதில் தேர்ந்தவர்களானர்க ளென்பதற்கும் தெளிவான அத்தாட்சியாகிறது. மேன்மையுடையதாகிய தென்னிந்திய சங்கீத முறைமையை 4,440 வருஷங்களாகவிருந்த முதற் சங்கத்தாரும் ராஜர்களும் பிரபுக்களும் வித்வான்களும் ஆதரித்து அருமையான நூல்கள் எழுதி மிகவும் விருத்தி நிலைக்குக் கொண்டு வந்திருந்தார்களென்பதை நாம் விசாரித்தறிந்தால், இந்தியாவின் சங்கீதம் மிகப் பூர்வமாயுள்ளதென்பது நமக்கு விளங்கும். ஆகையினால் தென்மதுரையிலிருந்த முதல் சங்கத்தையும் கபாடபுரத்திலிருந்த இடைச்சங்கத்தையும் உத்தர மதுரையிலிருந்த மூன்றாவது சங்கத்தையும் பற்றிச் சொல்லும் சில காரியங்களைப் பார்ப்போம்.

13. தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் உத்தரமதுரையிலுமிருந்த
மூன்று சங்கங்களைப்பற்றிய சில முக்கிய குறிப்புகள்.

இத்தமிழ் மொழியை விருத்தி செய்துவந்த முச்சங்கங்களுள் முதற்சங்கம் முதல் ஊழியின் இறுதியிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இம் முதற்சங்கமிருந்த காலத்தையும் அதில் வழங்கிய நூல்களையும்பற்றி அறிவதே நமக்கு அவசியமாம். இற்றைக்குச் சுமார் 8,000 வருஷங்களுக்கு முன்னுள்ள ஒரு கல்விச்சபையையும் அதில் வழங்கி வந்த நூல்களையும் அந்நூல்களுள் சங்கீதத்தின் பெருமையையும் அறிவதே நமக்கு முக்கியம். ஆகையால் கடல் கொண்ட தென்மதுரையிலிருந்த முதற்சங்கத்தைப் பற்றியும், கடலால் அழிக்கப்பட்ட கபாடபுரத்திலிருந்த இரண்டாம் சங்கத்தைப் பற்றியும், உத்தர மதுரையென்ற தற்கால மதுரையிலிருந்த மூன்றாம் சங்கத்தைப் பற்றியும் கல்விமான்கள் கூறும் சில ஆதாரங்களைச் சற்றுக்