பக்கம் எண் :

66
க,ச,ட,த,ப என்ற எழுத்துக்கள் ஒவ்வொன்றிலுமிருந்து நந்நான்கு எழுத்துக்களுண்டானது.

11. ஒன்றிலிருந்தே உலக முண்டானதுபோல் தமிழிலுள்ள க, ச, ட, த, ப என்ற எழுத்துக்களிலிருந்தே மற்ற நாலு எழுத்துக்கள் வந்தன.

ஆதியில் ஒன்றாகவும் அதன் பின்பே இரண்டு மூன்றாகவும் விருத்திக்கு வருவது உலக இயற்கை, ஒன்றாயிருந்த முதல் வஸ்துவிலிருந்தே சகலமும் உண்டாயிற்று. ஒரு பாஷையில் வழங்கிவரும் பல ஓசைகளுடைய இனவெழுத்துக்களை ஒன்றாகச் செய்வது மனுட இயற்கையல்லவே. ஒன்றிலிருந்து பல நூதனங்களுண்டாக்குவதே இயல்பு. இவ்வுண்மைக்கேற்ப, க, ச, ட, த, ப என்ற ஆதி ஓசைகளிலிருந்து ஒவ்வொன்றிற்கு நந்நான்கு எழுத்துக்கள் வீதம் விருத்தியாவது இயல்பே. மனதில் எண்ணும் கருத்துக்கள் யாவையும் சொல்வதற்கு அனுகூலமாக இவ்வெழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதைப்பற்றி மிகவும் சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது. மற்றும் சமஸ்கிருத எழுத்தைப்பற்றிச் சொல்ல இங்கு அவசியமில்லையாதலால் விடப்பட்டது. இவ்வெழுத்துக்களில் சில தமிழிலும் வழங்குவதற்கு இலக்கணமும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையினால் தமிழ்ப் பாஷையும் அதின் எழுத்துக்களும் மிகுந்த பூர்வமானவையென்றும், தமிழ்ப் பாஷை யாதோடும் கலப்புறாத தனிப் பாஷையென்றும் அதன் பின்னே மற்றப் பாஷைகளுண்டா யிருக்கவேண்டுமென்றும் தோன்றுகிறது.

தமிழ் என்ற பதத்தில் வழங்கும் ழ என்ற சிறப்பெழுத்து மற்ற எந்தப் பாஷைக்காரரும் தங்கள் பாஷையின் எழுத்துக்களினால் எழுதி உச்சரிக்கக்கூடாத மேம்பாடுடைய தென்பதையும் மறந்து போகக்கூடாது.

மிகத் தொன்மையும் தனிமையுமான இப்பாஷை மிகப்பூர்வீகமான தென்மதுரையில் அரசாண்டு கொண்டிருந்த பாண்டிய ராஜாக்களினால் ஆதரிக்கப்பட்டும் அக்கிராசனம் பெற்றும் மிகவும் உன்னத நிலையிலிருந்தது. ஜலப்பிரளயத்தினால் அழிந்துபோன 49 தமிழநாடுகளிலுமிருந்த சிறந்த வித்வான்கள் யாவரும் ஒரு சங்கமாகச் சேர்க்கப்பட்டு அரிய பெரிய விஷயங்களை விசாரித்து சிறந்த நூல்களை அரங்கேற்றியும் வந்தார்கள்.

12. தென்னிந்தியாவின் தென்பக்கத்திலுள்ள தென்மதுரையும், தென்மதுரை அழிந்தபின் தென்னிந்தியாவும் சங்கீதத்தில்மிகப் பூர்வமுடையவை யென்பது.

இதன் முன்னுள்ள எல்லாவற்றையும் நாம் கவனிக்கையில், தென்னிந்தியாவின் தென்பாகத்தில் இந்துமகா சமுத்திரத்தில் விசாலித்திருந்த லெமூரியா என்னும் கண்டம் ஒன்றிருந்ததென்றும், அதுவே ஜாதிகள் யாவும் பிறந்து வளர்ந்த தொட்டிலாயிருந்ததென்றும், அவ்விடத்துள்ளோர் அக்கண்டம் அழிந்தபின் அதைச் சுற்றியுள்ள தீவுகளிலும் காடுகளிலும் குடியேளினார்களென்றும் தெரிகிறது. அவ்விடத்திலுள்ள மரங்கள் மிருகங்கள் மனிதர்களைக் கொண்டும், சுற்றிடங்களிலகப்படும் மனித எலும்புகள் பிராணிகளின் எலும்புகளைக் கொண்டும், பாஷைகளில் கலந்திருக்கும் வார்த்தைகளைக் கொண்டும், பூர்வகாலத்தில் அவர்கள் வெகு நாகரீகமுடையவர்களாயிருந்தார்களென்றும், அவர்கள் தமிழ்ப் பாஷையையே பேசினார்களென்றும் நீண்ட ஆயுளுள்ளவர்களாயும் பலசாலிகளாயு மிருந்தார்களென்றும் காணப்படுகிறது.