பக்கம் எண் :

65
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

மகேஸ்வரன், சதாசிவன் என்ற பஞ்சகர்த்தாக்களும் பஞ்ச சக்திகளும் பஞ்ச வர்ணங்களும் நாலு, ஆறு, பத்து, பன்னிரண்டு, பதினாறு, மூன்று அட்சரங்களுமான 51 அட்சரங்களும் இவ் வட்சரங்களினால் குறிக்கப்படும் பிதுர், தேவர், தேவதைகள் சக்திகளும் விளங்கி நின்று ஓர் உடலாய் ஓர் ஜீவனாய் தெய்வபதியாய் தெய்வ வாகனமாய் தெய்வ ஆலயமாய் விளங்குகிறதென்று மிக விஸ்தாரமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

"ஐம்ப தெழுத்தே அமர்ந்த வேதங்கள்
ஐம்ப தெழுத்தே ஆகமம் ஆதிகள்
ஐம்ப தெழுத்தின் அறிவை அறிந்தபின்
ஐம்ப தெழுத்தே ஐந்தெழுத்தாமே."

என்ற திருமூலர் திருமந்திரத்தின்படி தெய்வச் செயல்கள் அத்தனையும் ஐந்து அட்சரங்களால் குறிக்கப்படும் ஐந்து ஸ்தானங்களிலும் ஐந்து கர்த்தாக்களாகவும் சக்திகளாகவும் பெற்று தெய்வபதம் அடைந்தார்கள். அதன் மேன்மையையறிந்த பெரியோர்கள் தீமைக்கு விலகி நன்மை செய்வதையே ஜீவர்களுக்குக் கற்பிக்கவும் தன்னைப் போல் பிறனை நேசிக்கும் ஜீவகாருண்யமாகிய நிர்விகற்ப சமாதியில் நின்று முத்திநெறி கூடவும் வேண்டிய சாதனங்களையும் விதிகளையும் வேதமாக எழுதி வைத்தார்கள். வேதத்தின் திறவுகோலாகிய மௌனாட்சரத்தின் மகிமையை அனுஷ்டித்தவரே அறிவார்.

பிரணவ அட்சரத்தின் உடலாகிய பஞ்சாட்சரங்களின் வடிவத்தைக் கவனிப்போமானால், நகாரம் என்ற முதல் எழுத்து இடம் வலமாக மாறி சுவாதிஷ்டான சக்கரத்தில் எழுத அதுவே இரண்டு கால்களாகவும், இரண்டாவது எழுத்தாகிய மகாரத்தை இடம் வலமாக இணைத்து மணிபூரகத்தில் அடைக்க அது வயிறாகவும், சிகாரமாகிய மூன்றாவது எழுத்தை இடம் வலம் இணைத்து அநாகதச் சக்கரத்தில் எழுத இரண்டு கைகளாகவும் இரத்தாசயமாகவும், விசுத்தி ஸ்தானத்தில் முன்போல் நாலாவது எழுத்தாகிய வகாரத்தையெழுத சுவாசாசயமாகவும் கழுத்தாகவும், ஆக்கினா ஸ்தானத்தில் யகாரம் எழுத அது ஓங்காரமாகவும் விளங்கி, ஒரு மனுட சரீரத்தின் அமைப்பையும் அங்கங்களையும் காட்டிக் கொண்டிருக்கும். ஆதிஸ்தானமாகிய மேல் முக்கோணத்தில் விளங்கும் ஓங்கார வடிவம் சிரசையும் கீழ்முகம் நோக்கிய முக்கோணமாய் விளங்கும் மூலாதாரத்தில் ஓங்காரவடிவம் பிரஜாபதியையும் குறிக்கும்.

பிரழைகள் உற்பத்திக்குக் காரணமாகிய மூலாதாரத்தில் உட்பொருளாய் விளங்கும் கருவும் ஓங்கார சொரூபமாய் நிற்கும். இப்படித் தூல சூட்சம காரணம் என்னும் மூன்று வழியிலும் விளங்கி நிற்கும் ஓம் என்ற அட்சரமும் அது விளங்கி நிற்கும் தூல சரீரமும் நமசிவய என்ற ஐந்து அட்சரங்களினாலாகிய சரீரத்தில் முக்கியமாக விளங்கி நிற்கிறது. தூல சரீரத்தின் ஆறு ஆதாரச் சக்கரங்களையும் எழுதி அவைகளில் அட்சரங்கள் பொருந்தி வடிவுண்டாகும் விதத்தையும் நாம் பூர்வ தமிழ் நூல்களில் தெளிவாகக் காண்போம். இவ்வைந்து அட்சரங்களின் வடிவைப்போலொத்த எழுத்துக்கள் மற்றும் பாஷைகளிலில்லை யென்பது நிச்சயம். மந்திரங்களில் முதன்மை பெற்ற இம்மந்திரமு மந்திரத்தின் உட்பொருள்களைக் குறிக்கும் அட்சரமும் தமிழ் பாஷைக்கேயுரியவை. மற்றவர் ஜெபித்தாலும் ஜெபித்த மந்திரத்தின் உட்பொருள் காட்டும் அட்சரங்கள் இல்லாது போனாரென்பது நிச்சயம். இது பற்றியே, தமிழ்ப் பாஷை மிகப்பூர்வமாயுள்ளதென்று நாம் துணிந்து சொல்லலாம்.