தெரியவருகிறது. இது உலக இயற்கைதானே. ஒன்று அதிகப்பழமையானபின் மறுபடியும் பேணுவாரில்லாது போனால் எக்கெதியடையுமோ அக்கதியே தமிழ்ப் பாஷைக்கும் ஏற்பட்டது. தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழையே தாய்ப்பாஷையாகக் கொண்ட சில தென்னாட்டு அந்தணர் தங்கள் தாயினிடம் கற்றுக்கொண்ட சில காரியங்களைத் தமிழில் எழுதி வைக்காமல் தாங்கள் நூதனமாய்க் கற்றுக்கொண்ட சமஸ்கிருதத்திலேயே எழுதிவைக்கும் வழக்கமுடையவர்க ளானார்கள். சற்றேறக்குறைய 360 வருஷங்களுக்கு முன், தமிழ்நாட்டுள் ஒன்றாகிய சோழ ராஜ்யத்தில் மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷிதர் அவர்கள் குமாரர் வெங்கடமகி என்பவர், பூர்வ தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவந்த ராகங்களிலுள்ள ஆரோகணம் அவரோகணங்களை ஒழுங்குபடுத்தி, அவைகளில் வழங்கிவரும் சுரங்கள் இன்னின்ன ஸ்தானங்களில் வருகிறதென்று அறியக்கூடியதான மேளகர்த்தாவும் அதற்கிணங்க லக்ஷணகீதமும் செய்து, "சதுர்தண்டிப்பிரகாசிகை" என்ற பெயருடன் ஒரு நூல் வெளியிட்டார். அந்நூல் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களையே குறிக்கக்கூடியதாயிருந்தாலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவான நூலாயில்லை. ஏனென்றால், கர்நாடக சங்கீதத்தின் சாராம்சத்தையே சொன்ன இவர் தமிழில் எழுதாது சமஸ்கிருத பாஷையில் எழுதிவைத்தது, பிறர் முற்றிலும் மயங்குவதற்கு இடமாயிருக்கிறது. கர்நாடக சங்கீதத்தைக் கற்றறிந்தோரில் சிலர், துவாவிம்சதி சுருதியைப் பற்றிச் சொல்லும் வடமொழி நூல்களைப் பார்த்துவிட்டு, அது சரியென்றும் இது தப்பென்றும் சொல்லுகிறார்கள். 72 மேளக்கர்த்தாவையும் ஒப்புக் கொள்ளாத சிலர், இன்றைய தினமும் இருக்கிறார்கள். 72 மேளக்கர்த்தாவுக்கு ராகமாலிகை பாடிய மஹா வைத்தியநாதையர் அவர்கள், செந்தமிழ்ப் பழக்கமுடையவர்களாய்ப் பெரிய புராணத்திற்கு அநேக மிக அருமையான கீர்த்தனைகள் செய்திருந்தாலும், ராகமாலிகைக்குச் சமஸ்கிருதத்தில் சாகித்தியம் செய்தது என்ன அபிப்பிராயமோ? இப்படியே ஒவ்வொருகாலத்தில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதினால் கலப்புத்தோன்றி, காலக்கிரமத்தில் விசுவாமித்திர சிருஷ்டியாய் இனந்தெரியாமல் மயங்க வருவது இயல்புதான். ஆக்கியோனுடைய கருத்து இன்னதென்று அப்பாஷைக்குடையவரே தெரியாமல் மயங்குவாரானால், மற்றொரு பாஷைக்காரர் அறிவது எப்படி? சாரங்கதேவர் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி எழுதிய சில சமஸ்கிருத சுலோகங்களைச் சற்றேறக்குறைய 20 விதமாய் அர்த்தம் பண்ணியிருக்கிறார்கள். இப்படியே வெவ்வேறு அபிப்பிராயமுள்ள பௌத்தரும் சமணருமான பலவித்துவான்கள் பலபல காலங்களில் ராஜனை வசப்படுத்திக் கொண்டும் தமிழ்வித்வான்களைக் கட்சி சேர்த்துக் கொண்டும் தங்கள்தங்கள் அபிப்பிராயங்களை மெள்ளமெள்ள நிலைநாட்டினார்கள். இசை, நாடகம் என்னும் இருதமிழும் சிற்றின்பத்தையே விளைவிக்கக் கூடியதா யிருக்கின்றனவென்று தாங்கள் வெறுத்ததுமன்றி, முற்றிலும் அது தலைகாட்டாதபடி தொலைக்கப் புகுந்தனர் என்று பின்வரும் வசனங்களில் பார்ப்போம். 20. பௌத்தரும் சமணரும் கலந்து சங்கீதத்தையும் நாடகத்தையும்தொலைக்கப்புகுந்ததும் அதில் அழிந்துபோன நூல்களும். தமிழ் மொழியின் வரலாறு, பக்கம். 34, 35. "இத்துணைப் பெருமை வாய்ந்த நாடகத் தமிழின் தோற்றமென்னை? தமிழ்நாடகம் முதலிலுண்டானது மதவிடயமாகவேயென்பது துணியப்படும். அது கடவுளர் திருவிழாக் காலங்களில் ஆடல் பாடல்களிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதினின்றும் உண்டாயிற்று. சில காலத்தின் பின்னர்க் கதை நடையான மனப்பாடங்களும் உடன்கூடின; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள சம்பாஷணைகளும் பின்னர் வசனமாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத்தமிழ் ‘வேத்தியல், பொதுவியல்’ என்ற இருபிரிவினதாகி அரசர்களாலும் ஏனையோராலும் ஆதரித்து வளர்க்கப்
|