பக்கம் எண் :

79
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

பட்டது. கி. மு. மூன்றாநூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனினுஞ் சற்று முற்காலத்தினாதல் நாடகத் தமிழ் உயிர்நிலையுற்றிருந்திருத்தல் வேண்டும். நாமுணர்ந்த பழமையான நாடகத்தமிழ் நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்று நிலவினவாதலினென்க. ஆகவே அது குற்றங்குறைவு இல்லாது உண்டானதொரு தொழிலென்றே ஆதியில் மதிக்கப்பட்டது என்று ‘நாடகவிய’ லின் முகவுரைக்கட் கூறிய கூற்றையுங் காண்க.

இவ்வாறு தோன்றி வளர்ந்த நாடகத் தமிழ் வீழ்நிலையையடையப் புகுந்தது. அதற்குற்ற காரணம் யாது? ஒழுக்க நிலை வகுக்கப்புகுந்த ஆரியருஞ் சைனரும் நாடகக் காட்சியாற் காமமே அறிவினும் மிகப்பெருகு கின்றதென்ற போலிக் கொள்கையுடையராய்த் தமது நூல்களிற் கடியப்படுவவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலத்திருந்த அரசர்களுக்குந் துர்ப்போதனை செய்து நாடகத் தமிழைத் தலையெழ வொட்டாது அடக்கி வந்தனர். ஒளவையாருந் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையையே தீவினை யச்சத்தின்பாற் படுத்துக் கூறுஞ் சைனர்கள் நாடகத்தமிழைக் கடிந்தது ஓராச்சிரியமன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக்கிடையில் நாடகத்தமிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப்போகின்றது?"

தமிழ் மொழியின் வரலாறு, பக்கம் 32, 33, 35, 36.

"இவ்வுலக வாழ்க்கைக்கு அறம் பொருளின்பமென்ற மூன்றுஞ் சிறந்தனவாமென்னு முண்மையை நன்குணராது, ‘அறமே யாவரும் பின்பற்றுதற்குரியது, மற்று இன்பம் கைவிடுதற்குரியது’ என்று எண்ணி, இசையினால் இன்பம் மிகுதலின் அதனையுங் கடியவேண்டுமென்று புகுந்து, ஆரியருஞ் சைனரும் ஒருங்கு சேர்ந்து, இசைத் தமிழைப் பெரிதும் அலைத்துத் தொலைக்க முயன்றனர். [இசை நாடகங் காமத்தை விளைக்கு மென்றுரைத்தார் உரையாசிரியர்களுள் தலைநின்ற நச்சினார்க்கினியரும்.] அம் முயற்சிகளில் அநேக நூல்கள், அந்தோ! அழிந்துபோயின. இப்போழ்தத்து எஞ்சியிருப்பன மிகச்சிலவே. இவற்றை இறைவன் பாதுகாத்தருள்க.

பண்டிதராயினார் கடிந்து நாடகத் தமிழைக் கைவிடவே, அது பாமரர் கையகப்பட்டு இழிவடைந்து தெருக்கூத்தளவிலே நிற்கின்றது, அக்காலத்துச் சங்கப் புலவர்கள் செய்த ‘பரதம்’, ‘அகத்தியம்’, ‘முறுவல்’, ‘சயந்தம்’, ‘குணநூல்’ ‘செயிற்றியம்’, ‘மதிவாணர் நாடகத் தமிழ்நூல்’, ‘கூத்தநூல்’, ‘நூல்’, என்ற நாடகத் தமிழ் நூல்களெல்லாம் யாண்டுப்போ யொளித்தன?"

முன் வசனங்களை கவனிக்கையில், ஆரியரும் பௌத்தரும் சமணரும் தென் இந்தியாவிற்கு வந்த பின்பே தமிழ்ப் பாஷையில் கலப்புத் தோன்றினதென்று நாம் நிச்சயமாய்ச் சொல்லலாம். அகத்திய மாமுனிவர் எழுதிய பேரகத்தியம் என்னும் நூல் மிகவிரிவாயிருந்ததுபற்றி, அதைக் குறுக்கிச் சிற்றகத்தியம் என்னும் நூல் செய்தார் என்று தோன்றுகிறது. இதினால் தமிழ் இலக்கியம் மிகுந்த விரிவுடையதாயிருந்ததென்று புலப்படுகிறது. இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்றபடி, இலக்கியம் மிகவும் பூரண நிலையிலிருந்ததென்று நாம் அறியவேண்டும். அவர் எழுதிய இலக்கணம் விரிவாயிருந்ததுபற்றி, தொல்காப்பிய முனிவரால் இயற்றமிழுக்கு மாத்திரம் தொல்காப்பியம் எழுதப்பட்டது. பவணந்தி முனிவரால் நன்னூலும், வீரமா முனிவரால் தொன்னூலும் செய்யப்பட்டன. மேலும் வீரசோழியம் இலக்கண விளக்கம் போப்பையர் இலக்கணம் இலக்கணச் சுருக்கம் இலக்கண விளக்கச் சூறாவளி இலக்கண சூடாமணி முத்துவீரியம் முதலிய சுருங்கிய நூல்கள் உண்டாயின. இவைகளும் இயற்றமிழையே சொல்லுகின்றன. 700-க்கு மேற்பட்ட பாவினங்களிருந்ததாகச் சொல்லிய பேரகத்தியத்திலிருந்து வர வரக் குறுகிச் சில பாவினங்களுக்கு மாத்திரம் இலக்கணம் சொல்லப்பட்டிருப்பதை நோக்க, பூர்வத்திலிருந்த இசை நூலும் யாழும் பரதமும் வரவரப் படிப்படியாய்ப் குறைந்தும் தேய்ந்தும் போயினவென்று சொல்ல வேண்டும். இத்தோடு தென்னிந்தியாவிற்குப் பூர்வகுடிகளல்லாத மற்றவர் யாவரும் இதற்கு அனுகூல சத்துருக்களானார்கள். இங்ஙனம் கடைச்சங்க காலத்தில் இப்படிப்