பட்டவர்களால் இசைநூல்கள் பலவும் அழிக்கப்பட்டனவென்று தெளிவாகத் தோன்றுகிறது. இயல் இசை நாடகமென்னும், முத்தமிழ் சொன்ன அகத்தியத்திலிருந்து இயற்றமிழின் சில பாகங்களுக்கு மாத்திரம் தொல்காப்பியர் இலக்கணம் சொன்னார். அவர் சொன்னதிலிருந்து அதற்குப் பின்னுள்ளோர் குறுக்கிச் சொன்னார்களென்று நாம் தெளிவாய் அறியலாம். அகத்தியருடைய காலத்தில், சங்கீதமும் பரதமும் இவை சம்பந்தமான கூத்துக்களும் தமிழ்நாட்டில் மிக விரிவாக இருந்தனவென்று அவர் சொல்லிய சில சூத்திரங்களினால் தெரிகிறது. தொல்காப்பியர் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று நான்கு நிலங்களையும் அவற்றிற்குரிய கருப் பொருள்களையும் பற்றிச் சொல்லிய சூத்திரமாவது :- "தெய்வமுணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ யவ்வகை பிறவுங் கருவென மொழிப." இதில் ஒவ்வொரு நிலத்திற்குரிய தெய்வம், உண்பொருள் அல்லது உணவு தானியங்கள், மிருகங்கள், மரங்கள், பறவைகள், பறைகள், தொழில்கள், யாழின் இனங்கள் இன்னவையென்று சொல்லுகிறார். ஒவ்வொரு நிலங்களின் கருப்பொருள்கள் இன்னவென்று நச்சினார்க்கினியார் உரையில் மிகத் தெளிவாகச் சொல்லப்படுகின்றன. தொல்காப்பியர் பொருளிலக்கணம் சொல்லியவிடத்துத் தலைவனுந் தலைவியும் எந்நிலத்திற்குரியவர்களோ அந்நிலத்திற்குரிய தெய்வம் உணா முதலிய கருப்பொருள்கள் மாறாமல் கவி சொல்ல வேண்டுமென்று விதித்திருக்கிறார். நால்வகை நிலத்தின் கருப்பொருள் விபரம். "முல்லைக்கு உணா, வரகுஞ்சாமையும் முதிரையும்; மா, உழையும் புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங்குருந்தும்; புள், கானக்கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரைமேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலுங் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ், பிறவு மென்றதனாற், பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர், கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு உணா, ஐவன நெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம், அகிலும் ஆரமுந் தேக்குந் திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை, முருகியமுந் தொண்டகப் பறையும்; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினை முதலியன விளைத்தலும் கிளி கடிதலும்; யாழ், குறிஞ்சியாழ்; பிறவுமென்றதனாற், பூ, காந்தளும் வேங்கையுஞ் சுனைக்குவளையும்; நீர், அருவியுஞ் சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும். மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெலலும்; மா, எருமையும் நீர்நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும், நெல்லரிகிணையும்; செய்தி, நடுதலுங் களை கட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருத யாழ். பிறவுமென்றதனாற், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்களென்பனவேயாம். நெய்தற்கு உணா, மீன் விலையும் உப்பு விலையும்; மா, உமண்பகடுபோல்வன; முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று. மரம், புன்னையும் ஞாழலுங் கண்டலும்; புள், அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன் கோட்பறை; செய்தி மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ், நெய்தல் யாழ். பிறவு மென்றதனாற், பூ, கைதையும் நெய்தலும்; நீர், மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும். பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்; மா, வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும் ஞெமையும்; புள் கழுகும் பருந்தும் புறாவும்; பறை, சூறை கோட்பறையும் நிரைகோட்பறையும்; செய்தி ஆறலைத்தலுஞ் சூறைகோடலும்; யாழ், பாலையாழ்; பிறவுமென்றதனாற், பூ, மராவுங் குராவும் பாதிரியும்; நீர் அருநீர்க்கூவலுஞ் சுனையும்; ஊர், பறந்தலை."
|