பக்கம் எண் :

81
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

இவைகளைக் கொண்டு தொல்காப்பியர் காலத்திலேயே அதாவது இற்றைக்கு சுமார் 8,000 வருஷங்களுக்கு முன்னாலேயே யாழ்வகைகளும் அவற்றிற்குரிய இலக்கண விதிமுறைகளும் மிக விரிவாக இருந்திருக்கின்றனவென்று மிகவும் தெளிவாய்க் காணலாம். முல்லையாழ் குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ், பாலையாழ் முதலிய யாழ்களின் சுர அமைப்பைப் பற்றி இதின் பின் பார்ப்போம்.

21. சங்கீதத்தைப் பற்றிச்சொல்லும் பூர்வ தமிழ்நூல்கள்இன்னின்னவென்பது.

சிலப்பதிகாரத்தின் உரைப் பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இசைத்தமிழைக் கூறுமிடத்தில், இசை நூல்களும் பேரியாழும் அழிந்து போனதைப் பற்றியும் தாம் உரை எழுதுவதற்கு உதவியாயிருந்த சில நூல்களைப் பற்றியும் சொல்லுகிறார். அவை வருமாறு :-

"இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்தியமுதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடுஇறுதிகாணாமையின், அவையும் இறந்தனபோலும். இறக்கவேவரும் பெருங்கலமுதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும்பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது; என்னை? ‘ஆயிரநரம்பிற் றாதியாழாகு, மேனையுறுப்புமொப்பன கொளலே, பத்தரதளவுங், கோட்டினதளவு, மொத்தவென்ப விருமூன்றிரட்டி, வணர்சா ணொழித்தெனவைத்தனர் புலவர்’ என நூலுள்ளும் ‘தலமுத லூழியிற்றானவர் தருக்கறப், புலமகளாளர் புரிநரப்பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச், செலவுமுறை யெல்லாஞ் செல்கையிற்றெரிந்து, மற்றையாழுங் கற்றுமுறை பிழையான் எனக் கதையினுள்ளுங் கூறினாராகலாற் பேரியாழ் முதலியனவும் இறந்தனவெனக்கொள்க.

இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற்கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து அநாகுலனென்னும் தெய்வப்பாண்டியன் தேரொடு விசும்புசெல்வோன் திலோத்தமையென்னுந் தெய்வமகளைக் கண்டு தேரிற்கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியாநிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர்பெற்ற குமரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பராசைவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதீயமும், கடைச்சங்கமீரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன்மதி காவணார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ்நூலு மெனவைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களின்றேனும் ஒருபுடையொப்புமை கொண்டு முடித்தலைக்கருதிற்று இவ்வுரையெனக் கொள்க."

மேற்கண்ட சில வசனங்களினால், முதல் ஊழியின் காலத்தில் தேவவிருடி நாரதர் செய்த பஞ்ச பாரதீயமும் பரதமும் அகத்தியமும் பேரியாழும் அழித்தன; இடைச்சங்க காலத்திலுள்ள முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்னும் நூல்களும் குற்றுயிராய் அழிந்தன; இடைச் சங்க காலத்தில் செய்யப்பட்ட இசை நுணுக்கம் முதலிய சில நூல்கள் இந்நூல் உரையெழுதுவதற்கு உதவியாயிருந்தனவென்றும் தெரிகிறது. அவர் கடைசியாகச் சொல்லுகிற நூல்களும் பூரணமாய் இப்போது இல்லை. இது தவிர, சங்கீதத்தைப் பற்றி அடியார்க்கு நல்லார் காலத்தில் இன்னின்ன நூல்களிருந்தனவென்று சொல்லும் சில விபரம், தென்னிந்திய சங்கீதத்தின் பூர்வத்தையறிய விரும்பும் நமக்குப் பிரயோசனமாயிருக்கும். ஆதலால், அவைகளையும் இங்கு பார்ப்போம்.