வெங்கட சுப்பையர். இவருக்கு சுண்டி வெங்கட சுப்பையர் என்று பெயர். வீணை இராமகாளாஸ்திரி ஐயரின் மாணாக்கர். துளஜா மகாராஜா சபையில் சமஸ்தான வித்துவான். அவர் பேரில் பிலஹரி இராகத்தில் விசேஷ கற்பனையுடன் வர்ணம் செய்திருக்கிறார். மணலி சின்னையா முதலியார் சபையில் இவரால் செய்யப்பட்ட சங்கீத சாகித்தியங்கள் அநேகமுண்டு. இவர் குமாரர் சுண்டி வெங்கடரமணையர். வெங்கடபதி ராஜா. கார்வேட் நகரம். இவர் கார்வேட் நகரம் சமஸ்தானாதிபதி. சங்கீதத்திலும் வீணையிலும் கெட்டிக்காரர். 1875 வருஷம் எட்வர்ட் சக்கிரவர்த்தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் பிரபுவாக சென்னைக்கு வந்த சமயத்தில் அவருக்கு வீணை வாசித்தார். வெங்கடாசலமையர். தஞ்சாவூர் வீணை ஆதிமூர்த்தி ஐயரின் குமாரர். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்த வித்துவான். இவரும் தம் பரம்பரை முன்னோர்களைப் போலவே தஞ்சாவூர் அரண்மனையில் வீணை வித்துவான். வெங்கடேச சாஸ்திரி. இவர் பாலக்காட்டைச் சேர்ந்த பல்லாவூரிலிருக்கிறார். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். வெங்கடேச சாஸ்திரி. வீணையும் பிடிலும் சுகமாய் வாசிப்பார். சிட்சை சொல்லி வைப்பதில் கெட்டிக்காரர். வெங்கடேச சாஸ்திரியார். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்த வித்துவான். 1892-ல் "சங்கீத சுயபோதினி" என்கிற நூல் செய்திருக்கிறார். வெங்கட்ட ஐயர். கோயம்புத்தூர். மிருதங்கம் சுகமாய் வாசிப்பார். வெங்கட்டசாமி ராஜ். காளாஸ்திரி. வீணை நன்றாய் வாசிப்பார். நன்றாய் சிட்சையும் சொல்லி வைப்பார். வெங்கட்டரமண ஐயா. குரத்தவாசி. இவர் திருவத்தூர் வீணை குப்பையரின் மாணாக்கர். சங்கீத சாகித்தியங்களில் பெரிய வித்துவான். நன்றாய்ப் பாடுவார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். வெங்கட்டரமணையர். சுண்டி. இவர் சுண்டி வெங்கட சுப்பையரின் குமாரர். சரபோஜீ மகாராஜா (1798-1824) சபையில் சங்கீத வித்துவானாயிருந்தார். சங்கீத சாகித்தியத்திலும் கானத்திலும் தகப்பனாரைப் போலவே கெட்டிக்காரராயிருந்தார். அனேக வர்ணங்கள் செய்திருக்கிறார். பல்லவிகளை அற்புதமாய்ப் பாடுவார். வெங்கட்டராம ஐயர். கரூர். சங்கீத வித்துவான். வெங்கட்டராம சாஸ்திரியார். இவர் தஞ்சாவூருக்கு சமீபம் மெலட்டூரிலிருந்தார். சரபோஜி சிவாஜி மகாராஜா காலங்களில் (1798-1856) சங்கீத வித்துவானாயிருந்தவர். கைசிக ரீதியாய் நல்ல பதங்களைச் சேர்த்து சிருங்கார ரசத்துடன் அனேக பதங்கள் செய்திருக்கிறார். வெங்கட்டராம பாகவதர். கும்பகோணம். இவர் அரிகதை நன்றாய்ச் செய்வார். வெங்கட்டராம பாகவதர். இவர் சங்கீதத்துடன் அரிகதையும் நன்றாய்ச் செய்வார். வெங்கட்டராமையர். இவர் பாடிய சங்கீத கீர்த்தனைகள் ஜாதீயங்கள் பிறர் பாடுவதற்குக் கஷ்டமாயிருந்தமையால் இவரை ‘இரும்புக் கடலை வெங்கட்டராமையர்’ என்று சொல்லுவார்கள். போதேந்திர சுவாமிகள் பேரில் "சதமனி" என்னும் தோடி கீர்த்தனமும் மருதா நல்லூர் சுவாமிகள் பேரில் சில கீர்த்தனங்களும் கோபால கிருஷ்ண முத்திரையுடன் செய்திருக்கிறார். இவர் ஆதிப்பையரின் கடைசிக் காலத்திலிருந்ததாகத் தெரிகிறது.
|