பக்கம் எண் :

227
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

வெங்கட்டராமையர். இவருக்கு தஞ்சாவூருக்கு சமீபம் அம்மாபேட்டை சொந்தவூர். பிடில் நன்றாய் வாசிப்பார்.

வெங்கட்டராமையர். வெளிப்பாளையம். சங்கீத வித்துவான்.

வெங்கட்ட ராமையர். திருநெல்வேலி. சிட்சை நன்றாய்ச் சொல்லி வைப்பார். இவர் மாணாக்கர் கோபாலையர் பிடில் நன்றாய் வாசிப்பார்.

வெங்கட்ட ராமையர். மைசூர் சாம்ப ஐயரின் சகோதரர். சங்கீதத்தில் சிறந்த பாண்டித்தியமுடையவர். இவரும் இவர் குமாரர் இராமசுவாமி ஐயரும் லட்சுமண ஐயரும் வீணை மிகவும் சுகமாய் வாசிப்பார்கள்.

வெங்கட்டராமையர். சிங்களாச் சாரியாரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார்.

வெங்கட்டராமையர். வரகூர். மனோகரமாய்ப் பாடுவார்.

வெங்கட்டராமையர். இவருக்கு கொனுகோல் வெங்கட்டராமையர் என்று பெயர். உச்சஸ்தாயியில் நன்றாய்ப் பாடுவார்.

வெங்கட்டராமையர். வேட்டனூர். தீக்ஷதரின் மாணாக்கர். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் குமாரர் சுவேதாரண்ய ஐயர் பிடில் நன்றாய் வாசிப்பார்.

வெங்கட்ட ராவ். கும்பகோணம். பாட்டிலும், பிடிலிலும், மிருதங்கத்திலும் கெட்டிக்காரர்.

வெங்கட்ட ராவ். பிடில். பித்தாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவான். அதிக அற்புதமாய் பிடில் வாசிப்பார்.

வெங்கட்ட வைத்தியநாதர். முத்து வேங்கடமகி இவர்களிருவரும் வேங்கடமகியின் பரம்பரையில் சங்கீத வித்துவான்களாயிருந்தார்கள்.

வெங்கட்டேச்வர எட்டப்ப ராஜா. 1816-1839. எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி, சங்கீதத்தில் அதிக பிரீதியுடையவர். அநேக சங்கீத வித்துவான்களை வரவழைத்து ஆதரித்தார். தானும் சங்கீதம் கற்றுக் கொண்டு வீணையும் அப்பியாசித்தவர். முகாரி ராகத்தில் ‘சிவகுருநாதனை’ என்ற தமிழ்க் கீர்த்தனம் செய்திருக்கிறார்.

வெங்காசாமி ராவ். சென்னப்பட்டணம். ரெவினியு போர்டு ஆபீஸ் சிரஸ்தார். சங்கீதத்திலும் வாய்ப்பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரராயிருந்தார்.

வெங்கு. இவரும் இவர் சகோதரர் சாமிநாதனும் சிதம்பரத்தில் மிருதங்கத்திலும், தாளத்திலும் மிகவும் கெட்டிக்காரர்களாயிருந்தார்கள்.

வெங்கு பாகவதர். திருநெல்வேலி. இவர் வடிவேல் நட்டுவனாரின் மாணாக்கர். இவருக்குப் பழமையான கீர்த்தனங்கள் அனேகம் பாடமுண்டு. ராக ஆலாபனைகள் பல்லவி சுரங்கள் நன்றாய்ப் பாடுவார். தரு கீர்த்தனை தானம் வர்ணங்களைச் செய்திருக்கிறார். சுமார் 60-வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவருடைய பிள்ளை பிரம்மானந்தப் பரதேசி.

வெங்குப் பிள்ளை. திருநெல்வேலி. பிடிலில் ராகம், பல்லவிகளை லயபத்தமாயும், விரிவாயும் வாசிப்பார்.

வெங்கோப ராவ். இவர் உமையாள்புரம் கிருஷ்ண சுந்தர ஐயரின் மாணாக்கர். தஞ்சாவூரில் பிடில், ஜலதரங்கம், மிருதங்கம் வாசிப்பதிலும் பாடுவதிலும் சிறந்த வித்துவான். இவர் தம்பி இராம ராவும் இவரைப் போலவே சிறந்த வித்துவான்.