வே வேங்கடகிரியப்பா. ஐதராபாத். அநேக ஜாவளிகளைச் செய்திருக்கிறார். வேங்கடசாமி. பூசலை. இவர் நாகசுரம் நன்றாய் வாசிப்பார். வேங்கடமகி. கி. பி. 1660. கோவிந்த தீக்ஷதரின் குமாரர். இவர் தமயனார் எக்கிய நாராயண தீக்ஷதரிடத்திலும் சங்கீத வித்துவான் தானப்ப ஆசாரியார் இடத்திலும் சங்கீதமும் வாத்தியமும் வாய்ப்பாட்டும் சங்கீத இலட்சிய இலட்சணங்களும் கற்றுக் கொண்டவர். இவர் வீணை சுருதி சுரம் மேளம் இராகம் டாயம் கீதம் பிரபந்தம் தாளம் முதலியவைகளை விஸ்தரித்து ‘சதுர்தண்டிப் பிரகாசிகை’ என்ற சங்கீத நூலைச் செய்திருக்கிறார். தனித்தனியான கீதம்பிரபந்தம் செய்திருக்கிறார். திருவாரூர் தியாகராஜர் பேரில் 24 அஷ்டபதி செய்திருக்கிறார். வேங்கட ரமணதாஸ். இவர் விஜயநகரம் சமஸ்தானத்தில் வீணை வித்துவானாயிருக்கிறார். வீணை குருராயாச்சாரியாரின் பௌத்திரர். சங்கீத சாகித்தியத்திலும், ராகம் பல்லவி பாடுவதிலும் சிறந்த வித்துவான். வீணையில் அபார சாதகம் செய்திருக்கிறார். கடின பாகங்களை சுலபமாயும் வேகமாயும் வாசிப்பார். வேணு. சென்னப்பட்டணம் முத்துசுவாமி நட்டுவரின் குமாரர். தன் தகப்பனாரிடமும் திருவத்தூர் வீணை தியாகையரிடமும் சொல்லிக் கொண்டு சங்கீதத்திலும் வீணையிலும் பிரசித்த வித்துவானாயிருக்கிறார். இவர் மாணாக்கர் மைலாப்பூர் சுப்புக்குட்டி ஐயர், பார்த்தசாரதி ஐயர். வேணுகோபாலதாஸ் நாயுடு. இவர்க்கு வீர சூர வீர கண்டாமணி வேணுகோபாலதாஸ் நாயுடு என்று பெயர். இவர் சிவகங்கை சமஸ்தானத்தில் நடந்த சங்கீத பரிட்சையில் கண்டாமணி விருதுபெற்ற வித்துவான். வேணுகோபாலன். நாகப்பட்டணம். இவர் மிகவும் நன்றாய் நாகசுரம் வாசிப்பார். வேதநாயக சாஸ்திரியார். 1774-1864. இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் சிறந்த வித்துவான். தஞ்சாவூரில் சரபோஜி மகாராஜா சபையில் மந்திரி பாவா பண்டிதர் நாளில் சங்கீத வித்துவானாயிருந்தார். போன்சலே இராஜ வம்ச சரித்திரத்தைப் பாடலாகப் பாடி சன்மானம் பெற்றிருக்கிறார். ஞானபத கீர்த்தனைகள், பெத்தலேகம் குறவஞ்சி, ஞானக்கும்மி, பராபரக்கண்ணி, ஆரணாதிந்தம், ஞானவுலா, ஜெபமாலை, பேரின்பக்காதல் முதலிய சிறியதும் பெரியதுமான 120 நூல்கள் செய்திருக்கிறார். இவருக்கு இராஜா கட்டிக் கொடுத்த வீட்டில் நாளது வரையில் இவருடைய பரம்பரையார் பாடகர்களாயிருக்கிறார்கள். இவர் பரம்பரையில் ஞானதீப அம்மாள், ஞானசிகாமணி சாஸ்திரியார், நோவா ஞானாதிக்கம் சாஸ்திரியார், எலியா தேவசிகாமணி சாஸ்திரியார் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் பிரக்கியாதியா யிருந்தார்கள். வேதநாயகம் பிள்ளை. முன்சீபுதார், மாயவரம். இவர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். தமிழிலும் சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் பிரக்கியாதிபெற்ற வித்துவான். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் செய்த கீர்த்தனங்களில் ஆயிரம் கீர்த்தனைகளுக்கு மேல் புஸ்தகமாக அச்சிடப்பட்டு வழக்கத்திலிருக்கின்றன. இவர் சமுசாரமும் குழந்தைகளும் பாட்டிலும் வீணையிலும் பழக்கமுள்ளவர்கள். நீதிநூல் முதலான பல நூல்கள் செய்திருக்கிறார்.
|