வேதபுரி குப்புசாமி தீக்ஷதர். கும்பகோணம். எல்லா வாத்தியங்களிலும் சிறந்த வாசிப்புள்ளவர். வேதா. இவர் "சங்கீத மகரந்த" என்ற நூல் செய்திருக்கிறார். வேதாந்த பாகவதர். கல்லிடைக்குறிச்சி. முத்து சாஸ்திரியாரின் குமாரர். வாய்ப்பாட்டில் கெட்டிக்காரர். வை வைகுண்ட சாஸ்திரி. இவர் சமஸ்கிருதத்தில் இனிய நடையில் விசேஷ அர்த்த புஷ்டியுள்ளதாய் தேசிக ராகங்களில் வைகுண்ட முத்திரையுடன் அநேக கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். வைத்தி. இவரை மணத்தட்டு வைத்தியநாதையர் என்பார்கள். கர்நாடக சுத்தமாய்ப் பாடுவார். வைத்தியநாத ஐயர். நடுக்காவேரி. அதிமனோகரமாய்ப் பாடுவார். வைத்தியநாத ஐயர். மாயவரம். வீணையில் பிரக்கியாதி பெற்ற வித்துவான். நல்ல லயஞானமுள்ளவர். பல்லவி பாடுவதில் மகாவித்துவான். இவர் குமாரர் சபேசையர் வீணை சுகமாய் வாசிப்பார். வைத்தியநாத ஐயர். இவரைக் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரென்பார்கள். இவர் வாய்ப்பாட்டில் சிறந்தவர். வைத்தியநாதையர். அறந்தாங்கி. சிட்டியில் அதிக அப்பியாசமுள்ளவர். நன்றாய்ப் பாடுவார். வைத்தியநாத பாகவதர். சூலமங்கலம். அரிகதை பக்தி ரசமாய்ச் செய்வார். வைத்தியநாத பாகவதர். நெமலி, ராஜமன்னார் கோவில். அரிகதை நன்றாய்ச் செய்வார். வைத்தியநாத பாகவதர். மெலட்டூர். சுகமாய் அரிகதை செய்வார். வையாபுரி முத்து. திருப்பாதிரிப்புலியூர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். மகா வைத்தியநாதையர். -இவர் தஞ்சாவூருக்குச் சமீபத்திலுள்ள வையைச்சேரி துரைசாமி ஐயரின் குமாரர். சிறு வயதிலேயே தகப்பனாரிடமே சொல்லிக் கொண்டு சுகமாய்ப் பாடவும் சபைகளில் கச்சேரி செய்யவும் கூடியவிதமாய்ச் சங்கீத வித்தையை நன்றாய் அப்பியாசம் பண்ணினவர். நல்ல நியமத்தையுடையவர். சங்கீதத்திலும் சாகித்தியத்திலும், வாய்ப்பாட்டிலும் சிறந்த வித்வான். கீர்த்தனைகளை அற்புதகரமாயும் கனநய தேசிகங்களைத் தெரிந்தும் பாடுவார். அநேக சமஸ்தானங்களில் விருதுகள் பெற்றிருக்கிறார். சக்காராம் சாகிப் அவர்கள் சபையில் சங்கீத வித்வானாயிருந்தவர். 72 மேளக் கர்த்தா ராகமாலிகை பாடி தஞ்சை சங்கீதமாலில் சக்காராம் சாகிப் முன்னிலையில் அரங்கேற்றி விசேஷ சன்மானம் பெற்றவர். இவர் மிகச் சிறு பிராயத்தில் அதாவது 12-வது வயதில் கல்லிடைக்குறிச்சியில் திருவாவடுதுறையாதீன மடத்தில் அனேக வித்துவான்கள் மத்தியில் பாடிக்கொண்டிருக்கும்போது மகா வைத்திய நாதையர் என்ற பட்டப் பெயர் பெற்றவர். பழமாறனேரி பிடில் சாமிநாதையர், உமையாள்புரம் சாமிநாதையர், பட்டணம் சபேசையர், மாயவரம் வீணை வைத்தியநாத ஐயர் முதலிய வித்துவான்கள் இவர்களின் மாணாக்கர்கள். இதில் வராதவர்களின் பெயர்களைப் பிற்பாகத்திற் பார்க்க.
|