இந்தியாவின் இராகங்களை வாசிக்க முடியாதென்று சொல்லும் ஆக்ஷேபனையும் கலந்து பெருங்கூச்சலிடுகிறது. இவைகளில் பன்னிரண்டு அரைச்சுரங்களாலாகிய 72 மேளக்கர்த்தா இராகங்களை ஆர்மோனியம் பியானாவில் பாடுவதில் அபசுரமுண்டாகாதென்பது என் நிச்சயம். அரை அரையாயமைந்த இந்தப் பன்னிரண்டு சுருதிகளில் கால் காலாயமைந்த 22 சுருதியுள்ள இராகங்களைப் பாடுவது கூடியதல்ல. எந்த சுருதியுள்ள சுரங்களை பாடுவதில் உபயோகிக்கிறோமென்று தெரியாமையினால் இப்படிச் சொல்லுகிறார்களோவென்று நான் சந்தேகிக்கிறேன். திருஷ்டாந்தரமாக சதுர்சுருதி ரிஷபமும் தைவதமுமுள்ள தீரசங்கராபரண இராகத்தை ஆர்மோனியம் பியானாவில் வாசிக்கலாமேயொழிய பஞ்ச சுருதி ரிஷபமும் தைவதமுமுடைய சங்கராபரண இராகத்தை அதன் எல்லா அழகோடும் படிக்கமுடியுமா? அந்த இராகத்திற்கு ஜீவனாக விளங்கும் பஞ்ச சுருதி ரிஷபமும் தைவதமும் நீங்கினால், எல்லா அம்சத்தில் ஒத்திருந்தும் ஜீவனற்ற உடல்போலவே இருக்குமென்று எண்ணுகிறேன். இது தவிர வேறு காரணமிருக்குமானால் அல்லது நான் கேட்பது தப்பாயிருக்குமானால் தயவாக மன்னித்து வீணையில் காணப்படும் சுரங்களுக்கும் ஆர்மோனியத்தில் காணப்படும் அரைச் சுரங்களுக்கும் பேதமின்னதென்று தெளிவாகச் சொல்லக் கேட்டுக் கொள்ளுகிறேன். (22 சுருதிகளைப் பற்றியும் கால் சுருதிகளைப் பற்றியும் என்னுடைய அபிப்பிராயம் சற்று வித்தியாசப் பட்டிருந்தாலும் தற்காலத்தில் பிரஸ்தாரத்திலிருப்பதை அநுசரித்துச் சொல்லுகிறேன்.) 10. முன்னுள்ள பிரபல வித்துவான்களில் அநேகர் ஒரு இராகத்தை பத்து நாள் இருபது நாட்களாக முன் வந்த சங்கதிகள் திரும்ப வராமல் பாடினார்களென்று சொல்லிக் கொள்ளுகிறார்களே. ஆனால் தற்கால வித்துவான்கள் கால்மணி அரைமணி நேரம் பாடுவது அபூர்வமாகவிருக்கிறதே. முன்னுள்ள பெரியோர்கள் விரிவாகப் பாடுவதற்கு உதவியாயிருக்கும் அநேக வகையான பிரஸ்தாரங்களை மனனம் பண்ணி பின் மனோதர்மம் உண்டாகியிருக்கலாமென்று யூகிக்க இடமிருக்கிறது. எத்தனை வகையான பிரஸ்தாரங்களுண்டு? அவைகள் இப்போது எங்கே கிடைக்குமென்று தாங்கள் தயவாய்த் தெரியப்படுத்துவீர்களா? இந்தியாவின் கீதத்தை உள்ளபடியே கேட்டு ஆநந்திக்கும் அதிபுத்தி சூட்சமமுள்ள சில கனவான்கள். அரைச்சுரங்கள் நீங்கலாக வரும் சுருதிகளின் நிச்சயம் தெரிய விசாரிக்கும் பொழுது சிறந்த வித்துவான்களுங்கூட அவைகள் கமகமென்றும் அவைகள் பத்து வகைப்படுமென்றும் கமகத்துக்கு அர்த்தம் மறைபொருளென்றும் எங்கள் பெரியோர் இப்படி எங்களுக்குச் சொல்லி வைத்தார்களென்றும் அதை எழுதிக்காட்ட முடியாதென்றும், நெடுநாள் கேள்வியினாலேயே அது வர வேண்டுமென்றும் சொல்லுகிறதைப் பல தடவைகளிலும் கேட்டிருக்கிறேன். தாமறிந்த பல நலமுள்ள கலைகளையும் உள்ளது உள்ளபடியே பிறர் அறிந்து கொள்ளப் போதுமான மறைப்பற்ற நூல்களும் உபகரணங்களுமுண்டாக்கி கலாசாலை ஏற்படுத்திக் கற்றுக் கொடுத்துத் தம் காருண்யத்தையும் திறமையையும் பல வகையிலும் நிலைநாட்டும் மறைப்பற்ற ஆங்கிலேயர் அரசாட்சி செய்யும் இக்காலத்திலாவது இந்தியாவின் சங்கீத இரகசியங்களையும் மூலாதாரப் பாடங்களையும் விதிகளையும் தெளிவாக யாவருக்கும் விளங்கும்படி செய்தால் இந்தியாவின் சங்கீதத்துக்கு இப்போதிருக்கும் பெருமையை விட அனந்த மடங்கு பெருமையாயிருக்குமென்று உத்தேசித்து இவைகளைக் கேட்டுக்கொண்டேன். கற்றறிந்த தங்கள் முன் தகுதியற்ற இச்சிறு சந்தேக வினாக்களைக் கேட்டதற்காக என் மேல் வருத்தமடையாமல் மன்னித்துச் சரியான சமாதானம் சொல்வீர்களென்று நம்பி இவ்விண்ணப்பம் தங்களுக்குச் செய்து கொண்டேன்." மேற்கண்ட சில சந்தேக வினாக்களுக்கு ஒருவரும் எவ்விதமான பதிலும் நாளதுவரை எழுதவில்லை.
|