5. ஒவ்வொரு இராகங்களின் சஞ்சாரக்கிரம மறிவதற்குக் கீதம் ஆதாரமென்கிறார்களே. அப்படிப்பட்ட கீதம் இப்போதுண்டாக்கக் கூடியவர்கள் இருப்பார்களானால் பின்வரும் சுருதியுள்ள சுரங்களில் தமக்குப் பிரியமான ஒரு தாளத்தில் கீதம் அமைத்து கீதம் அமைக்கும் விதத்தையும் என் சொற்ப அறிவுக்குத் தெளிவாக விதியுடன் சொல்ல அநுக்கிரகிப்பார்களா? 24-வது மேளம் வருணப்பிரியையில் ஜன்னியமான நவநீதபஞ்சமம் சகமத பதநிசா சநிபமரிசா த-நி. 6-வது சுருதி க-ரி வ-சுருதி சுத்தமத்திமம். 6. சிலகால முன்னுள்ள தெலுங்கு நாட்டு க்ஷேத்திரிஞ்ஞரவர்கள், திருவாரூர் முத்துசாமி தீக்ஷதரவர்கள், தஞ்சாவூர் சாமா சாஸ்திரிகள், திருவையாறு சுப்பிரமணிய ஐயரவர்கள், மைசூர் சதாசிவராயரவர்கள், ஆயிரமாயிரமாய்க் கீர்த்தனங்கள் செய்த திருவையாறு தியாகராஜ ஐயரவர்களும் செய்த கீர்த்தனங்கள் மிகவும் அருமையானதாயிருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். அவர்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு கீர்த்னங்களுண்டு பண்ணினார்கள்? அவர்களுக்காதாரமாயிருந்த இரகசிய முறைகளைப் பின்னுள்ள யாருக்காவது உபதேசித்தார்களா? இராம பக்தனான தியாகராஜ ஐயரவர்கள் தெய்வ சந்நிதியில் புதிது புதிதான கீர்த்தனம் செய்து பகவானைத் துதித்துக் கொண்டு வருகையில் பழக்கமான இராகங்களில் பல கீர்த்தனங்கள் செய்வதைப் பார்க்கிலும் அபூர்வமான வெவ்வேறு இராகங்களில் பகவானைத் துதிக்க வேண்டுமென்று விரும்பி இராகங்களடங்கியதும் பாடக்கூடிய விதத்தைத் தெரிவிப்பதுமான ஒரு சுவடியை நாரதர் கொடுத்தாரென்று பரம்பரையாய்ச் சொல்லப்பட்டு வருகிறது. அதைக் கொண்டும் உலகெல்லாம் மதிக்கத் தகுந்த சங்கீத ஞானத்தின் உயர்வு ஒவ்வொரு கீர்த்தனங்களிலும் அமைந்திருப்பதைக் கொண்டும், இராகங்களைச் சுலபத்தில் பாடக்கூடிய ஒரு உத்தமமும் சுலபமுமான முறை இருக்க வேண்டுமென்று நானினைத்தது தப்பாகமாட்டாதென்று துணிவுடன் தங்கள் சமுகத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அந்தக் கிரந்தம் இப்போதிருக்கிறதா? யாரிடமிருக்கிறது? 7. மனிதர் நினைக்கக்கூடிய வெவ்வேறு சுருதி பேதமுள்ள எல்லா இராகங்களையும் தெரிவிக்கும் தாய் இராகங்களடங்கிய மேளக்கர்த்தா இப்போதிருக்கிறதா? 8. சுத்தரிஷபமும் சாதாரண காந்தாரமுமுள்ள அநுமத்தோடியென்னும் 8வது தாய் இராகத்தில் இரண்டாவது சுருதி ரிஷபமும், மூன்றாவது சுருதி காந்தாரமுமுள்ள தோடியும் மூன்றாவது ரிஷபமும் ஐந்தாவது காந்தாரமுமுள்ள பூபாளமும், முதலாவது ரிஷபமும் மூன்றாவது காந்தாரமுமுள்ள அசாவேரியும் ஜன்னிய இராகங்களாக வரலாமா? ஒரு வேளை வேறு மார்க்கமின்றி இரண்டின் கீழ் மூன்றையும் நாலின் கீழ் ஐந்தையும் சேர்த்துக் கொண்டு ராகபூபாளம் உண்டாக்கினார்களென்று வைத்துக் கொள்வோம். இரண்டின் கீழ் ஒன்றையும் நாலின்கீழ் மூன்றையும் வைத்து அசாவேரியைக் குறிப்பதற்கென்ன நியாயம்? இரண்டில் ஒன்று தப்பாயிருக்க வேண்டுமே. சரி தப்பான இரண்டு பேதங்களை ஒரு மேளத்தில் குறிக்கும் வழக்கம் மிகுந்திருப்பதினால் முறைப்படி கற்க விரும்புவோர்க்கு முரண்படாதா? மயக்கமுண்டாகாத வேறு முறை மகான்களால் சொல்லப்பட்டிருக்குமென்பதே என் துணிவு. அப்படி இருக்குமானால் சுருதி தவறுதலின்றி ஒவ்வொரு இராகத்தையும் யாவரும் சுலபமாயறிந்துகொள்ள ஏதுவாகுமென்றே இதைக் கேட்கிறேன். 9. ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரண்டு அரைச்சுரங்களில் நேத சுருதி ஷட்ஜமம் பஞ்சமம் நீங்கலாக மற்ற சுருதிகள் சரியான அளவிலில்லையென்றும் அளவு கணக்கின்படி மாத்திரம் வைக்கப்பட்ட சுருதிகள் சரியல்லவென்றும் தற்காலத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதோடு சுருதி தப்பாயிருப்பது நிமித்தம் ஆர்மோனியம் பியானா முதலிய வாத்தியங்களில்
|