பக்கம் எண் :

237
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

தொட்டில் பிள்ளை பருவமுதல் தொண்டு கிழம்வரையும் தொடர்ந்து இன்பந்தரத்தக்கது நாதமும் கீதமுமே. இவ்வின்பத்திலும் என்று மழியாத பேரின்பத்திற்கு மனதைப் பக்குவப்படுத்துவதும், பக்குவமடைந்தவரை பரவசப்படுத்துவதும், பரவசமடைந்தவர் ஆநந்தத்தையறிவிப்பதும் நாதமும், கீதமுமே. ஓ மென்ற நாதத்தால் உலகெல்லாம் படைத்து அவற்றுக்குயிர் வடிவாக நின்ற முதல்வனே நாதமென்றும், வார்த்தையென்றும் அழைக்கப் பெறுவானானால் நாதத்தின் உயர்வை வேறெதைக் கொண்டு உவமை சொல்ல? காணப்படு மெல்லாமாயும், ஜீவர்களின் ஜீவனாயும், ஜீவர்களின் ஊக்கமாயும், ஊக்கத்தில் உணர்வாயும், உணர்வில் அறிவாயும், அறிவில் ஆநந்தமாயும், ஆநந்தத்தில் நாதமாகி, எழுவகைத் தோற்றத்திற் கெல்லையாய் நின்ற அவனையே ஏழுசுரங்களாக அமைத்து அவற்றின் உட்பிரிவுகள் அல்லது அலைவுகளையே சுருதிகளாக்கி இன்னிசை கொண்டு இன்னிசைக் காதாரமூர்த்தியைத் துதித்து நல்லிசை பெற்றார்கள் பெரியோர்கள்.

இவ்வருமையுணராத சிற்றறிவுடையோர் தாம் பெரிதெனமதிக்கும் லௌகீக கருமங்களில் கீதத்தை உபயோகித்தும் அததிலும் நாடியதை யடைந்தார்கள். இப்படி இம்மை மறுமையென இருநிலைகளிலும் உதவியாயிருக்கும் நாதகீதத்தை ஏற்றபடி கற்றறிந்து கொள்வதும் அறிந்தபடி சாதிப்பதும், சாதித்தபடி மற்றவர்க்கு அறிவிப்பதும், அறிவித்துத் தானும் பிறரும் ஆநந்திப்பதும் ஜீவர்களின் இயல்பான பிரியம். ஆனால் விரும்பியபடி யாவரும் அறியவும் சாதிக்கவு முடியாமல் அரைகுறையாய் நின்று விடுகிறார்கள். அப்படி நின்றுவிட்டாலும் இன்னிசையில் ஈடுபடும் இயல்பு அதிக முடையவர்களாயிருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களில் நானுமொருவன். இதைப் பார்க்கும் சங்கீத வித்துவ சிரோமணிகளே! எனக்குத் தோன்றும் சில சந்தேகங்களை நிவர்த்தித்து இன்னிசை வளர்ந்தோங்க கிருபை செய்வீர்களென்று தங்களை மிகவும் பிரார்த்திக்கிறேன்.

1. சப்த சுரங்கள் ஆதியில் எப்படி கண்டு பிடிக்கப்பட்டது? அவைகளுண்டான கிரமமாவது அல்லது இப்போதுண்டாக்கும் கிரமமாவது நானறிய தயவாய்த் தெரிவிப்பீர்களா?

2. சப்த சுரமுள்ள அல்லது C-C வரையுள்ள ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டு சுருதிகளுண்டென்கிறார்களே. அவைகள் அப்படித்தானா? அப்படியானால் அவைகளின் பெயரென்ன? சங்கீதத்தில் தேர்ந்த சாரங்கதேவர், மதங்கரிஷி முதலியவர்களின் அபிப்பிராயம் எப்படி? அவர்கள் இருபத்திரண்டு சுருதிக்கு இட்டு வழங்கிய தீவிர, குமத்தவதி, மந்த, சந்தோவதி முதலிய இருபத்திரண்டு பேர்களும் தீப்த, ஆயுத, ம்ருது, மத்திய, கருணை முதலிய ஐந்து ஜாதிகளும் இப்போது வழங்கி வருகின்றனவா? வழங்காதிருக்குமானால் வேறு இருபத்திரண்டு பேர்களாவது வழங்கி வருகிறதா என்று நானறியலாமா? நாலு ஷட்ஜமம், 4 மத்திமம், 4 பஞ்சமம், 3 ரிஷபம், 3 தைவதம், 2 காந்தாரம், 2 நிஷாத மென்கிறார்களே. அவைகளின் ஸ்தானமும், பெயரும் பிரயோகமும் இன்னதென்று அநுக்கிரகிக்கலாமா?

3. நேச சுருதி ஷட்ஜமம், பஞ்சமம் நீங்கலாக மற்ற சுரங்களின் சுருதி பேதத்தாலுண்டாகக் கூடிய இராகங்கள், இப்போது வழங்கி வரும் ஆயிரத்தெட்டுதானா? அல்லது வேறு இராகங்கள் உண்டாக இடமுண்டா?

4. சுருதி பேதங்களினாலுண்டாகும் ஆயிரத்தெட்டுக்குட்பட்ட அல்லது மேற்பட்ட ஒரு இராகத்தை அதற்குரிய சுருதியில் சஞ்சாரக் கிரமப்படி வக்கிர வர்ஜிய விதிப்படி பாடுவதற்கு யாவரும் சுலபமாய்ப் பார்க்கக் கூடிய வழியுண்டுமா? அல்லது பாடப்படுகிற ஒரு இராகம் சரி தப்பென்று சொல்வதற்குத் தகுந்த ஆதார பிரமாணமுண்டா?