VII. சங்கீத வித்தியா மகாஜனசங்கம், தஞ்சை. 1. சங்கம் கூட்டுவதற்கு நேரிட்ட காரணம்.
அமிழ்தினும் மேலானதெனக் கொண்டாடத்தகும் சங்கீதத்தையும் அதன் ரகசியங்களையும்அறியவேண்டுமென்று வெகுநாள் பிரயாசப்பட்டேன். சென்ற சில வருஷங்களாக சங்கீதத்தைப் பற்றிய வியாசங்கள் வர்த்தமான பத்திரிகை மூலமாக அடிக்கடி காணப்பட்டன. அவைகளில் சொல்லிய விஷயங்கள் பல பலவாயும் சில பொதுக் குறிப்புகளாயுமிருந்தன. என்றாலும் அவற்றில் சுரங்களைப் பற்றிய சில சந்தேகங்களும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களையும் ஒத்துப்பார்த்ததனால் உண்டான சந்தேகங்களும் துவாவிம்சதி சுருதிகளும் கர்நாடக சங்கீதமும் கலந்துண்டான சந்தேகங்களும் அங்கங்கே காணப்பட்டன. இவ்வியாசங்களை கவனித்த எனக்கு மேற்கண்ட சந்தேகங்கள் சரியானவையல்ல என்றும் இவைகளுக்குச் சரியான சமாதானம் சொல்லும் சிறந்த வித்துவ சிரோமணிகள் தென்னிந்தியாவில் யாராவது இருப்பார்கள் என்றும் அவர்கள் இச்சந்தேகங்களுக்குப் பதில் சொல்லும் சிறந்த வாக்கியங்கள் மற்றவரைப் போதித்து நிற்கும் என்று உத்தேசித்து சுதேச மித்திரன், மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பத்திரிகையாகிய செந்தமிழ், Hindu முதலிய வர்த்தமான பேப்பர்களுக்கு எழுதினேன். அவ்வியாசம் வருமாறு :- இந்தியாவின் சங்கீதம். "பசும் பொன்னெனச் சிறந்து விளங்கும் வர்த்தமானியே! சென்ற பத்து வருஷங்களாக இந்தியாவில் சங்கீத மூலாதார ரகசியங்களை அறிய விரும்பி விசாரித்துக் கொண்டிருக்குமெனக்கு உன் அங்கத்தில் ‘இந்தியாவின் சங்கீத’ மென்ற முகப்புடன் விளங்கிய வியாசம் மிகவும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தந்தது. நீ சிறந்த அநேக வித்துவான்களாலும் இராஜாதி இராஜாக்களும் போற்றப்பட்டு புதிது புதிதாய் பல அரிய விஷயங்களுடன் ஒவ்வொரு நாளும் பிரகாசிப்பதைக் கொண்டு இதை யுனக்கெழுதுகிறேன். உலகில் தோன்றிய மானிட வர்க்கமும் மிருக பக்ஷி ஊர்வன வர்க்கமும், தங்கங் தங்களுக்குத் தகுந்தபடி இன்ப துன்பங்களை விளக்கும் ஓசையுடையனவாகவும், இன்னிசையில் அதிகப் பிரியமுடையனவாகவும் விளங்குவது யாவரும் அறிந்த விஷயம். ஓரறிவுள்ள புல், பூண்டு, சிருக்ஷாதிகளுள்ளும் தென்றலினால் பூக்கும் மா, பலா, ஈந்து, புளி, நெல்லி, வேம்பு, சண்பகம், மகிழ் முதலிய விருக்ஷங்களும், மல்லிகை குடமல்லிகை முதலிய செடி இனங்களும், மேல் காற்றினால் மலரும் மலை விருக்ஷங்களும், தாழை இனங்களும், வடந்தையினால் புஷ்பிக்கும் பாரிசாதம், பிச்சி, முல்லை, சாமந்தி, ரோஜா, தாமரை முதலிய செடி வகைகளும், எல்லாப் புல்லினங்களும் காற்றில் கலந்த சாந்தமான தொனியினால் வசியப்பட்டு புஷ்பிக்க ஆரம்பிக்குமானால், ஆறறிவுள்ள மனிதர் இன்னிசைக்கு இரங்காதிரார். மெல்லிய மந்தமான நாதத்தில் தெய்வமே இருந்து ஒரு சிறந்த பக்தனோடு பேசினாரென்பதைக் கவனிக்கையில் அவர் தாமே நாத சொரூபியாயிருந்து தம் நாத வேற்றுமையினால் அண்டபுவன சராசரங்கள் யாவற்றையும் நடத்திக் கொண்டு வருகிறாரென்று நாமறிய வேண்டும்.
|