பக்கம் எண் :

246
தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றி மேற்றிசைக்கு எழுதிய வியாசம்.

இதன் முன்னுள்ள இங்கிலீஷ் வியாசத்திற்குச் சரியான தமிழ்-

இந்தியாவின் சங்கீதம்.

"சீர் பெற்றிலங்கும் மேற்றிசை அன்பர்களே! சில காலமாக இந்தியாவின் சங்கீதம் எப்படிப்பட்டதென்று அறிய விரும்பிச் சுற்றுப் பிரயாணஞ் செய்து அங்கங்கே விசாரித்துக் கொண்டு வரும் ஆங்கிலேய துரைகளை நான் சந்திக்க நேரிட்டதில், இந்தியாவின் சங்கீதம் இப்படிப்பட்ட தென்றறிய அவர்களுக்கு விருப்பமிருக்கிற தென்றறிந்து இதை எழுதத் துணிந்தேன். சில நாள் முன் சங்கீத விஷயத்தை விசாரிப்பதற்கென்று வந்த மிஸ்டர் பாக்ஸ் ஸ்றிராங்குவே தஞ்சாவூரில் அநேக சங்கீத வித்துவான்களை வரும்படி செய்து, பல விசாரணைகள் செய்து போனார். அவர்,

"இந்தியாவிலுள்ள சங்கீத வித்துவான்கள் சங்கீத இரகசியங்களை மறைபொருளாக வைத்துக் கொண்டு தங்களிடம் கற்க விரும்பும் மாணாக்கர்களுக்கு பூர்ணமாய்க் கற்றுக் கொடுக்காமல் போகிறார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் சுருதியைப் பற்றி ஏன் விசாரிக்கிறார்கள். சங்கீதம் கற்கும் நூறு பேரில் ஒருவன் கூட சுருதி சாஸ்திரத்தைப் பற்றி விசாரிக்கிறதில்லை. இந்தியாவில் மிக அருமையான சங்கீத துக்கடாக்கள் ஜர்மனியில் பிரசுரஞ் செய்யப்பட்டு அமெரிக்காவில் அவை விற்று முதலாகுமேயொழிய ஒரு இந்தியன் அதை முன்னுக்குக் கொண்டு வர நினைக்கிறதில்லை" என்பதாக மெயில் பேப்பரில் எழுதியிருக்கிறார்.

இவ்வியாசத்தைக் கண்ட நான் அவர் சொல்லும் விஷயத்தைப் பற்றிச் சிலவைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

1. சுருதியைப் பற்றி அறிய விரும்புவோர் இந்தியாவின் சங்கீத நூல்களைத் தேடி விசாரித்தால் அவற்றில் சுருதி நிக்ஷயம் திட்டமாய்ச் சொல்லப்படவில்லை.

2. சுருதிகளால் இராகங்களையுண்டாக்கும் விதமும் சொல்லப்படவில்லை.

3. அப்படியுண்டான இராகங்கள் யாவுமடங்கிய மேளக்கர்த்தாவும் சொல்லப்படவில்லை. இம்மூன்று விஷயத்திலும் திட்டமான அறிவில்லாமல் சந்தேகம் நிவர்த்தியாவதெப்படி? ஒரு இராகத்தில் தங்கள் ஆயுள் முழுவதும் செலவு செய்து இனிமையாய்ப் பாடி கூடியவரை அதில் கீதமும் கீர்த்தனங்களும், வர்ணங்களும் பல செய்து பின்னடியார்க்கு வைத்துப் போனார்களேயொழிய, இரகசியம் சொல்லவில்லை. பழமையான இராகங்களே தற்காலத்திலும் படிக்கப்பட்டு வருகின்றன. புதிய இராகங்கள் பலவற்றிற்கு ஆரோகணம் அவரோகணமிருந்தும் படிக்க நினைப்பாரில்லை. வானமும் பூமியும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதான செயல்களும் காக்ஷிகளுமுடையதாகத் தோன்றுவதையறிந்தும் இந்தியாவின் சங்கீதத்திலோ பழமையே பாராட்டப்பட்டு வருகிறது.

பழமையிற் சிலவைகளை உயர்ந்தவை என்று நான் ஒப்புக் கொண்டாலும் சங்கீத விஷயத்திலோ பழமையான சிற்சில அபிப்பிராயங்கள் இந்தியாவின் சங்கீதத்தை முற்றும் முன்னுக்கு வராமல் தடுத்தன என்று நினைக்கிறேன்.

இச்சமயத்தில் இன்னும் நான் சொல்லவிருக்கும் சுருதி, இராக பரிசோதனை, கர்த்தா முதலிய விஷயங்கள் தங்கள் மனதுக்கு நியாயமென்று படும்படி முதல் முதல் இந்தியாவின் தாய் இராகங்களையும் அவைகளில் ஜன்னியமாகும் இராகங்களையும் பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன்.

1. தாங்கள் இப்போது வழங்கி வரும் ஆர்மோனியம் அல்லது பியானாவில் மத்திய ஸ்தாயியில் C-C வரையுள்ள வெள்ளை நோட்டுகள் இந்தியாவில் 29-வது தாய் இராகமென்று வழங்கி வரும் தீரசங்கராபரண இராகத்துக்கு ஆரோகணமாகும். அது போலவே அவரோகணமும் சேர்ந்து இராகம் பூர்த்தியாகிறது.