2. அதே வெள்ளை நோட்டில் அடுத்த D-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 22-வது தாய் இராகமென்று வழங்கிவரும் கரகரப்பிரியாவாகிறது. 3. வெள்ளை நோட்டில் மூன்றாவதான E-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 8-வது தாய் இராகமான ஹநுமத் தோடி யாகிறது. 4. வெள்ளை நோட்டில் F-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 65-வது தாய் இராகமான மேஷகல்யாணி யாகிறது. 5. வெள்ளை நோட்டில் மூன்றாவதான G-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 28-வது தாய் இராகமான ஹரிகாம்போதி யாகிறது. 6. வெள்ளை நோட்டில் மூன்றாவதான A-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 20-வது தாய் இராகமான நடபைரவி யாகிறது. 7. வெள்ளை நோட்டில் மூன்றாவதான B-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் G இல்லாத தோடியாகிறது. இது எட்டாவது தாய் இராகமான ஹநுமத்தோடியில் ஜன்னியமென்று வழங்கி வருகிறது. இவ்வேழு இராகங்களைப் பற்றியும் நோட்டேஷனில் முன்காட்டப்பட்டிருக்கிறது. ஆர்மோனியத்தில் காணப்படும் 12 நோட்டுகளுக்கும் இந்தியாவில் வழங்கிவரும் வீணையின் 12 சுரங்களுக்கும் இராகங்களில் வரும் 12 சுரங்களுக்கும் எவ்விதமான பேதமுமில்லை. இப்பன்னிரண்டு சுரங்களுக்கும் இடையில் வரும் அநுசுரங்கள் மாத்திரம் பியானா, ஆர்மோனியாவில் காட்டக்கூடியவைகளல்ல. ஆனால் 12 சுரங்களினால் மாத்திரமுண்டாகும் 72 தாய் இராகங்களும் அவையுண்டாகும் விதமும் முதல் முதல் தெரிந்து கொள்ள சுலபமானவை. தாய் இராகமென்பது சுரங்களின் கலப்பினால் எத்தனை வெவ்வேறு பேதங்கள் வரக் கூடுமோ அவைகளிலொன்று. தாய் இராகம் எப்போதும் ஆரோகண அவரோகணத்தில் சம்பூர்ணம் அல்லது 7 சுரங்களுடையதாகவே இருக்கும். அது தாய் இராகமென்றும், கர்த்தா இராகமென்றும், மேளமென்றும் அழைக்கப்படும். ஜன்னிய இராகமென்பது மேற்காட்டிய தாய் இராகத்தின் சுருதியையே உடையதாயிருக்கும். ஆனால் அதின் ஆரோகணத்திலாவது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒன்று அல்லது இரண்டு சுரங்கள் இல்லாமலாவது மாறியாவது வரும். இப்படி மாறி வருவதற்குரிய விபரமும் கணக்கும் பின்னால் எழுதப்படும். மேற்கண்ட தாய் இராகங்கள் ஏழையும் போலவே 12 சக்கரத்துள்ள கர்த்தா இராகங்கள் 72-ம் அவைகளில் ஜன்னியமாகும் ஆயிரமாயிரமான இராகங்களையும் அதனதன் சுருதிப் படி மற்ற சுரங்கள் கலவாமல் படிப்பதே இந்தியாவின் சங்கீதம் அருமையுடையதென மற்றவர் நினைப்பதற்குக் காரணம். இவ்வருமையான முறையும் காலத்துக்குக் காலம் மாறுபட்டு இராகத்துக்குரிய சுருதிகள் வேறுபட்டு அந்நிய சுரங்களுங்கலந்து பழக்கத்துக்கு வந்து கொண்டேயிருக்கிறது. இப்படிக் கிரமம் தப்பிப்படிப்பதற்குக் காரணம், தவறுதலென்றறிந்து திருத்திக் கொள்ளவும், இராகங்களை சரிபார்க்கவும் உண்டாக்கவுங்கூடிய கணக்கில்லாமையேயாகும். இப்படி இல்லாமையால் பரம்பரையாயுள்ள சில இராகங்களும், கீர்த்தனங்களும், வர்ணங்களும் அந்தந்த பரம்பரையாரே படித்து வரும்படி குலதனம் போலப் பேணப்பட்டன. அதோடுகூட அவரவர்களுக்கே உரிய சில சுரப்பிழைக்கும் காலக்கிரத்திலேற்பட்டன. இப்படிப் பல பரம்பரைகளால் ஒரு இராகம் சில தப்பிதங்களுடையதாக இந்தியாவின் சங்கீத வித்துவான்களே மலைக்கும்படி நேரிட்டது. பரம்பரையென்றும் புராதனமென்றும் மகான்களால் சொல்லப்பட்டதென்றும்
|