அவரவர் தங்கள் கொள்கைகளையே சாதித்தும் தர்க்கித்தும் ஒரு முடிவுக்கும் வந்து திருத்திக் கொள்ளாமல் அவரவர் தங்கள் தங்கள் தப்பிதங்களையே கெட்டியாய்ப் பிடித்து நிற்கிறார்கள். சமீபத்தில் ஒரு வித்துவான் 20-வது தாய் இராகமான நடபைரவியில் ஜனித்த ஆனந்த பைரவியில் வரும் சுருதிபேதத்தால் இது எட்டுத் தாய் இராகத்தில் ஜன்னியமானதென்று சொல்ல வேண்டுமே என்று வருத்தப்படுகிறார். மற்றொரு வித்துவான் அப்படி இருப்பதுதானே அழகாயிருக்கிறதென்கிறார். அவ்விராகத்துக்குரிய சுருதியுடன் சுருதி மாறாமல் பாடிக்காட்டுகையில் எல்லாவற்றிற்கும் இது கனிவாயிருக்கிறதென்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள். இப்படிப் பல அபிப்பிராயங்கள் படுவதினால் அவரவர்கள் தங்களுக்குச் சாதனைக்கு வந்தவைகளைக் கூடியவரை இனிமையாகப் பாடிக் காலங்கழித்து விடுகிறார்களேயொழிய சங்கீத இலட்சணங்களை விசாரிக்க விரும்புகிறதில்லை. இமயமலை முதல் கன்னியாகுமரி வரையும் அல்லது வடதுருவ முதல் தென் துருவம் வரை யாவராலும் அக்ஷேபனை இன்றி ஒப்புக் கொள்ளும் முறை யொன்றிருக்க வேண்டுமென்று தாங்கள் கவலைப்படுகிறதில்லை. அப்படி யாவராலும் ஒப்புக் கொள்ளப் படக்கூடிய பொதுவிதியொன்றிருந்தால் சங்கீதமானது மிகுந்த உயர்வையடையும். துவக்கத்தில் சற்று மலைப்பாயிருந்தாலும் வெவ்வேறு அழகுடன் கூடிய இலக்ஷத்து எழுபத்தோராயிரத்து முந்நூற்றுத் தொண்ணூற்றாறு இராகங்களைக் கேட்போம். ஒரு இராகத்தை யுண்டாக்குவதில் இப்போதிருக்கும் சந்தேகங்களும் கஷ்டங்களும் நீங்கச் சாதிக்கும் சொற்ப கஷ்டமாத்திரம் நிற்கும். சுரஞானமுடையவர்களுக்கு அதுவும் மிகுந்த சுலபமே. C-C வரையுள்ள வெள்ளை நோட்டில் உண்டாகும் சுருதிப்படியே ஒவ்வொரு நோட்டுத் தள்ளி வாசிப்பதினாலுண்டாகும் ஆறு இராகங்களும் முதலாவதான சங்கராபரணமாத்திரம் சில சமயத்தில் கலப்பில்லாது சுத்தமாகவும், சில சமயத்தில் மற்ற 5 இராகத்துக்குரிய சுருதிகள் கலந்தும் மற்றவர்கள் வழங்கி வருகிறார்கள். ஆகையால் இப்படிப் பாடப்படும் இராகம் பல இடங்களில் சங்கராபரணம் போலத் தோன்றுகிறதேயொழிய முற்றிலும் சங்கராபரணமுமல்ல அல்லது தோடியுமல்ல, கல்யாணியுமல்ல. இப்போது வழங்கிவரும் சங்கராபரணம் மற்ற இராக சுரங்கள் கலவாது தனித்து வந்தால் அதற்கழகு கொடுக்கும். மற்ற மூன்று பாட்ஸ்களும் கிரமப்பட்டுத் தனியான மூன்று இராகங்களாகி இப்போதிருப்பதைப் பார்க்கிலும் மிக காம்பீரமுடையதாயிருக்கும். இந்தியாவின் சங்கீதத்தில் பாவங்களை விளக்கும் மனோதர்மங்களும் இராக நயங் காண்பிக்கும் ஆலாபனமும் தாளங்களின் நுட்பத்தைக் காட்டும் பல்லவியும் பாடும் பொழுது நாலு பாட்ஸ் பாடுவது கூடாத காரியம் என்றாலும் அவை இல்லாத சிறு சிறு கீர்த்தனங்களிலும் சுரஜதி முதலியவைகளிலும் பாட்ஸுடன் பாடுவது மிகவும் இன்பமாயிருக்கிறதென்று என் சொந்த அனுபோகத்தால் காண்கிறேன். இந்தியாவின் சங்கீதத்தை நாலு பாட்ஸுடன் படிக்கக் கேட்ட தேர்ந்த சங்கீத வித்துவான்களும் கேட்க மிகவும் இன்பமாயிருக்கிறதென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். இந்தியர்கள் மெலடியை மாத்திரம் அப்பியாசித்துக் கொண்டு வந்து பொதுவாய் எல்லாருக்கும் விளங்கும்படியான நிலையில் நின்றும் மேற்பட்டு அநேகமநேகமான மனோ தர்மங்கள் செய்யும் துரிய நிலைக்கு வந்தார்களென்று நான் நினைக்கிறேன். ஆகையால் முதல் முதல் சங்கராபரண இராகத்தில் இராகச் சுருக்கம் (1) இராகசஞ்சாரம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாட்டாகிய கீதம். (2) சஞ்சாரத்தின் எடுப்பு முடிப்புக் காட்டும் சுரஜதி எழுதி அதே இராகத்தில் F ஷார்ப்பாவதினால் உண்டாகும் கல்யாணியையும் அப்படியே மற்றும் இராகங்களையும் அவைகளின் ஜன்னியங்களையும் அநுபோகத்துக்கு வரும்படி மியூசிக்குடன் கொஞ்சம் கொஞ்சமாக எழுத நினைக்கிறேன்.
|