உண்மையைக் கண்டு சத்தியத்தை நிலைநாட்டத் தம்முயிரையும் திரணமாக நினைத்து உழைப்பையும் காருண்ணியத்தையும் கடமையென்று சாதிக்கும் எனதருமை மேற்றிசை சங்கீத வித்துவ சிரோமணிகளே! இந்தியாவின் சங்கீதத்தின் இரகசியங்களென்று நான் நினைப்பவை ஒரு வேளை தங்களுக்குத் தெரிந்ததாயிருந்தாலுமிருக்கலாம். அல்லது அவசியமில்லாதிருந்தாலுமிருக்கலாம். அநுபவத்திற்குக் கொண்டு வருவது கூடியதல்ல வென்றிருந்தாலும் இருக்கலாம். சில விஷயத்தில் நான் சொல்லுவது சற்றுக் கூடியும் குறைந்துமிருந்தாலுமிருக்கலாம். நான் எழுதியவைகளில் தங்களுக்குத் தோன்றும் ஆக்ஷேபங்களை பேப்பரிலாவது ப்ரைவேட்டாகவாவது தெரிவித்தால் ஏற்ற சமாதானஞ் சொல்ல மிகவும் விரும்புகிறேன்." ராயல் சொஸைட்டி ஆப் ஆர்ட்ஸ், ஜான் ஸ்ட்ரீட், அடல்பி, லண்டன் W. C. ஆகஸ்டு- 25. 1911. அன்புள்ள ஐயா, தாங்கள் 2-ம் தேதியெழுதிய கடிதம் கிடைத்தது; அதற்காக மிகுந்த நன்றியறிதலான வந்தனம் சொல்லுகிறேன். இந்தப் பத்திரிகையில் சங்கீதத்தைப் பற்றிய வியாசங்களை அபூர்வமாய்த்தான் பார்க்கலாம். சங்கீதம் போன்ற சிருங்காரரச வித்தைகளைவிட சாதன வித்தைகளைப் பற்றியே அதிகமாய்ச் சொல்லுவதைப் பார்க்கலாம். என்றாலும் தாங்கள் எழுதியிருப்பதை அனுப்பி வைத்தால் அதைப் பார்வையிடுகிறேன். சங்கீத வியாசங்களைப் பிரசுரிக்கும் முக்கியமான பத்திரிகைகளாவன, ம்யூஸிக்கல் நீயூஸ், 3, உவைன் ஆபீஸ் கோர்ட், ப்ளீட் ஸ்ட்ரீட், லண்டன். (Musical News. 3. Wine Office Court, Fleet Street, London.), ம்யூஸிக்கல் ஸ்டாண்டர்ட், 83, சேரிங் கிராஸ் ரோட், லண்டன். (‘The Musical Standard, 83, Charing Cross Road, London). ‘ம்யூஸிக்கல் டைம்ஸ்’ 160, வார்டோர் ஸ்ட்ரீட், லண்டன். (‘The Musical Times. 160, Wardour Street, London,) முதலானவைகளே. தங்களின் உண்மையுள்ள, ஜி. கே. மென்ஸீஸ், அஸிஸ்டெண்டு செக்ரெட்டெரி. ராவ் சாஹேப் மு. ஆபிரகாம் பண்டிதர், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர். மேற்கண்ட வியாசத்திற்கு பதில் கடிதம். ராயல் சொஸைட்டி ஆப் ஆர்ட்ஸ், ஜான் ஸ்ட்ரீட், அடல்பி, லண்டன் W. C. 17-11-11. அன்புள்ள ஐயா, செப்டம்பர் மாதம் 13-ம் தேதியில் தாங்கள் அனுப்பின கடிதம் கிடைத்தது முதல் இதுவரை பல வித ஆராய்ச்சி செய்தும் தாங்கள் கேட்கும் வினாக்களுக்குத் தகுந்த பதில் கிடைக்கவில்லை. இந்திய சங்கீதத்தில் தேர்ந்த அறிவும் நாட்டமுமுள்ளவர்களை எங்கள் தேசத்தில் காணக் கிடைப்பது அரிதாயிருப்பதால், தாங்கள் அன்புடன் அனுப்பியிருந்த மேனுஸ்கிரிப்டை தங்களுக்குத் திருப்பியனுப்பியிருக்கிறேன். இது விஷயமாய்த் தங்களுக்கு எவ்விதமான உதவியுஞ் உதவியுஞ் செய்ய ஏலாதவனாயிருப்பதையிட்டு மெத்தவும் விசனிக்கிறேன். தங்களின் உண்மையுள்ள, ஜி. கே. மென்ஸீஸ், பத்திராதிபர். ராவ் சாஹேப் மு. ஆபிரகாம் பண்டிதர், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர்.
|