பக்கம் எண் :

250
தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் ஆரம்பம்.

3. தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் ஆரம்பம்.

அதன்பின் அநேக வித்துவசிரோமணிகளை நேரில் கண்டும் இவ்விஷயங்களைக் கேட்கையில் அவர்களாலும் சரியான பிரதியுத்தரம் கிடைக்கவில்லை. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களும் சுருதிகளும் இன்னதென்று நிச்சயம் தெரியாதிருக்கையில் அதன் மேலுள்ள ஒவ்வொரு படிகளும் எப்படி நிலைக்கும்? சுரங்களின் நிலை ஏற்பட்ட பின்பே இராகக்கிரமம் ஏற்படும். சுரங்களின் கணக்குகள் ஏற்பட்ட பின்பே சங்கீதம் உறுதிப்படும். "எண்ணறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்றின்னா" என்பது போல சுருதிகளின் கணக்கில்லாத சங்கீதமும் பலவிதமான சந்தேகத்துக்கிடமாக பிழைபடும் என்பது தெரிந்த விஷயமே. மூலாதார கணிதமில்லாத ஒரு சாஸ்திரமும் அஸ்திபாரமில்லாத வீடும் எப்படி நிலைத்திருக்கும்? தென்னிந்தியாவின் சங்கீதம் நாள் செல்லச் செல்ல தேசிகக் கலப்புற்று மற்ற தேசத்தவர் கானம் போல் கலந்து போமே என்று நினைத்து 1912-ம் பெப்ரவரிt 14-ம் தேதியில் மாட்சிமை தங்கிய சென்னை கவர்னர் கார்மிக்கேல் பிரபு அவர்கள் தஞ்சைக்கு எழுந்தருளிய காலத்தில் அவர்களைப் பார்க்க வந்திருந்த மாயவரம் வீணை வைத்திநாதையர், அரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர், தஞ்சாவூர் பஞ்சாபகேச பாகவதர், R. சுப்பிரமணிய ஐயர், சுப்பிரமணிய சாஸ்திரிகள், N. P. சுப்பிரமணிய ஐயர், A. G. பிச்சைமுத்து B. A., L. T., ஹரிஹர பாகவதர், வீணை வெங்கடாசலமையர், இராமலிங்க குருக்கள், கோனேரிராஜபுரம் வைத்தியநாதையர், திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர் முதலிய வித்துவான்களை ஒரு சிறு சபையாகச் சேர்த்து என் அபிப்பிராயங்களைச் சொல்ல அவர்கள் யாவரும் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா அவர்கள், பாப்பாநாடு ஜமீன்தார் மகா-ள-ள-ஸ்ரீ சுவாமிநாத விஜயதேவர் அவர்கள், பூண்டி மகா-ள-ள-ஸ்ரீ அப்பாசாமி வாண்டையார் அவர்கள், உக்கடை மகா-ள-ள-ஸ்ரீ ராவ்பகதூர் அண்ணாசாமித் தேவர் அவர்கள், மகா-ள-ள-ஸ்ரீ ஆவிடையப்ப பிள்ளை அவர்கள், மகா-ள-ள-ஸ்ரீ P. V. கிருஷ்ணசாமி நாயிக் அவர்கள், மகா-ள-ள-ஸ்ரீ T. சாம்பமூர்த்தி ராவ் அவர்கள், மகா-ள-ள-ஸ்ரீ S. வெங்கட்டசுப்பையர் அவர்கள், மகா-ள-ள-ஸ்ரீ ராவ் பகதூர் C. நாகோஜிராவ் அவர்கள் முதலிய சில கனவான்களுக்கும் இவ்விஷயங்களைச் சொல்ல அவர்களும் தாங்கள் இச்சங்கத்திற்கு வேண்டும் உதவிகளைச் செய்வதாக மனப்பூர்வமாய் வாக்களித்தார்கள். அதன் மேல் அநேகர் தாங்கள் சங்கத்தில் சேர்வதாகவும் உதவி செய்வதாகவும் முன் வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு சபையும் ஐக்கியமும் அவர்களால் உலகத்துக்கு நேரிடும் நன்மையும் இன்னதென்று மற்றவர் அறிந்த பின்பே அவர்கள் உதவி தேட வேண்டும் என்ற நோக்கத்துடன் இது வரையும் சங்கம் சொந்தச் செலவிலே நடந்து வருகிறது. சங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டவர்களும் கேட்டவர்களும் ரிப்போர்ட்டின் மூலமாய்த் தெரிந்து கொண்டவர்களும் சங்கத்திற்கு வேண்டிய உதவி செய்ய மனப்பூர்வமுடையவர்களாயிருக்கிறார்க ளென்று கேள்விப்படுகிறேன். இச்சங்கம் நாளுக்கு நாள் பலமடைந்து அநேக வழியில் தென்னிந்திய சங்கீதத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கு உதவியாயிருக்குமென்று நம்புகிறேன். அடியில் வரும் சில குறிப்புகளால் தஞ்சை சங்கீத வித்தியா மகாஜனசங்கத்தைப் பற்றிய மற்றும் சில விவரங்கள் தெரிந்து கொள்வோம்.

இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கத்தையும் அதில் சேர்ந்திருக்கும் சங்கத்தவர்களையும் அவர்கள் செய்து வரும் வேலைகளையும் பற்றி சில முக்கிய குறிப்புகளைப் பார்ப்பது நமக்குப் பிரயோஜனமாயிருக்குமென்று நம்புகிறேன்.