சரியானபடி பெருமை சொல்ல எனக்கு சக்தியில்லை. இந்த சபையினுடைய கருத்தும் அதை நடத்துகிற விதரணையையும் கவனிக்கும்பொழுது, எனக்கு அடங்காத சந்தோஷமுண்டாகிறது. பண்டிதர் அவர்களின் குழந்தைகள் இப்பொழுதும் தாளம் லயம் ஸ்வரம் வர்ணம் மெட்டு உருக்கம் வாக்சுத்தி பக்தி வழுவாது பாடக்கேட்ட எனக்கு இந்திய சங்கீதத்திற்கு ஏற்பட்ட குறைவெல்லாம் போய் பூர்வத்திலுள்ள பெருமை மறுபடியும் ஏற்பட்டுவிடுமென்று நிச்சயமாகி விட்டது. சங்கீத அப்பியாசம் பண்ணவும் வித்துவான்களை ஆதரிக்கவும் ஒவ்வொரு வித்துவான்களுக்குள்ள சங்கீதத் தேர்ச்சியை நிர்ணயிக்கவும் தகுந்த ஒரு சபை சென்னப்பட்டணத்தில் ஏற்படுத்த வேண்டுமென்று ஏழு வருஷமாக எத்தனித்தும் நிறைவேறவில்லை. வித்துவான்களை ஒருமிக்கக் கொண்டு வரவும் சாஸ்திர சம்பந்தமான புஸ்தகங்கள் லைபரேரி சேர்க்கவும் இன்னும் பலவிதமான வாத்தியங்களைச் சேர்த்து வைத்து வித்துவான்களுக்கும் அப்பியாசிப்பவர்களுக்கும் பிரயோசனப்படும்படி செய்ய வேண்டுமென்பது என்னுடைய நீடித்தகால விருப்பம். சரஸ்வதிசபை, பார்த்தசாரதிசபை, கிருஷ்ண கானசபை முதலிய சபைகள் பட்டணத்தில் ஏற்பட்டிருக்கின்றன. பாடிச் சம்பாதிப்பதும் பாடகர்களுக்குப் பாட்டுக் கச்சேரிகளுக்குப் பணம் கொடுப்பதும் சங்கீத சாஸ்திரத்தை ஆதரிக்கிறதாக மாட்டாது. காசுக்காகப் பாடுகிற பாட்டு சங்கீதத்தின் அருமையைத் தெரியும்படி செய்யாது. சங்கீதத்தின் நோக்கம் தெய்வீகமான ஊக்கத்தையுண்டாக்குவதுதான். எப்பொழுது இந்தக் கருத்தை அவலம்பித்து, அதே சங்கீத சாஸ்திரத்தின் தர்மம் என்று ஒப்புக்கொண்டு அப்பியாசிக்கிறோமோ அப்பொழுதுதான் இந்திய சங்கீதத்தின் பெருமையை அறிந்தவர்களாகவும் அதைக் காப்பாற்றுகிறவர்களாகவும் நாம் சொல்லிக் கொள்ளலாம். இப்பொழுது போல சங்கீத அப்பியாசமிருக்குமானால் பரத சாஸ்திரம் எந்த நிலையில் இருக்கிறதோ அந்த நிலைக்கு சங்கீத சாஸ்திரமும் வந்துவிடும். பரத சாஸ்திரத்தில் பாவத்தை வியக்தமாக ஆராய்ச்சி பண்ணி அறிந்தவர்களில்லை. எவரைக் கேட்டாலும் தெரிந்து கொள்ள மார்க்கமில்லை. இதே அபாயந்தான் இந்திய சங்கீதத்திற்கும் ஏற்பட்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஜனங்கள் மற்ற சாஸ்திரங்களை அப்பியாசிப்பது போலவே பெரியவர்கள் முறை தவறாமல் சாஸ்திரமாகவே சங்கீதத்தையும் அப்பியாசிக்க வேண்டும். இதற்கெல்லாம் முக்கியமாய் வேண்டியது சாஸ்வதமான தெய்வபக்தி, அதிலிருந்துண்டாகும் மனோ வாக் காய சுத்தி, சங்கீதத்தின் கௌரவம், அதை உபயோகப்படுத்தும் முறை இவைகள் தான். பகவத் அவலம்பமில்லாவிடில் முக்கியமாய் சங்கீத சாஸ்திரத்தை ஒருவரும் உண்மையில் தெரிந்து கொள்ள மாட்டார்கள். பங்காள முதலிய தேசங்களிலிருந்து பாடகர்கள் கவாய்கள் பாட்டைக் கேட்டுத் திருப்தியடையாதவர்களில்லை. பிரதிதினம் ஆயிரக்கணக்காய் அவர்கள் சம்பாதிப்பது ஆச்சரியமாயிருந்தாலும் யோக்கியதா அம்சத்தில் நம்முடைய சங்கீத வித்துவான்கள் அவர்களைப் பார்க்கிலும் பின்னிட்டவர்களல்ல. அவர்கள் சாஸ்திர கௌரவத்தைக் கவனித்து நடப்பதில் பெருமையடைந்திருக்கிறார்கள். நம்முடைய வித்துவான்களோ ஆராய்ச்சியில் கொஞ்சமும் விருப்பமில்லாதவர்களாயிருப்பதோடு தங்களுடைய பெருமையைக் காட்டிச் சம்பாதிப்பதிலேயே நோக்கமுடையவர்களாயிருக்கிறார்களே யொழிய சாஸ்திரத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற ஞாபகமேயில்லாதவர்களாயிருக்கிறார்கள். ஆத்மார்த்தமான சிரேயசை அடைய வேண்டுவதே சங்கீதத்தின் நோக்கம். இந்த நோக்கத்தைக் கைவிட்டுத் திரவியத்தை நாடிப் பாடுகிறவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். இவ்வித குறைகளினின்று நமது இந்திய சங்கீதத்தை விடுவித்து மகான்களுடைய முறையைப் பரிசோதித்து தெரிந்து கொண்டு நம்முடைய சமஸ்த வித்துவான்களும் தெய்வத்திற்கென்று பாடவும் அப்பியாசிக்கிறவர்கள் தெய்வத்தினுடைய பெருமை விளங்கும் பொருட்டு அப்பியாசிக்கவும் கேட்கிறவர்கள் தெய்வத்தினிடம் தங்கள் மனதை நிலைநிறுத்தவும் இவ்வித ஸ்திதிக்கு இந்திய சங்கீதம், இச்சங்கீத சபையால் வரவேண்டுமென்று ஆதியந்தரஹிதனாய் அனந்த கல்லியாணகுணனாய் கருணாநிதியாய் விளங்கும் ஆதிமூலத்தை பிரார்த்திக்கும்படி இங்கே கூடியிருக்கும் எல்லா வித்துவான்களையும் வணக்கமாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வித்துவானும் தன்னால் இயன்ற அளவு இந்தக் கருத்தை நோக்கிப் பிரயாசைப்பட்டால் முன் சொன்னபடி அடையக்கூடிய பரலோக நித்திய பேரானந்தத்தோடுகூட நம்மைப் போல மற்ற கண்டங்களிலிருக்கிற பெரிய ஜாதியார்களும் இந்தியாவில் மற்ற சாஸ்திரங்களைப் போலவே சங்கீத சாஸ்திரமும் அற்புதமானது என்று நினைக்கிற ஒரு பெருமையும் நமக்குச் சித்திக்கும்."
|