சில வரிகளைச் சொல்லிய பின் ஜலப்பிரளயம் உண்டான 5,000 வருஷங்களுக்கு முன்னும் பின்னும் இந்தியாவில் சங்கீதமிருந்ததென்றும் அதில் தென்னிந்தியா மிகப்பூர்வம் பெற்றிருந்ததென்றும் அதற்கு முன்னிருந்த தென்மதுரையும் தமிழ்ச் சங்கமும் மிக மேன்மை பெற்றிருந்ததென்றும், தமிழ்ப் பாஷை மிகப் பூர்வமான பாஷையென்றும் சங்கீதத்தை அப்பாஷை பேசுவோரே அதிகமாய் வழங்கி வந்தார்களென்றும் தென்மதுரை அழிந்த பின்பும் கபாடபுரம் அழிந்த பின்பும் பாண்டியராஜ்யம் அழிந்த பின்பும் சங்கீதம் பேணுவாரற்று வரவரக் குறைந்து பிறர் கையிற் போனதென்றும் தேசிகக் கலப்பு வந்ததென்றும் அங்கங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். அதோடு தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றியும் இந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் இந்திய சங்கீதத்தைப் பற்றியும் பல கனவான்கள் சொல்லும் அபிப்பிராயங்களில் சிலவற்றையும் சொல்லியிருக்கிறேன். பாண்டியராஜாக்களால் ஆதரிக்கப்பட்டு வந்த மூன்று சங்கங்களைப் பற்றியும், இப்போதிருக்கும் நாலாவது சங்கத்தைப் பற்றியும், பாண்டிய ராஜ்யம் அழிந்த பின் சோழ ராஜாக்களால் சங்கீதம் ஆதரிக்கப்பட்டதையும், கோயில் மானியங்களினால் ஆதரிக்கப்பட்டதென்பதற்கு சாட்சியாக இரண்டு சாசனங்களையும் அதன் பின் சோழ ராஜ்யத்தில் நாயக்க ராஜர்களாலும் மகாராஷ்டிர ராஜர்களாலும் அதன் பின் மற்றும் பிரபுக்களாலும் ஆதரிக்கப்பட்டு வந்ததையும் அதில் சிறந்து விளங்கிய வித்துவ சிரோமணிகளையும் ஒருவாறு குறித்திருக்கிறேன். கர்நாடக சங்கீதத்திற்கு அஸ்திபாரமாகிய சுருதி முறையும் இராக முறையும் திட்டமாய் அறிந்து கொள்ளக் கூடாமையாயிருப்பதினால் சுருதி ஞானமுள்ள யாவரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சுலபமான முறையிருக்க வேண்டுமென்று நினைத்து அதை விசாரிப்பதற்கும் மற்றவர்களுக்கு பிரஸ்தாபப்படுத்துவதற்கும் அநுகூலமாக சங்கீத வித்தியா மகாஜன சங்கம் ஒன்று ஸ்தாபித்து அதில் சங்கத் தலைவர்களாயிருந்து சங்கம் நடத்தியவர்களையும் சங்கீத விஷயமான வியாசங்கள் வாசித்தவர்களையும் சங்கத்தை ஆதரிக்கும் கனவான்களையும் சங்கத்திற்கு வந்திருந்தவர்களையும் சங்கத்திற்கு ஆதரவாயிருப்பவர்களையும் சொல்லியிருக்கிறேன். மேற்கண்ட யாவும் ஒரு பெரிய சமுத்திரத்தினின்று எடுத்த சில திவலைகள் போல் மிக சொற்பமென்று நினைக்கிறேன். சங்கீதத்திற்கு சம்பந்தமான அநேக விஷயங்கள் இதன் பின் அங்கங்கே சுருக்கமாகச் சொல்லப்படும். விஷயங்களை விஸ்தாரமாக அறிந்த பெரியோர், விடுபட்ட முக்கியமானவைகளையும் தவறுதலானவைகளையும் தெரியப்படுத்தினால் மிகவும் நன்றியுள்ளவனாகி இரண்டாம் பதிப்பில் சேர்த்துக் கொள்வேன். சங்கீத சாஸ்திரத்திற்கு முக்கியமானது சுரமும் சுரத்தின் உட்பிரிவுகளாகிய சுருதிகளும் என்று எல்லாரும் ஒப்புக்கொண்டாலும் சுரத்திலும் சுருதிகளிலும் நிலையில்லாத வெவ்வேறு அளவுகள் பலராலும் சொல்லப்படுகின்றன. அவைகளைப் பற்றி நிச்சயமான ஒரு முடிவுக்கு வருவது மிக அவசியம். ஆகையினால் சுருதியைப் பற்றிப் பலர் சொல்லும் அபிப்பிராயங்களையும் சீர்தூக்கி ஆராயவேண்டியது நமது முக்கிய கடமையாகுமாதலால் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றிய விஷயங்கள் இரண்டாம் படிகத்தில் சொல்லப்படும்.
|