பக்கம் எண் :

279
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

கனவான்களும், மகா---ஸ்ரீ கனவான்களும், மகா---ஸ்ரீ அரசன் சண்முகம் பிள்ளை அவர்கள், மகா---ஸ்ரீ சவரிராய பிள்ளை M. R. A. S. அவர்கள், மகா---ஸ்ரீ சேதுராம பாரதியார் அவர்கள், மகா---ஸ்ரீ உலகநாத பிள்ளை அவர்கள், மகா---ஸ்ரீ தேவப்பிரசாதம் பிள்ளை அவர்கள் முதலிய தமிழ் வித்துவசிரோமணிகளும் சங்கத்திற்கு வந்திருந்து சபையோரை உற்சாகப்படுத்தினார்கள்.

சங்கத்திற்கு வந்திருந்த வித்துவசிரோமணிகள் ஒவ்வொருவரும் மிகுந்த ஊக்கம் காட்டி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி உற்சவதினம் போல் கொண்டாடி வருகிறதைக் கவனிக்கையில் தஞ்சாவூர் சங்கீத வித்தியா மகாஜன சங்கம் மிகுந்த விருத்தியுடையதாகுமென்று தோன்றுகிறது.

10. முதல் பாகத்தின் முடிவுரை.

சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தில் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப் பற்றி உண்டான சந்தேகமே மேற்கண்ட சில வரிகளை எழுதும்படி நேரிட்டது. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் இன்னதென்று நிச்சயப்படுத்துவதற்கு முன் சுருதிகள் இன்னதென்று சித்தாந்தப்படுத்திய மற்றவர் முறைகளை தீர்க்கமாய் ஆலோசிக்க வேண்டுமென்று என் மனதில் தோன்றிற்று. ஏனென்றால் சமஸ்கிருத நூல்களாகிய சங்கீத ரத்னாகரம், சங்கீத பாரிஜாதம், ராக விபோதம், சுரமேளகலாநிதி முதலியவைகளில் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயங்களும் மேற்றிசை என் ஆர்மானிக் ஸ்கேலும், (Enharmonic Scale) பைதாகோரஸ் (Pythagoras) முறையும், மர்க்கடர், (Mercator) பூல், (Poole) ஒயிட், (White) தாம்சன் (Thompson) போசான்கே (Bosanquet) சொல்லுகிற ஐம்பத்து மூன்று சுருதிகளின் முறையும், 22 என்று சொன்ன நாகோஜிராயர் அவர்களின் முறையும், தேவால் (Deval) அவர்களின் முறையும் 27 என்று சொல்லுகிற கிளமெண்ட்ஸ் (Clements) அவர்களின் அபிப்பிராயமும், சென்சேசன் ஆப் டோன்ஸ் (Sensation of tones) என்னும் புஸ்தகம் எழுதிய ஹெல்மோல்ட்ஸ் (Helmholtz) அவர்களின் அபிப்பிராயமும் கலந்த சில வார்த்தைகள் வந்ததினால் அவர்களுடைய சுருதி நிச்சயம் இன்னதென்று ஆராய்ந்து அறிந்து கொண்ட பின் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப் பற்றி எழுத நினைத்தேன்.

இவைகளை எழுதிக்கொண்டு வருகையில் பூர்வ தமிழ் நூல்களின் அபிப்பிராயம் இன்னதென்று அறிய நான் விசாரித்ததில் தென்னிந்தியாவின் சங்கீதமும் அதன் சில முக்கிய ஆதார விதிகளும் மிகப் பூர்வமானதென்றும் அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ள தென் மதுரையிலிருந்த முதற் சங்க காலத்திலேயே சங்கீதம் விருத்தியடைந்து வந்ததென்றும் தமிழ்ப் பாஷையிலேயே முதல் முதல் இயல், இசை, நாடகமென்று ஏற்பட்டதென்றும் அதன் பின்பே மற்றும் பல இடங்களில் சங்கீதம் அப்பியாசிக்கப்பட்டு வந்ததென்றும் எனக்குத் தோன்றிற்று. மேலும் பூர்வ நூல்களில் சொல்லப்படும் சுருதி முறைகளும் கானங்களும் மற்றவரால் அறிந்து கொள்ளமுடியாதபடி வெவ்வேறு விதமான அபிப்பிராயங்களை உடைத்தாயிருக்கின்றனவென்றும் அறிந்தேன். ஆகையினால் தமிழ்ப் பாஷை பேசுவோரால் வழங்கி வரும் தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றிய சில சரித்திரக் குறிப்புகள் எழுத நேரிட்டது. இச்சரித்திரக் குறிப்புகள் மிகவும் சொற்பமானவையென்றே சொல்ல வேண்டும். ஆனால் சங்கீதத்தைப் பற்றி விசாரிக்கும் அறிவாளிகளுக்கு இவைகள் இன்னும் பல வழியிலும் விசாரிக்க இடந்தரும் எல்லைக்கல் போலவாவது இருக்குமென்று நான் எண்ணுகிறேன்.

என் விசாரணைக்கு வந்தவைகளில் எல்லாவற்றையும் எழுத இங்கு இடமில்லை. பூர்வத்தில் அதாவது 4,000-5,000-வருஷங்களாக இந்தியா நீங்கலான மற்ற இடங்களில் சங்கீதமிருந்ததாகச்