12-வது இடம் இப்போது நாம் சாதாரணமாய்ச் சொல்லிக் கொள்ளுகிற மத்திமமாகிறது. அதாவது3/4 ஆகிறது, இவர் கணக்கின்படி அது மூன்றாவது மத்திமம் ஆகும். ஆனால் இவர் 10-வதாகச் சொல்லும் முதல் மத்திமமானது தந்தியின் சரி பாதியில் வருகிறது. இரண்டு சுருதிகள் சகஸ்திரபுத்தி சொல்லும் அட்டவணைக்குக் குறைந்து வருகிறதாகத் தெரிகிறது. மத்திமத்தின் நாலு சுருதிகளில் முதலாவது சுருதி தந்தியின் பாதியில் வருகிறதென்று இவரும் 3-வது சுருதி தந்தியின் சரிபாதியில் வருகிறதென்று சகஸ்திரபுத்தியும் சொல்லுகிறதை நாம் கவனிக்க வேண்டும். தந்தியின் நாலில் ஒரு பாகத்தில் மத்திமம் சற்று முன் பின் வருகிறதாயிருந்தாலும் அதற்குக் கீழ் சமமாக 9 பங்குகள் பண்ண வேண்டுமென்றும் அதற்குமேல் சமமாக 13 பங்குகள் பண்ண வேண்டுமென்றும் அவர் சொல்லவில்லை. மேலும் மந்தர மத்திய தாரஸ்தாயிகள் தந்தியின் அளவில் ஒன்று, அரை, காலாக மேல் போகப் போகக் குறுகிப் போவது போல் ஒரு ஸ்தாயிக்குள் வருகிற சுரங்களும் வரவேண்டுமேயொழிய சம பாகங்களாக வரவேண்டிய நியாயமில்லை. என்றாலும், ஓசைகள் சமபாகமாய் வர வேண்டுமென்ற அபிப்பிராயத்துக்குப் பதில் சுருதிகள் சம அளவான தந்தியில் வர வேண்டுமென்று குறித்ததானது நாம் கவனிக்க வேண்டியது. இவர் ஒரு தந்தியின், நாலில் ஒரு பாகத்தை 9 சமபாகங்களாகவும் அதற்கு மேல் நாலில் ஒரு பாகத்தை 13 சமபாகங்களாகவும் பிரிக்கும்படிச் சொல்லுகிறார். அப்படிப் பிரிக்கும்பொழுது 32 அங்குலத் தந்தியில் இன்னின்ன இடங்களில் சுருதிகள் வருகிறதென்றும் ஆதார ஷட்ஜத்தின் ஓசையின் அலைகள் 540-ல் இருந்து கூடுதல் இவ்வளவு வருகிறதென்றும் காட்டக்கூடிய அட்டவணை பின்வருமாறு.
|