திருஷ்டாந்தமாக ஷட்ஜமகிராமத்தில் ஷட்ஜமத்தின் நாலு சுருதிகளையும் ஒவ்வொன்றாக இடதுபக்கம் தள்ளிக்கொண்டு போகையில் மேல்வரிசையின் ஷட்ஜமத்தின் இரண்டாம் சுருதியில் ஷட்ஜமத்தின் நாலு சுருதிவைத்து ஆரம்பிப்போமானால் இரண்டு சுருதிகளையுடைய காந்தாரமும் நிஷாதமும் ரிஷப தைவதங்களில் லயம் அடைகின்றன. அதாவது ரிஷப தைவதத்தின் மூன்றாம் சுருதியே காந்தாரமாகவும் நிஷாதமாகவும் ஆகிறது. இப்படியே ஷட்ஜமத்தின் முதல் சுருதியில் ஷட்ஜமத்தின் நாலாம் சுருதியை வைத்து ஆரம்பிக்கும்பொழுது மூன்று சுருதிகளுடைய ரிஷபமும் தைவதமும் ஷட்ஜம பஞ்சமங்களில் லயம் அடைகின்றன. அதாவது ஷட்சமம் ரிஷபமாகவும், பஞ்சமம் தைவதமாகவும் வருகிறது. இருபத்திரண்டாம் சுருதியாகிய நிஷாதத்தில் நாலம் சுருதி ஆரம்பிக்கும்போது நிஷாதத்தில் ஷட்ஜமமும் காந்தாரத்தில் மத்திமமும் மத்திமத்தில் பஞ்சமமும் பேசுகிறது. அப்போது தைவதத்தின் 18, 19, 20 என்ற மூன்று சுருதிகளில் இரண்டாவதாகிய பத்தொன்பதாவது சுருதியில் முதலாவது ஷட்ஜம் ஆரம்பிக்கிறது. இதுபோலவே ஒவ்வொரு கிராமமும் தன்தன் சுரத்தின் எண்களோடும் அளவோடும் கிரமந்தவறாமல் நடைபெறும். Mr. கிளமெண்ட்ஸ் அவர்களின் சுருதிக்கணக்கின் அளவையும் கணக்கையும் இதன்பின் அட்டவணையாகக் கொடுத்திருக்கிறோம். அந்த அளவை அரை அங்குல அகலமுள்ள நீளமான நாலு துண்டு கடிதங்களில் குறித்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாய் கிரகம் மாற்றி வைத்துப்பார்ப்போமானால் அவைகள் ஏராளமான இடைவெளிகளையும் சுரங்களைகமுண்டாக்குமென்பதை பிரத்தியட்சமாய் அறியலாம். மேலும் இதன் முன்னுள்ள ஐந்தாவது அட்டவணை ஒன்பதாவது கலத்தில் சுருதிகளின் இடைவெளிகளை சென்ட்ஸ் கணக்கில் சொல்லியிருப்பதைக் கவனித்தால் 22, 41, 49, 71, 90 சென்ட்ஸ்கள் என்று ஐந்து பேதத்தில் சொல்லுகிறார். ஆனால் நாலாவது அட்டவணையில் 20, 22, 27, 63, 71, 84, 90, 92 சென்ட்ஸ்களான எட்டுபேதமான அளவுகள் சொல்லியிருக்கிறார். இவ்வளவுபேதமான அளவுகள், சாரங்கர் முறைப்படி சுருதி மாற்றும்பொழுது, எவ்விதத்திலும் ஒத்துவராத ஏராளமான சுருதிகளைத்தரும் என்று அறிவாளிகள் கவனிப்பார்கள். மூன்று சுரங்கள் கிரகமாற்றும்போது உண்டாகிறதென்று சொன்னது பொருந்தாததாயிருந்தாலும் பாடகர்களைக் கொண்டு மற்றவர்கள் 22 என்று சொல்லும் சுரங்களுக்குமேல் 3 சுரங்களைக் கண்டு பிடித்து நிச்சயித்துக் குறித்ததானது நாம் மெச்சிக்கொள்ளக்கூடியது. சங்கீத ரத்னாகரத்தில் கண்ட இம்மூன்று கிராமங்களைத் தவிர வேறுகிராமமும் பழமையான தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. அதில் மருதயாழ், குறிஞ்சியாழ், நெய்தல்யாழ், பாலையாழ் என்ற 4 கிராமங்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவைகளில் மருதயாழ் குரல் அல்லது ஷட்ஜமம் 4, துத்தம் அல்லது ரிஷபம் 4, கைக்கிளை அல்லது காந்தாரம் 3, உழை அல்லது மத்திமம் 2, இளி அல்லது பஞ்சமம் 4, விளரி அல்லது தைவதம் 3, தாரம் அல்லது நிஷாதம் 2 ஆக 22 சுருதிகளும் 22 அலகாகச் சொல்லப்படுகின்றன. இதைக் கவனிக்கையில் ஷட்ஜ மத்திம காந்தார கிராமமென்று சங்கீத ரத்னாகரர் சொல்லும் மூன்று விதமான முறைகளுக்கும் இது வேறான முறை என்பதாகத் தெரிகிறது. இதைத் தவிர, ஆயப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை யென்னும் மூன்று முறைகளுக்கும் அலகு சொல்லப்படவில்லை. இவைகளை நன்றாய்க் கவனிக்கையில், ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை ஏழுசுரங்களுக்கும் பாகித்து, இன்ன இன்ன அளவில் ஏழு சுரங்கள் வரவேண்டுமென்று சொன்னதேயொழிய வேறில்லை. இந்த 22 சுருதிகளுள் கிரகம் மாற்றுவதனால் ஷட்ஜமத்தின் சுருதிகள் நாலு, முறையே ஒவ்வொன்றாய் இடம் பேர்ந்து வழங்குகிற முறை ஒன்றும் ஷட்ஜமத்தின் நாலாவது சுருதியிலிருந்து வலம் பேர்ந்துபோகிற முறையொன்றுமாக இரண்டு முறை இருந்ததாகத் தெரிகிறது.
|