இவைகளில் வலம் பேர்ந்து வரும் முறை சங்கீத ரத்னாகரத்தில் காணப்படவில்லை. ஆனால் மிகப்பழமையான தமிழ் நூல்களில் சொல்லப்படுகிறது. இன்னும் மற்ற விவரங்கள் யாவையும் பின்னால் வரும் அட்டவணையில் கண்டுகொள்க. Mr. கிளமெண்ட்ஸ் அவர்கள் சங்கீத ரத்னாகரருடைய துவாவிம்சதி சுருதிகளின்படி இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் என்று சொல்லியிருக்கும் அட்டவணையில் 15 சுரங்கள் இங்கிலீஷ் என்ஆர்மானிக் ஸ்கேலி (Enharmonic Scale) லிருந்து எடுக்கப்பட்டவை. மற்றும் 10 சுரங்களில் 3 சுருதிகள் கிராமம் மாறுவதினால் உண்டானவை யென்றும் மீதியான 7 சுரம் 25 சுருதியைச் சேர்ந்ததென்றும் சொல்லுகிறார். மொத்தமாக Mr. கிளமெண்ட்ஸ் எழுதிய புஸ்தகத்தைப் பார்க்கையில் தேவால் அவர்களுடைய சுருதி முறையினால் வழிதவறிப்போயிருக்கலாம் என்பதேயொழிய மற்றப்படி அவருடைய நுட்பமான விசாரணைக்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அப்துல் கரிம் முதலியசங்கீத வித்துவான்கள் பாடித் தாம் கேட்டதில் இவைகள் இந்துஸ்தானி ராகத்திற்கு வருகிறதென்று சொல்லுவதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். வழக்கத்தில் முற்றிலும் ஏறுக்கு மாறான அநேக இந்துஸ்தானி முறைகளைப்போல் இதுவும் இந்திய சங்கீதத்திற்கு வித்தியாசமாயிருக்கவேண்டும். ஆனால் மொத்தமாய் ஒரு ஸ்தாயிக்குள் சுருதிகளை எங்கே எடுத்துக்கொண்டு கானம் பண்ணினாலும் அவைகளுக்கு ஒரு ஒழுங்கானமுறை இருக்கவேண்டியது கிரமமென்று நான் நினைக்கிறேன். சங்கீத ரத்னாகரர் சமஸ்கிருதத்தில் எழுதியவற்றை வாசிக்காமலும், வாசித்தாலும் அர்த்தம் தெரியாமலும், வார்த்தையின் அளவாக அர்த்தம் தெரிந்தாலும் உள்பொருள் அறியாமலும், உள்பொருள் தெரிந்தும் சாதனைக்கொண்டுவராமலும், ஏமாந்துநிற்கும் இந்திய சுருதிகளைப்பற்றி விசாரிக்கவும் விசாரித்தவைகளில் முடிவானவைகளைப் பிறருக்குத் தெரிவிக்கவும் முன்வந்தது மிகவும் மேன்மையானதே. இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளுக்குத் தகுந்த விதமாய் ஆர்மோனியம் செய்வது கூடாதகாரியமாயிருந்தாலும், சில சுருதிகளை அமைத்து ஆர்மோனியத்தில் சொல்லுவதானது, இதுபோல் இன்னும் அநேக சுருதிகள் வரலாமென்று நிச்சயிப்பதற்கு ஒரு முதற் படிபோலிருக்கிறது என்று புகழ்ந்து சொல்லக் கூடியதாயிருக்கிறது. மற்றும் இவருடைய சுருதிமுறையில் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகளை நாம் இங்கு சொல்லாமல் விட்டாலும் அட்டவணையில் தெளிவாகக்காணலாம். ****************************
|