பக்கம் எண் :

429
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

மகாராஜா முதலியவர்கள் பிந்தியவர்களென்றும் சொல்லுகிறார். இவர்கள் யாவரையும் ஒன்றாய்ச் சீர்தூக்கிப் பார்ப்போமேயானால் 22 சுருதிகள் உண்டென்று சொல்லுகிறவர்களும் அதல்லாமல் கர்நாடக சங்கீதத்திற்குரிய சுருதிகளைச் சொல்லுகிறவர்களும் கலந்திருப்பதாகத் தெரிகிறது. நாரதர் முறைப்படிச் சொல்லுகிறேன் என்ற பாரிஜாதக்காரர் முறையைக் கவனிக்கும் பொழுது பஞ்சமத்திற்கு 2/3 என்ற அளவு கிடைக்கிறது. 2/3 என்ற அளவை அனுசரித்ததான வேங்கட மகியின் சதுர் தண்டி பிரகாசிகையும் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளையே சொல்லுகிறதாகத் தெரிகிறது. ஆனால் மேற்கண்டவர்கள் யாவரும் 22 சுருதிகள் என்றே சொல்லுகிறார்கள் என்று 5 வது பிரிவில் சொல்லுகிறார். ஆதிகாலமுதல் சங்கீத கிரந்தமாகிய பரத நாட்டிய சாஸ்திரத்தில் சுருதிகள் 22 தான் என்று சொல்லியிருக்கிறதென்றும் அதன் பின் வந்த சங்கீத ரத்னாகரம் சர்வோத்தமமான கிரந்தமென்றும் அதிலும் 22 சுருதிகள் தான் வரவேண்டுமென்று சொல்லுகிறதென்றும் சொல்லுகிறார். ஆரிய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளை நிச்சயிக்க வந்தவர் ஆரிய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைச் சொல்ல வந்தது கவனிக்கப்படத்தக்கது. இதற்கு முன்னுள்ள நூல்கள் சுருதி, சுரும், கிராமம், மூர்ச்சனை முதலியவைகளைத் தங்களுக்கு முந்தியவர்கள் அபிப்பிராயத்தை அனுசரித்தும் மற்ற இராகதாளம் முதலியவைகளைப் பற்றி ஒன்றற்கொன்று சம்மந்தமில்லாமல் கூறுகின்றனவென்றும் சொல்லுகிறார். நூலிற்சொல்லியவைகளை அனுபோகத்துக்குக் கொண்டு வராமல் இருக்கிற எத்தனையோ ஏட்டுப் பாடங்களையும் மந்திரங்களையும் நாளது வரையும் பார்க்கிறோம். அவைகளைப் போலவே முன்னோர்களுடைய அபிப்பிராயத்தை அனுசரித்தே தமக்குத் தெரியாதவைகளையும் தெரிந்ததாக எழுதி விடுகிறதும் தமக்குத் தெரிந்தவைகளில் நூதனப் பெயர்களை வைத்துத் தமது சாமர்த்தியங்கள் யாவையும் காட்டி விடுகிறதும் வழக்கமாயிருக்கிறது.

ஆறாவது பிரிவில் சாரங்கதேவருக்கு முந்தியவரும் யாக்ஞ வல்கிய ஸ்மிருதிக்கு வியாக்கியானம் எழுதியவருமாகிய மிதாட்சர் 22 சுருதிகள் உண்டென்று சொல்லுவதினால் இதில் சந்தேகமே கிடையாதென்று வற்புறுத்துகிறார்.

ஏழாவது பிரிவில் ஸ்ரீமத் சங்கராச்சாரிய ஸ்வாமிகளால் செய்யப்பட்ட மகாவாக்கிய விவரணபாஷியத்திலும் நாதங்கள் 22 என்று சொல்லியிருப்பதினால் சுருதிகள் 22 தான் என்றும் அதை மறுக்க எவராலும் முடியாதென்றும் சொல்லுகிறார்.

எட்டாவது பிரிவில் சுருதிகள் 22 என்பதற்கு மேலாகவாவது குறைவாகவாவது சொல்லுகிறவர்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறவர்களென்றும் சுருதி சங்கியாபேதங்களை சங்கீத ரத்னாகரர் சொல்லும்பொழுது சுருதி ஒன்றுதான், சுருதி 2 விதம், சுருதிகள் 3 விதம், சுருதிகள் 4 விதம், சுருதிகள் 9 விதம், சுருதிகள் 22 விதம், சுருதிகள் 66 விதம், சுருதிகள் அனந்த விதம் என்று கூறினார் என்றும் அவற்றில் 22 ஐயே எடுத்துக் கொண்டாரென்றும் ஆதாரப்படுத்திச் சொல்லுகிறார்.

ஒன்பதாவது பிரிவில் தமிழ் நூல்களாகிய சிலப்பதிகாரம் சதுர அகராதி என்பவற்றிலும் சுருதிகள் 22 தான் என்று சொல்லப்பட்டிருப்பதினால் சுருதிகள் 22 இருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.

பத்தாவது பிரிவில் நாளது வழக்கத்தில் ஆரிய சங்கீதத்தில் 22 சுருதிகளே வழங்கி வருகின்றனவென்றும் அவைகளுக்கு விரோதமாய் எவரும் சொல்லக்கூடாதென்றும் வற்புறுத்திச் சொல்லுகிறார்.