ஷட்ராக சந்திரோதயம் என்னும் நூலின் பிரகாரம் சுத்த சுரங்கள் ஏழும் விக்ருத சுரங்கள் பத்தும் வழக்கத்திலிருக்கும் சுரங்கள் மூன்றுமாக 20 சுரங்கள் சொல்லப்படுகின்றன. இராகவிபோதம் என்ற நூலின்படி சுத்த சுரங்கள் ஏழும் விக்ருத சுரங்கள் பத்தும் ஆக 17 சொல்லப்படுகின்றன. சுரமேளகளாநிதி என்னும் நூலின்படி சுத்த சுரங்கள் ஏழும், விக்ருத சுரங்கள் ஏழும், அதை அடுத்த விக்ருத சுரங்கள் நாலும் ஆகப் பதினெட்டு சுரங்கள் சொல்லப்படுகின்றன. சதுர்தண்டி பிரகாசிகை என்னும் நூலின்படி சுத்த சுரங்கள் ஏழு, விக்ருத சுரம் ஒன்பது ஆகப் பதினாறு என்றும் சங்கீத சாராமிர்தம் என்ற நூலின்படி சுத்த சுரம் ஏழு, விக்ருத சுரங்கள் பத்து ஆக 17 என்றும் சொல்லப்படுகின்றன. அட்டவணையைக் கவனித்துப் பார்த்தால் இதன் வித்தியாசம் ஒவ்வொன்றும் தெரியும். 16, 17, 18, 19, 20, 22, 29, முதலிய சுருதிகள் வரவேண்டுமென்று கிரந்த கர்த்தாக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நூலில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு தந்தியின் நீளத்தில் பாதியாகிய மத்திய ஸ்தாயியில் இவ்வளவு வித்தியாசமான சுரங்களும் அவைகளுக்கு வெவ்வேறு பெயர்களும் வழங்கி வருவதைக் கவனிப்போமாானால் அவைகள் முற்றிலும் ஒன்றற்கொன்று ஒற்றுமையில்லாத நூல்களென்றே சொல்ல வேண்டும். மேலும் 22 சுருதிகளென்று ஒவ்வொருவரும் எழுதியிருந்தாலும் அவர்கள் வழக்கத்தில் வேறு வேறு சுரஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறார்களென்று தெளிவாகக் காண்கிறோம். ஆனால் ஏழு சுரங்களை சுத்த சுரங்களென்று சொல்வதில் ஒருவரும் தவறிப்போகவில்லை. அதிலும் ஒன்பதாவது சுருதியாகிய மத்திமத்தையும் 13-வது சுருதியாகிய பஞ்சமத்தையும் 22-வது சுருதியாகிய நிஷாத்தையந் தவிர மற்ற நாலு சுரங்களில் பாரிஜாதக்காரர் வித்தியாசப்படுகிறார் என்று தெரிகிறது. இது தவிர 4, 3, 2, 4, 4, 3, 2 என்ற சாரங்கர் முறைப்படியே பாரிஜாதக்காரர் தவிர மற்றவர்கள் கணக்கிட்டிருக்கிறார்களென்பது தெளிவாக விளங்குகின்றது. அட்டவணையின்படி இத்தனை சுருதி ஒரு ஸ்தாயியிலிருக்கிறதென்று சொல்லும் அபிப்பிராயத்தை நாம் கவனிக்கையில் (1) மேற்கண்டவர்கள் சுருதிகளின் தொகையை வெவ்வேறாகச் சொல்லுகிறார்களென்றும் (2) சுருதிகளுக்கும் வெவ்வேறு பெயர்களிட்டு வழங்குகிறார்கள் என்றும் (3) சப்த சுரங்களிலுங்கூட பாரிஜாதக்காரர் வெவ்வேறு ஸ்தானங்களைச் சொல்லுகிறார் என்றும் நாம் காணலாம். என்றாலும் சுருதிகள் 22 என்ற சொல்லை ஒவ்வொருவரும் சொல்லாமலிருக்கவில்லை. சுருதிகள் 16, 17, 18, 19, 20, 22, 29 என்று அவரவர்கள் அபிப்பிராயப்படுவதையும் சங்கீத ரத்னாகரர் சுருதிகள் ஒன்றுதான் சுருதிகள் இரண்டுதான், சுருதிகள் மூன்று தான், சுருதிகள் நாலுதான், சுருதிகள் ஒன்பது தான், சுருதிகள் இருபத்திரண்டுதான், சுருதிகள் அறுபத்தாறுதான், சுருதிகள் அனந்தவிதங்கள் தான் என்று சொல்வதையும் நாம் கவனிக்கையில் இன்னும் சுருதிகள் எத்தனையோ விதங்கள் சொல்லப்படலாம் என்ற சந்தேக நிலையிலிருக்கிறதென்று தெளிவாகக் காணப்படுகிறது. இதனால் பூர்வம் தென்மதுரையிலுள்ளோரும் மூன்று சங்கத்து வித்வசிரோமணிகளும் அப்பியாசித்து வந்த சங்கீத உண்மையை சரியானபடி அர்த்தம் செய்து கொள்ளாமல் எழுதிய நூல்களென்றே நாம் நினைக்க வேண்டியதிருக்கிறது. சுருதி, சுரம் கிராமம், மூர்ச்சனை என்ற பாகங்களை மட்டிலும் தங்களுக்கு முந்திய சாஸ்திரக்காரர்களுடைய அபிப்பிராயத்தை அனுசரித்துக் கூறுகின்றன என்று சொன்ன பாகவதர் அவர்கள் தாம்கொடுத்த சுருதி அட்டவணையைக் கவனித்தாரில்லை. அது போலவே இராக தாளங்களிலும் ஒற்றுமையில்லையென்று தாமே கூறுகிறார். இராகங்களின் பெயரிலும் ஆரோகண அவரோகண சுரங்களிலும் அவற்றில்
|