சேர்த்துக் கொள்ளும் அளவு முறையே பிறர் அறியும்படி எழுத்து மூலமாய்க் காட்டக் கூடியதாயிருப்பதினால் இவரது அளவு முறையை இங்கு சற்றுக் கவனிக்க வேண்டும். இவர் தந்தியின் நீளத்தைப் பாதியாகப் பிரித்துக் கீழ்ப் பாதியை மத்திய ஸ்தாயாகவும் அதன் மேலுள்ள பாகத்தை இரண்டாகப் பிரித்துக் கீழுள்ள பாகத்தை தார ஸ்தாயாகவும் வைத்துக் கொள்ளுகிறார். மத்திய ஸ்தாயியின் சரிபாதியில் மத்திய ஸ்தாய் மத்திமமும், தாரஸ்தாயியின் மத்தியில் தார ஸ்தாய் மத்திமமும் குறிக்கிறார். மத்திய ஸ்தாய் மத்திமத்துக்கும் தார ஸ்தாய் மத்திமத்துக்கும் நடுவிலுள்ள பாகத்தை இரண்டு பங்கு செய்து இரண்டாவது நிஷாதம் வைக்கிறார். தார ஸ்தாய் ஷட்ஜத்திற்கும் மத்திய ஸ்தாய் இரண்டாவது நிஷாதத்திற்குமுள்ள நீளத்தைப் பாதியாக்கி அந்த அளவின்படி அதிதார ஷட்ஜத்துக்குக் கீழ் நி வைக்கச் சொல்லுகிறார். இதிலிருந்து காந்தாரம் முதலிய ஸ்வரங்கள் பன்னிரண்டையும் கண்டுபிடிக்கச் சொல்லுகிறார். இவைகளைக் கூர்ந்து கவனிப்போமானால் ஷட்ஜம மத்திம முறைப்படி அதாவது எடுத்துக் கொண்ட நீளத்தைப் பாதி பாதியாகச் செய்து, சுரங்களைக் கண்டுபிடிக்கச் சொல்லுகிறார். இரண்டாவது ரிஷபத்திற்கும் தார ஸ்தாய் இரண்டாவது ரிஷபத்திற்கும் மத்தியில் பஞ்சமம் வருகிறதென்று கடைசி முறையில் சொல்லுகிறார். இப்படி அளந்து கண்டுபிடிக்கும் சுரங்கள் சற்று ஏறத்தாழவிருக்குமென்பது நமக்குத் தெரிந்த காரியம். மற்றவர்கள் 3/4 க்குச் சொல்லும் ஓசையலைகளை அதாவது வைபரேஷனை 540ன்படி பார்க்கும் போது 720 ஆகிறது, 2/3 க்கு 810 ஆகிறது. இவ்விரண்டில் மத்திமத்திலிருந்து ஆரம்பித்து 12 சுரங்கள் போகும்போது பஞ்சமத்தில் முடிக்கிறார். ஆரம்பித்தது 720ஆய் இருந்தாலும் 3/4, 3/4 ஆக 12 தரம் போகும்பொழுது 799 ஆகப் பஞ்சமத்திற்கு வருகிறது. எல்லோரும் பஞ்சமத்துக்கு 2/3 வர வேண்டுமென்று சொல்வது கிட்டத்தட்ட சரியே. ஆனால் இவருக்கு 2/3 வராமல் 177147/262141 என்ற பின்னம் வருகிறது. ஒரு தந்தியின் நீளத்தில் 3/4 என்றும் 2/3 என்றும் எடுத்துக் கொள்ளும் பொழுது இயற்கையின் அளவுக்கு 3/4 கொஞ்சம் குறைந்தும் 2/3 கொஞ்சம் கூடியும் வருகிறது. இந்த சொற்பக் குறைவினால் மத்திமமும் பஞ்சமமும் அதிகமாகப் பேதம் காட்டுகிறதில்லை. ஆனால் ஷட்ஜம மத்தமம், அதற்கு ஷட்ஜம மத்திமமாக அதாவது (3/4) வூ (3/4) வூ (3/4) etc. ஆக 12 தடவை போகும்போது இரண்டு சுரங்களுக்குமுள்ள அற்ப பேதம் பெரும் பேதமாகி (809.799) 10 வைபரேஷனைக் குறைத்துவிடுகிறது. மற்றும் ஸ்வரங்கள் இதைப் போலவே ரிஷபம் முதல் முறையே 3, 7, 2, 6, 1, 5, 10, 4, 9, 2, 8 ஓசையின் அலைகள் பேதமுடையனவாக வருகின்றன. இவர் அளவின்படி வரக்கூடிய பின்ன பாகங்களையும் தந்தியின் அளவையும் ஓசையின் அலைகளையும் காட்டிய அட்டவணையை இதன் பின்னால் கண்டுகொள்க. இவர் வீணையில் கண்ட சுர ஸ்தானங்களையே குறிப்பதற்காக அளவுகள் சொல்லி வருகிறாரென்பதையும் அதில் ஷட்ஜம மத்திம முறைப்படி போக வேண்டுமென்பதையும் நாம் இங்குக் கவனிக்க வேண்டும். இவர் வீணையின் பன்னிரண்டு ஸ்வரங்களையும் குறிப்பதில் வரும் கணக்குகள் சங்கீத பாரிஜாதக்காரர் சொல்லும் கணக்குக்கு மிகுந்த பேதமுடையதாய்க் காணப்படுகின்றன. என்றாலும் இயற்கையின் அளவுக்கு மத்திமத்தில் ஏற்பட்ட சொற்ப பேதமில்லாதிருக்குமானால் 12 சுர ஸ்தானங்களும் ஷட்ஜம மத்திம முறைப்படி மிகவும் சரியாக வர வேண்டுமென்று நான் நினைக்கிறேன். பாரிஜாதக்காரரின் சுரம் கண்டு பிடிக்கும் முறையைப் பார்க்கிலும் 3/4 , 3/4 என்று போன இவருடைய கருத்து மிகவும் மேலானது. சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களை நிச்சயிப்பதற்குப் பாரிஜாதக்காரர் சொன்ன ஷட்ஜம பஞ்சம முறையும் இவர் சொன்ன ஷட்ஜம மத்திம முறையும் திறவு கோல் போலிருக்கின்றன.
|