மேற்காட்டிய அட்டவணையை நாம் கவனிப்போமானால் ச-ம, ச-ம முறையாக சுரங்களைக் கண்டுபிடிக்கிறதாகத் தெளிவாக அறிவோம். ஆனால் இம்முறையை இவர் சுருதி ஞானமுள்ளவர்களுக்குச் சொல்லாமல் சுருதி ஞானமில்லாதவர்களுக்குச் சொன்னார் என்பதை முதல் முதல் மனதில் வைக்க வேண்டும். சுருதி ஞானமுள்ளவர்களுக்கு வீணையில் தாளத்திற்காகக் கொடுத்திருக்கும் மூன்று தந்திகளில் முதலாவதை சாரணையாகவும் இரண்டாவதை பஞ்சமமாகவும் மூன்றாவதை மேல் சாரணையாகவும் சேர்த்துக் கொண்டு அதற்குத் தகுந்த விதமாக மெட்டுகள் அமைக்கச் சொல்லுகிறார் என்பதை யோசிக்குமிடத்து இது சுரஞானமுள்ளவர்களுக்கே சரி வரும் என்பதை நாம் தெளிவாய் அறியலாம். இதில் எவ்விதமான தவறுதலும் வரமாட்டாதென்று நாம் அறிவோம். என்றாலும் தற்சமயம் சரியான இம்முறை தவறுதலென்றும் தந்தியின் அளவைக் கொண்டும் பின்னங்களைக் கொண்டும் ருசுப்படுத்தும் கணக்கே சரியென்றும் வாதிப்பதினால் இவர் கணக்கின்படி சரியான சுரங்கள் கிடைக்கிறதாவென்று பார்க்க வேண்டியதாயிற்று. அட்டவணையின் முதல் கலத்தில் பன்னி சுரங்களின் லக்கங்களையும் காண்போம். இரண்டாவது கலத்தில் ச-ம முறையில் இத்தனையாவது கிடைத்ததென்று லக்கங்களால் குறிப்பிட்டிருக்கிறது. திருஷ்டாந்தமாக ச-மவை ஒன்றும் இரண்டுமாக வைத்துக் கொண்டால் ம-நி மூன்றாவது, நி-க நாலாவது, க-த ஐந்தாவது, த-ரி ஆறாவது, ரி-ம ஏழாவது, ம-நி எட்டாவது நி-க ஒன்பதாவது, க-த பத்தாவது த-ரி பதினோராவது ரி-ப பன்னிரண்டாவது என்று வருவதைக் காட்டும். அவைகள் ஒவ்வொன்றும் 498, 498, கூட்டி 1200-க்கு மேல் போனால் 1200ஐ கழித்து வருவதை ஆறாவது கலத்தில் காண்போம். ஏழாவது கலத்தில் ஒவ்வொன்றுக்குமுரிய சென்ட்ஸ் வித்தியாசத்தைக் காணலாம். இக்கணக்கை இந்நூலின் 369 வது பக்கம் 17 வது அட்டவணை ஆரிய சங்கீத துவாவிம்சதி சுருதிக் கணக்கில் இரண்டாவது பாகத்தில் 9, 10, 11, 12 வது கலங்களில் தெளிவாகக் காணலாம். இம்முறையில் ச-ம விற்குத் தந்தியின் பாகத்தால் கிடைக்கும் (3/4)ன் சென்ட்ஸ்களுக்கும் சுரஞானத்தால் கிடைக்கும் சென்ட்ஸ்களுக்கும் வித்தியாசமிருக்க வேண்டுமென்று இவர் சொல்லுகிறார். ஆகையினால் சுரஞானமில்லாதவர்களுக்கே ச-ம(3/4) என்றும் 498 சென்ட்ஸ்களென்றும் சொல்லுகிறதாக நாம் அறியவேண்டும். ‘சுரஞான மில்லாதவர்களுக்கே இதைச் சொன்னேன்’ என்பதைக் கொண்டு சுரஞானமுள்ளவர்களுக்கு வேறொரு சரியான முறையிருக்க வேண்டுமென்று தெளிவாய்த் தெரிகிறது. சுரஞானமுள்ளவர்கள் நிச்சயிக்கக் கூடிய சரியான தந்தியின் அளவையும் சென்ட்ஸ்களின் அளவையும் ஓசையின் அலைகளின் அளவையும் இதன் பின்வரும் கர்நாடக சங்கீத முறையில் தெளிவாக அறியலாம். மொத்ததில் இவர் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் 12 சுரங்களையே நிச்சயித்திருக்கிறார் என்று தெளிவாகக் காண்கிறோம். துவாவிம்சதி சுருதிகள் கர்நாடக சங்கீதத்திற்கு உதவாததென நிச்சயித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
|