பக்கம் எண் :

447
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

பதினோராவது.

சங்கீத பாரிஜாதக்காரர் நாரதர் முறைப்படி சுருதிகள்
கண்டுபிடிக்கும் விதம்.

சங்கீத பாரிஜாதம் என்னும் நூலை எழுதினவர் அகோபில பண்டிதர். இவர் கர்நூல் ஜில்லாவில் துங்கபத்திரா நதிக்குச் சமீபத்தில் அகோபிலம் என்ற கிராமத்திற் பிறந்தவர். அந்தக் கிராமத்தில் ஒரு சிறிய மலையும் அந்த மலையின் மேல் ஒரு குகையும், அக்குகையில் நரசிம்ம மூர்த்தியின் ஆலயமுமிருக்கின்றன. இந்தக் கிராமத்தில் பிறந்தமையின் இவருக்கு அகோபில பண்டிதரென்று பெயர் வழங்கினதாக நினைக்க ஏதுவிருக்கிறது. இவர் எழுதிய பாரிஜாதம் என்னும் நூலைப் பார்க்கையில் சங்கீத ரத்னாகரம் என்னும் நூலில் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் விவரம் பிறருக்கு நன்றாய் விளங்க வேண்டுமென்று எழுதினதாகத் தெரிகிறது. இவர் சுருதியைப் பற்றி எழுதிய காலத்தில், அதாவது, இற்றைக்கு சுமார் 400 வருஷங்களுக்கு முன் வீணையில் கண்ட சுரஸ்தானங்களையே குறிக்கக் கணக்குச் சொல்லுகிறார் என்பதைத் தெளிவாய் அறியலாம். இருந்தாலும், இவர் சங்கீத ரத்னாகரத்தில் சாரங்க தேவர் அபிப்பிராயத்தை முதற் சொல்லி, அதன் பின் தமது அபிப்பிராயத்தைச் சொல்லுகிறார் என்று தோன்றுகிறது. இவர் சுருதிகளைக் குறித்துச் சொல்லும் சில வசனங்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. இவர் சொல்லும் விபரமாவது :-

"இருதயத்திலிருந்து இடைகலை, பிங்கலை, கழுமுனை என்னும் மூன்று நாடிகளின் குறுக்கே 22 நாடிகளிருக்கின்றன. இவைகளிலிருந்து மேல் நோக்கி சத்தம் பிறக்கிறது. நாபி இருதயம் கண்டம் சிரசு வாய் என்னும் 5 ஸ்தானங்களின் உதவியால் நாதம் வரவரப் பெருத்து வெளிப்படுகிறது. அகி, குண்டலி என்னும் பெயர்கள் பாம்புக்குச் சொல்லப்படுவது போல சுரம், சுருதி என்னும் பெயர்கள் வித்தியாசமில்லாமல் ஒரு ஓசைக்குச் சொல்லப்படுகிறது. புல் நுனி அளவு பேதத்தில், பல சுருதிகள் வீணையிலும், அது போலவே நம் சரீரத்திலும் வருகின்றனவென்று ஞானவான்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

இருபக்கமும் மேருவும் மெட்டும் வைத்த வீணையில் ஷட்ஜம பஞ்சம முறைப்படி சுருதிகள் 22 ஆய் இருக்கின்றன. சுருதிகளின் விபரத்தை நாரதரின் முறைப்படி சொல்லுகிறேன். etc, etc. ஒரு ஸ்வரம் உண்டாகிறதானால் ஒரு சுருதியிலிருந்து உண்டாகாது. சுத்த ஸ்வரங்கள் ஏழும், விக்ருதி ஸ்வரங்கள் 22ம் ஆக 29 ஆகிறது. ஷட்ஜமம், மத்திமம், பஞ்சமம் 4, 4 சுருதி கொண்டவை. காந்தாரமும் நிஷாதமும் 2, 2 சுருதி கொண்டவை. ரிஷபமும், தைவதமும் 3, 3 சுருதி உள்ளவை.

இனி ஒவ்வொரு ஸ்வரங்களும் காணும் முறை சொல்லுகிறார்.

ஒரு வீணையில் தந்தி நீளத்தின் மத்தியில் தார ஷட்ஜமிருக்கிறது.

தாரஷட்ஜத்துக்கும் மேரு ஷட்ஜத்துக்கு மத்தியில் மத்திமம் வை.

முழு அளவையும் மூன்று பாகஞ்செய்து முதல் பாகத்தில் பஞ்சமம் வை.

மேரு ஷட்ஜமத்துக்கும் பஞ்சமத்திற்கும் நடுமத்தியில் காந்தாரம் வை.

மேரு ஷட்ஜமத்துக்கும் பஞ்சமத்திற்கும் நடுவிலுள்ள பாகத்தை மூன்று பாகஞ்செய்து முதல் பாகத்தில் ரிஷபம் வை.

தாரஷட்ஜத்துக்கும் பஞ்சமத்திற்கும் மத்தியில் தைவதம் வை.

தாரஷட்ஜத்துக்கும் பஞ்சமத்திற்கும் உள்ள பாகத்தை மூன்று பாகஞ்செய்து இரண்டு தள்ளி நிஷாதம் போடு."