மகா- - -ஸ்ரீ பிரதாப ராமசாமி பாகவதரது கருத்தை அனுசரித்து கோமள ரிஷபம் 25/27 என்று நான் குறித்திருந்தாலும் அவ்விடை வெளியை இரண்டு பாகங்களாகப் பிரித்து 17/18 அதாவது 204 வரும் ஸ்தானத்தை 200-க்குப் பதில் Mr. பார்வு சொல்லுகிறபடி போடுவது நல்லதென்று நினைக்கிறேன். அது தவிர ரிஷபஸ்தானத்தை 11/12 அதாவது 198 என்று குறிக்கிறார். இது 8/9 என்ற ரிஷபஸ்தானத்திற்கும் 17/18 என்ற கோமள ரிஷபத்திற்கும் நடுவில் ஒரு ரிஷப ஸ்தானம் வரக்கூடும் என்பதைக் காட்டுகிறது. அப்படியானால் 216, 204, 198, 192 என்ற நாலு எண்களிலும் 216க்கு வரும் ஆதார ஷட்ஜத்தை நீக்கி மூன்று சுருதிகள் வருகின்றன. ஆனால் ரிஷபத்திற்கு நாலு சுருதிகளிருக்க வேண்டுமென்று பொதுவாய் யாவரும் எண்ணுகிறபடி 6, 6 பாகங்கள் பேதமுடையதாக அதாவது 192, லிருந்து 198, 204, 210 என்று முடியும் 4 சுருதிகளாகின்றன. 8/9 ஐ 32/36 என்று வைத்துக் கொள்வோமேயானால் இவை நாலும் முறையே 32/36,33/36,34/36,35/36 என்று முடிவடையும். இப்படி ரிஷபத்தின் நாலு சுருதிகளும் வருமானால் பாரிஜாதக்காரரின் சுருதி முறையானது மிகவும் உத்தமமான ஒரு முறையாகும். மற்ற ஸ்வரங்களில் காந்தாரம், தீவிர காந்தாரம், மத்திமம், பஞ்சமம், நிஷாதம், தீவிர நிஷாத மென்னும் ஸ்வரங்கள் சற்று ஏறத்தாழ வீணையில் காணும் ஸ்வரங்களுக்குச் சரியாகவேயிருக்கின்றன. அளந்து போடும் முறையில் இவ்வளவு சரியாகச் சுரங்கள் கிடைப்பதைப் போல வேறு உத்தமமான முறைகளை நான் பார்க்கவில்லை. மற்ற ஸ்வரங்களுக்கும் சொற்பபேதம் வருகிறதாகத் தெரிகிறதேயொழிய மற்றவர்கள் முறையைப் போல அவ்வளவு பெருத்த வித்தியாசமில்லை. Mr. Barve சொல்லுகிற 204 உள்ள 17/18 என்கிற ஸ்வரத்தை 25/27 என்ற ஸ்வரத்துக்குப் பதில் சேர்த்துக் கொள்வோமேயானால் சங்கீத பாரிஜாதக்காரர் சொல்லும் இப்பன்னிரண்டு ஸ்வரங்களும் வீணையில் காணும் ஸ்வரங்களாகவே ஏற்படும். சங்கீத பாரிஜாதக்காரர் ஷட்ஜம பஞ்சம முறைப்படி 22 சுருதிகள் வருகிறதென்று சொல்லுகிறார். அதோடு நாரதர் முறைப்படி சொல்லுகிறேன் என்று சொல்லி இம் முறையைச் சொல்வதானது நாம் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. அவர் காலத்தில் இவர் அளவில் கண்டபடி ஸ்வரங்களையுடைய ஒரு வாத்தியம் இருந்திருக்க வேண்டும். அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே இந்த அளவுகள் சொன்னதாக அறியலாம். இதைக் கொண்டும், நாரதர் முறைப்படிச் சொல்லுகிறேன் என்று சொல்வதைக் கொண்டும், யாழ் ஆசிரியனாகிய நாரதர் என்று பூர்வதமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதைக் கொண்டும், நாரத வீணை என்று ஒரு வீணையிருந்திருப்பதைக் கொண்டும், நாரதீயம் அல்லது பஞ்சபாரதீயம் என்று இவர் பெயரால் ஒரு இசை நூலிருந்தாகச் சொல்வதைக் கொண்டும், இவர் பிரமபுத்திரர் என்று சொல்வதைக் கொண்டும், இவர் பெயரால் ஒரு சுருதி முறை இருந்திருக்க வேண்டும் அதுவே தற்காலத்தில் வழங்கிவரும் சுருதி முறையென்று நினைக்க இடமுண்டாகிறது. இப்படியெல்லாமிருந்தாலும், சுரஞானம் உள்ளவர்களுக்கு அளந்துசொல்லும் சுர நிர்ணயமானது முற்றிலும் ஒத்திருக்கமாட்டாதென்று நான் நினைக்கிறது தப்பாகாது. சுரஞானம் இல்லாதவர்களுக்குச் சற்று முன்பின்னாகச் சேர்த்துக் கொள்வதற்கு அனுகூலமாயிருப்பதற்கே இம்முறைகள் சொல்லப்பட்டன. இவற்றில் பழகிவரும் காலத்தில் சற்று சுரஞானம் உண்டானவுடன் சுரப் பொருத்தங்களின்படி சுருதி நிர்ணயித்துக் கொள்வார்களென்று உத்தேசித்தே, ஒரு உத்தேச முறை சொல்லப்பட்டது. இந்த உத்தேச முறைக்கும் சரியான முறைக்கும் மிகுந்த பேதமிருக்க மாட்டாதென்று நாம் அறிய வேண்டும். இம்முறையில் வரும் சுரஸ்தானங்களின் சொற்ப பேதங்களையும் அவைகளின் மற்றும் அம்சங்களையும் பின்வரும் அட்டவணைகளில் தெளிவாய்க் காணலாம்.
|