பக்கம் எண் :

473
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

இவர் சொல்லுகிறதாவது :-

"நுட்பமாய்க் கேட்கக்கூடிய காதுடையவர்களால் ஒரு ஸ்தாயியில் வரும் வெவ்வேறு சுரங்கள் 22 என்று பின் காட்டியிருக்கிறேன். இவைகள் ஒன்றன் பின் ஒன்றாக ராகம் பாடும்பொழுது சில சுரங்கள் இனிமையற்ற தாயிருப்பதினால் சிலதைத் தள்ளிவிடக்கூடியதாயிருக்கிறது. மீதியானவைகளில் வீணையின் மெட்டுகளில் வருகிறவைகள் போக மற்றவை தள்ளப்பட்டிருக்கின்றன. அடியில் வரும் அட்டவணையில் ஒத்துப்பார்ப்பதற்கு அனுகூலமாக 22 சுருதிகளும் அட்டவணையாகக் காட்டப்பட்டிருக்கிறது. வீணை மெட்டுகளில் வரும் சுரங்களின் பெயர்கள் சாதாரண வழக்கத்திலிருக்கும் பெயர்களோடு ஒத்திருக்கவில்லை. ஸப்த சுரங்களுக்கும் அவைகள் நிரவியிருந்தாலும், சாதாரணமாய் யாவரும் ஒப்புக் கொள்ளுகிற 12 அரை சுரங்களாகிய பிரகிருதி விக்ருதி சுரங்கள் தவிர, குமுத்வதி முதலிய சுரங்களுக்கு ஒத்ததாயில்லை."

மேற்கண்ட அட்டவணையைக் கவனிக்கையில் 22 சுருதிகளின் பெயர்களை 11வது கலத்தில் காண்போம். அவைகளுக்குச் சரியான இங்கிலீஷ் பெயர்களை 10வது கலத்தில் காணலாம். கோவிந்த தீக்ஷதர் அவர்கள் நூதனமாகப் பெயர் வைத்து அழைக்கும் ஸப்த சுரங்களையும் 8 வது கலத்தில் காண்போம். இது தவிர 22 சுருதிகளும் இன்னின்ன அளவில் அல்லது பின்னத்தில் வருகின்றனவென்று இங்கே சொல்லவில்லை. ஆகையினால் இதைப் பற்றி யாதொன்றும் சொல்ல இடமில்லை. மேலும் பிரகிருதி, விக்ருதி சுரங்களையும் விட்டுவிட்ட சுரங்களையும் பற்றிப் பலருடைய அபிப்பிராயம் பலவிதமாயிருப்பதினால் அவற்றைப் பற்றியும் நாம் ஒன்றும் சொல்லக்கூடவில்லை. பழைய நூலாசிரியர்கள் பலரும் பலவிதமாய்ச் சொல்லும் சுருதி ஸ்தானங்களின் பேதங்களை இதன் முன் 26, 27, 28, 29, 30, 31 வது அட்டவணைகளில் தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.

இவர் செய்திருக்கும் வேலைகள் யாவும் பிரகிருதி விக்ருதி சுரங்களின் சேர்க்கையால் உண்டாகும் 16 சுரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு செய்திருக்கிறார். இவைகள் ஒருவாறு தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களாயிருந்தாலும் அவைகளுக்கு அளவாவது கணக்காவது சொல்லாமல் விட்டு விடுகிறார்.

அதோடு கூட சுருதிகளை நிச்சயம் பண்ணும் சிக்குமுக்கலான இந்த விஷயத்தைப் பற்றி நாம் இப்போது தலையிடக் கூடாதென்றும் சுருதி விஷயங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு வீணையின் 12 மெட்டுகளே போதுமென்றும் சொல்லுகிறார். ஆகையினால் இவருடைய அபிப்பிராயம் 22 சுருதிகளைச் சார்ந்ததாயில்லையென்று எண்ணுகிறேன்.