பதினாறாவது.
மேல் நாட்டாரின் சங்கீத முறையில் வழங்கிவரும் என் ஹார்மானிக் ஸ்கேல் என்ற சுருதி முறை. மேல் நாட்டிலுள்ளவர்கள் சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களை 1, (1/2), (2/3). (3/4), (4/5), (5/6), (8/9), (15/16), (24/25) முதலிய அளவுகளுடன் கண்டுபிடிப்பதாக நாம் காண்போம். அவைகளைப் பின்வரும் அட்டவணையில் காணலாம். 19-வது வரியிலுள்ள 1/2, 11-வது வரியிலுள்ள 2/3, 8-வது வரியிலுள்ள 3/4, 7-வது வரியிலுள்ள 4/5, 6-வது வரியிலுள்ள 5/6 , 4-வது வரியிலுள்ள 8/9, 3-வது வரியிலுள்ள 9/10, 2-வது வரியிலுள்ள 15/16 போன்ற அளவுகளுடன் வருகிறது. இதில் ஷட்ஜம-பஞ்சமத்திற்கு 2/3 என்ற அளவும் வழங்கி வருகிறதைக் காண்கிறோம். இதிலுள்ள பெருபான்மையான சுரங்களே துவாவிம்சதி சுருதியில் வழங்கி வருகிறதென்று இதன் முன்னுள்ள ஒவ்வொருவரும் தங்கள் அட்டவணைகளில் கொடுக்கிறார்கள். இவைகளின் அளவு பேதங்களை 7-வது கலத்தில் சென்ட்ஸ்களாகக் காட்டியிருக்கிறோம். ஒவ்வொரு சுரத்திற்கும் இத்தனை சென்ட்ஸ்கள் வித்தியாசப்படுகின்றனவென்று அதில் தெளிவாய் அறியலாம். சுமார் ஐந்து வித்தியாசமான அளவுகளுடன் சுரங்கள் வருகிறதாகக் காண்போம். இது பஞ்சமம் 2/3 , மத்திமம் 3/4 என்று பைதாகோரஸ் இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டுபோன அளவினாலுண்டான பொய்த்தேரேயொழிய வேறில்லை. இதன்படி எவ்விதமான கானமும் இருக்கக் கூடியதில்லையென்று நான் நினைக்கிறேன். 1. இது பாரிஜாதக்காரரின் அபிப்பிராயத்தை ஒத்தது போல் இருந்தாலும் முற்றிலும் அதன்படியல்ல. 2. ஷட்ஜம-பஞ்சம முறையாய் சுரங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென்ற சங்கீத ரத்னாகரரின் கருத்துக்கு ஒத்ததுமல்ல. 3. ஷட்ஜம-பஞ்சமம் 2/3 என்ற அளவின்படி ஒரு ஸ்தாயி முடியும் வரை போகும் முறையை அனுசரித்ததுமல்ல. 4. சாரங்க தேவருடைய சரியான சுருதி அபிப்பிராயத்தைக் காட்டக் கூடியதுமல்ல. 5. சாரங்கரின் 22 சுருதிகளை இவைகள் தாம் என்று இதோடு இணைப்பது முற்றிலும் ஒவ்வாத காரியம். 6. ஒரு வேளை இந்துஸ்தானி கீதத்திற்குப் பொருந்தியிருக்குமோ, எப்படியோ?
|