ஓசையின் அளவில் படிப்படியாய் ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதம் உண்டாகாதபடியிருக்க வேண்டுமென்று சொல்லியிருக்க அதற்கு மாறாக ஒரு ஸ்தாயியின் தந்தியின் அளவை 22 சம பாகங்களாகப் பிரிக்க வேண்டுமென்று ஒருவர் பிரிக்கிறார். மற்றொருவர் ஒரு ஸ்தாயியின் தந்தியின் அளவில் சரிபாதி செய்து மத்திமமாக்கிக் கொண்டு அதன் கீழ் ரிஷபத்தின் மூன்று சுருதிகளும் காந்தாரத்தின் இரண்டு சுருதிகளும் மத்திமத்தின் நாலு சுருதிகளுமாக 9 சுருதிகளுக்கு 9 சமபாகம் செய்கிறார். அதற்கு மேலுள்ள ஒரு ஸ்தாயியின் பாதியை பஞ்சமம் 4, தைவதம் 3, காந்தாரம் 2, ஷட்ஜமம் 4 ஆகப் பதின்மூன்று சுருதிகளுக்குப் பதின்மூன்று சம பாகங்கள் செய்கிறார். மற்றொருவர் ரிஷப ஸ்தானத்திலும், அது போல தைவதத்திலும் நாலு சம பாகங்கள் செய்கிறார். இவர்களாவது சம பாகமென்று நினைத்துத் தந்தியின் நீளத்திலாவது சம பாகம் பிரித்தார்கள். ஆனால் ஓசையில் சமமாக வராதென்று அறியாமல் ஒரு பாகத்தை விட்டுவிட்டார்கள். ஆனால் மற்றவர்களோ ஓசையின் அளவில் சமமுடையதாயிருக்க வேண்டுமென்று தாங்களே சொல்லியும் அதை முற்றிலும் மறந்து தந்தியின் அளவிலாவது ஓசையின் அளவிலாவது ஒத்து வராத அளவுகளைக் கொடுத்து பின்ன எண்களினால் பெருக்கிச் சரிக்கட்டப் பார்த்து அனர்த்தம் பண்ணியிருக்கிறார்கள். அவர்களின் ஒழுங்கீனத்தை அங்கங்கே தெளிவாய் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இன்னும் வரும் கணக்குகளிலும் விபரமாய்த் தெரிந்து கொள்ள முக்கியமான அம்சங்களை அங்கங்கே தெரிவிப்பேன். எல்லா விஷயங்களிலும் மிகச் சிறப்புற்றதும் மிகுந்த தவ வலிமையுடையோரிருந்ததுமான இப்பரத கண்டத்தில் நம் முன்னோர் எழுதிய அபிப்பிராயங்களை முற்றிலும் விட்டு விட்டு அவற்றிற்கு மாறாகப் பல சூத்திரங்களைச் சொல்வதும் சில சூத்திரங்களின் அர்த்தத்தை மாற்றுவதும், நூதனமாய்ச் சில சூத்திரங்களைக் கற்பனை செய்து பழையவற்றில் நுழைப்பதும், என்ன விபரீதம்! அதிகமாய்ச் சொல்ல நான் வெட்கப்படுகிறேன். தபோசிரேஷ்டரான நம் முன்னோர்கள் யோகம், ஞானம், வாதம், வைத்தியம், சோதிடம், ஓவியம், கீதம், அஸ்திரப்பிரயோகம், மந்திரம், வசியம், அஞ்சனம் முதலிய கலைகள் ஒவ்வொன்றிலும் உள்ள முக்கிய ஆதாரத்தைத் தகுதியுள்ளவனுக்கு நேரில் உபதேசிப்பதற்காக விட்டு வைத்திருப்பதாக அந்தந்த நூலில் மிகவும் தெளிவாக அவர்களே சொல்லியிருக்கிறார்கள். சொல்லிய நூல்களின் விரிவைக் கண்டு மயக்கமுற்றவர்கள் அநேகர். இவை பொய்யென்று புலம்புவோரும் அநேகர். இவற்றின் இரகசியம் தெரிந்த உத்தமர்களை அனுசரித்து முகமுகமாய்த் தெரிந்து கொண்டவர்கள் மிகச் சிலர். "கண்டாக்கால் சொல்வாரோ கல்போலாம் நெஞ்சம்" என்றும் "சொல்லார்கள் உண்மைதனை யார்க்கானாலும் சொல்லுவார் அறிவில்லார் துஷ்டர்தானே"-என்றும் "காணாமல் புதைத்த சொல்லைக் கண்டுதேரே"-என்றும் "உதவிசெய்வோர் தங்களைப்போல் நூலுண்டாக்கி ஒளித்தாரே உள்கருவை"-என்றும் "குருமுகமாய்த் தொட்டுக்காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது"-என்றும் "எல்லார்கண் முன் நிற்கும் எடுத்துரைக்கும் குரு அருள் இல்லாமல் போனால் சொல்லாலும் வராது"-என்றும்
|