பக்கம் எண் :

482
சங்கீத ரத்னாகரர் துவாவிம்சதி சுருதி முறை.

ஜலத்தில் முதல் அலை கனமாயும் குறுகிய வட்டமுடையதாயும் போகப் போக ஜலத்தின் கனம் மெலிந்தும், அலையின் வட்டம் விரிந்ததாகவும் எப்படி ஏற்படுகிறதோ, அப்படிப் போலவே இதுவும் அமைகிறது. கண்ணின் ஒளி முக்கோண வடிவமாய்ச் செல்லுகையில், முக்கோண ஆரம்பத்தில் மிகத் தெளிவான பார்வையும் விரிந்த பாகத்தில் மெலிந்த பார்வையும் கிடைக்கிறது. ஆனால் குறைந்த இடத்தில் குறுகிய தோற்றமும் விரிந்த இடத்தில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குமுள்ள விசாலமான தோற்றமும் உண்டாகிறது எப்படியோ அப்படியே இதுவுமிருக்கிறது. இது போலவே இயற்கை அமைப்பில் உண்டாகிய புல், பூண்டு, செடி கொடிகளின் இலைகளும், புஷ்பங்களும், புஷ்பத்தின் இதழ்களும், வித்துக்களும், மரத்தின் உள் வளர்ச்சியும், ஜீவப்பிராணிகளின் வளர்ச்சியும், முத்து, பவளம், கற்கள், சிப்பி, பூமியின் உள்பாகம் முதலிய யாவும் ஓசையின் அலைகள் போலவே கிரமப்பட்ட வளர்ச்சியையுடையன வாயிருக்கின்றனவென்று சாஸ்திர ஆராய்ச்சியுள்ளோர் ஒப்புக் கொள்வார்கள். இப்படியே வானமும், பூமியும், அவைகளிலுள்ள யாவும் ஒற்றுமையான வளர்ச்சியும் பலமுமுடையனவாய் ஒன்றோடொன்று இசைந்து ஒன்றையொன்று தாங்கி தெய்வ வல்லமையை வெளிப்படுத்திக் கொண்டு நிற்கின்றன. ‘ஆதியிலே வார்த்தையிருந்தது. அவ்வார்த்தையினாலே உலகம் யாவும் உண்டாயிற்று. அவ்வார்த்தையே ஜீவனாக விளங்கிற்’
றென்று சத்திய வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது உண்மையென்று நாம் யாவரும் ஒப்புக் கொள்வோம். அவ்வுண்மையினின்றே நாத வேற்றுமைகளுண்டாகி அவை ஸப்த சுரங்களாய், பின் சுருதிகளாய், கீதமாய் வழங்கி வருகின்றன. இதில் நாதமும் ஒற்றுமையான ஒரு பிரமாணமுடையதாயிருக்க வேண்டும் என்றும் அப்படியில்லாதிருந்தால் இனிமை தராதென்றும் அறிவோம்.

இனிமைக்குக் காரணம் ஒற்றுமையே. நிறமானாலும், ஓசையானாலும், சுவையானாலும், குணமானாலும், வாசனையானாலும், பரிசமானாலும், அறிவானாலும் ஒன்றற்கொன்று ஒற்றுமையில்லாதிருக்குமானால் அவை முற்றிலும் யாவராலும் வெறுக்கப்படும். அறுசுவை பொருந்திய பதார்த்தமொன்றில் ஒரு சுவை கூடினாலும் குறைந்தாலும் சுவைப்படாது. அது நம் வீட்டின் அனுபோகத்திலேயே அறிவோம். அப்படியே வாசனை வஸ்துக்களிலும் ஒன்று கூடினாலும், குறைந்தாலும் முற்றிலும் கெடுதலாகும். அது போலவே நாதமும் ஓசையின் பொருத்தமும் ஓசை பிறக்கும் இடங்களின் அளவும் வித்தியாசப்பட்டுப் போனால், எப்படி இனிமையுண்டாகும்? ஒற்றுமையில்லாத அளவில் பிறக்கும் ஓசையும் ஒன்றற்கொன்று ஒற்றுமையற்று யாவருக்கும் அருவருப்பைத் தரும் அபசுரமாகுமேயல்லாமல் சுஸ்சுர மாகமாட்டாது. அபசுரங்களை அருவருக்கும் வித்துவசிரோமணிகள், இப்படி விபரீதமான அளவைக் காட்டுவது நியாயமென்று யார் ஒப்புக்கொள்வார்கள்? தந்தியின் அளவிலும் ஓசையின் அளவிலும் ஒன்றுபடாத எந்த முறையும் தப்பான முறையென்றே யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒன்று இரண்டு ஸ்தாயிகளில் மேல் போகக் கிரமப்படி ஓசையின் அளவும் ஒன்றிரண்டு போலப் பருத்து நிற்கிறதாகச் சொல்வதைக் கொண்டும், ஒன்றற்கொன்று படிப்படியாய் உயர்ந்தும் நடுவில் வேறு சுரம் உண்டாகாமலிருக்க வேண்டுமென்று சொன்னதைக் கொண்டும், நம் முன்னோர் இயற்கை அமைப்பின் ரகசியத்தைப் பூரணமாய்த் தெரிந்து கொண்டவர்கள் என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது. அவர் கருத்தை விட்டு வெவ்வேறு விதமான அளவை நாம் கொடுத்தாலும், அதன்படி நாம் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தாலும், அவரவர்கள் இஷ்டமென்றே நாம் விட்டுவிடலாம். ஆனால் சங்கீத ரத்னாகரரின் அபிப்பிராயம் இதுதானென்று சொல்வதை முற்றிலும் ஆக்ஷேப்பிக்கிறேன்.