பக்கம் எண் :

481
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

அடைகையில் நாலு சுருதியோடிருந்தும் கைசிக பஞ்சமம் என்று பேர் பெறும். இதுவும் ஒரு விக்ருதி. பஞ்சமம் ஒரு சுருதி குறைகையில் தைவதம் பஞ்சமத்தின் ஒரு சுருதியை வாங்கிக் கொண்டு நாலு சுருதியாகிறது. இதுவும் ஒரு விக்ருதி. அப்படியே ஷட்ஜமம் ஒரு சுருதி குறைகையில் ரிஷபம் நாலு சுருதி பெறுகிறது. இதுவும் ஒரு விக்ருதி.

                ஆகவே ஷட்ஜமத்தில் சுதம் அச்சுதம் ஆக    2
                நி ..... கைசிகம், காகலி என  ......   .....    ..... 2
                த ..... பஞ்சமத்தில் 1 சுருதி பெறும்பொழுது ...... 1
                ரி ...... ஷட்ஜமத்தில் "            ......       1
                ப ...... த்ரிசுருதி பஞ்சமம் கைசிக பஞ்சமம் ...... 2
                ம ...... சுதம், அச்சுதம் என  .......  .......  .......   2
                க ...... கைசிகம், காகலி என ........ .......  .......   2

ஆக விக்ருதிகள் 12. சுத்த சுரம் 7. ச-வில் ரி-யும், க-வில் ம-வும், ப-வில் த வும் ஆகிய மூன்று சுரங்கள்."

சுருதிகளைக் கண்டுபிடிப்பதற்குச் சாரங்க தேவர் சொல்லும் அபிப்பிராயம் இயற்கையின் அமைப்புத் தெரிந்த விற்பன்னர்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். அதில் எவ்வித சந்தேகமும் அவர்களுக்கு வராது. இந்தியாவில் சங்கீதத்திற்கு இது உன்னதமான ஒரு ஸ்தானம். எப்படி ஸ்தாயிகள் 1, 2, 4 ஆகப் போக வேண்டுமென்று சொன்னார்களோ, அப்படியே ஒரு ஸ்தாயியிலுள்ள சுரங்களும் ஒற்றுமையான அளவுடைய இடைவெளிகளுடையன வாயிருக்க வேண்டுமென்று கண்டிருக்கிறார்கள். எப்படியென்றால், 22 தந்தியுள்ள ஒரு வீணையை எடுத்துக்கொள். அதன் முதல் தந்தியில் உன்னால் கூடிய முதல் நாதத்தை ஆரம்ப சுரமாக வைத்துக்கொள். அதன் மேல் வரக்கூடிய நாதத்தை அடுத்த தந்தியில் வரும்படி செய். இவ்விரண்டிற்கும் நடுவில் வேறு நாதம் உண்டாகக் கூடியதாயிருக்க வேண்டாம். இப்படிப் படிப்படியாக 22 தந்திகளையும் சேர்த்துக் கொண்டு போகும்பொழுது ஒவ்வொன்றின் நாதம் படிப்படியாய் உயர்ந்து, அதாவது ஒன்றற்கொன்று தீவிரமாகி ஒரு ஸ்தாயி அமையும் என்பதே. இயற்கை அமைப்பிலுள்ள ஒரு பெரு வழக்கைப் பால்போலும் இலகுவான சொற்களில் எழுதி வைத்தார்; சொற்கள் இலகுவானாலும், அதற்கு கணித முறையையும் ஸ்தாயி முறையில் தெளிய வைத்தார். இப்படிச் சொன்ன சுருக்கத்தில் ரகசியமுமுண்டு. அவ்விரகசியம் தெரிந்தவருக்குத் தெரியட்டுமென்று விரிக்காமல் விட்டுவிட்டாரேயொழிய அவர் சொல்லாமல் விடவில்லை.

அமர்ந்த நீர்ப்பரப்பில் விழுந்த கல்லினால் உண்டாகும் அலைகள் படிப்படியாக மெலிந்தும் படிப்படியாக விரிந்தும் செல்வது எப்படியோ, அப்படியே ஓசையின் அலைகளுமிருக்கின்றன. ஒரு தந்தியில் ஓசைகள் மேல் போகப் போக அதிக தீவிரமாகிறது. ஆனால் அதன் ஸ்தானங்கள் தந்தியின் அளவில் மேல் போகப் போகக் குறுகிப் போகிறது என்பதை நாம் யாவரும் எவ்வித ஆக்ஷேபனையுமின்றி ஒப்புக்கொள்வோம். இதையே சாரங்க தேவர் ஒரு ஸ்தாயியிலிருந்து படிப்படியாய் மேல் போகும் ஸ்தாயிகள் 1, 2, 4 போல் உயர்ந்திருக்க வேண்டுமென்று சொன்னார். ஒன்றிலிருந்து இரண்டு வரை சுரங்கள் எப்படித் தீவிரமாகக் கிரமப்படி நின்றதோ அப்படியே அடுத்த ஸ்தாயியிலும் முன் கிரமத்துடன் இரண்டிலிருந்து நாலு வரை உயர்ந்து நிற்கிறது. ஆனால் தந்தியின் நீளத்தின் பாதியில் முதல் ஸ்தாயி முடியுமானால் அதன் மீதியான பாதியில், அதாவது, தந்தியின் நாலில் ஒன்றில் இரண்டாவது ஸ்தாயியும், எட்டில் ஒன்றில் மூன்றாவது ஸ்தாயியும், பதினாறில் ஒன்றில் நாலாவது ஸ்தாயியும் வரும் என்பதை அறிவோம். ஓசையின் அலைகளின் அளவும் தந்தியின் அளவும் தலைவாலாய் மாறி வருகின்றன.